நேருக்கு நேர் முதல் ரோலக்ஸ் வரை... திரைப்பயணத்தில் 25 ஆண்டுகளை நிறைவு செய்த சூர்யா!

நேருக்கு நேர் முதல் ரோலக்ஸ் வரை... திரைப்பயணத்தில் 25 ஆண்டுகளை நிறைவு செய்த சூர்யா!

தமிழ்த் திரையுலகின் முன்னணி கதாநாயகர்களில் ஒருவரான சூர்யா தனது திரைப்பயணத்தில் 25 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார்.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சூர்யா, திரைப்படங்கள் மட்டுமின்று பொதுசேவையிலும் மக்கள் மனதில் இடம்பிடித்தவர். இவரின் அகரம் அறக்கட்டளை மூலமாக எண்ணற்ற ஏழை, எளிய மாணவர்கள் கல்வி பயில உதவி வருகிறார். அவ்வப்போது மக்கள் சந்திக்கும் பிரச்சினைகளுக்கும் இவர் குரல் கொடுப்பது வைரலாகும்.

நடிகர் சிவக்குமாரின் மகனான சூர்யா ‘நேருக்கு நேர்’ என்ற படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். வசந்த் இயக்கத்தில் இந்தப் படம் கடந்த 1997ம் ஆண்டில் செப்டம்பர் 6ம் தேதி வெளியானது. இந்தப் படத்தில் விஜய், சிம்ரன், கௌசல்யா என முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருந்தனர். இந்த படம் வெற்றியைப் பெற்றாலும் அதனைத் தொடர்ந்து இவர் நடித்த ‘ காதலே நிம்மதி’, ‘சந்திப்போமா’, ‘பெரியண்ணா’, ‘பூவெல்லாம் கேட்டுப்பார்’, ‘உயிரிலே கலந்தது’ போன்ற படங்கள் தோல்வியை சந்தித்தது.

2001ம் ஆண்டில் வெளியான ‘பிரண்ட்ஸ்’ படம் நல்ல வரவேற்பைப் பெற்றாலும், சூர்யாவை அனைவரிடம் கொண்டு சேர்த்தது அதே ஆண்டில் பாலா இயக்கத்தில் வெளியான ‘நந்தா’ படம் தான். அதனைத் தொடர்ந்து இவர் நடித்த ‘உன்னை நினைத்து’, ‘மௌனம் பேசியதே’, ‘காக்க காக்க’, ‘பிதாமகன்’ உள்ளிட்ட படங்கள் வெற்றியைப் பெற்று இவரை முன்னணி நாயகனாக்கியது. அதன்பிறகு இவர் நடிப்பில் வெளியான ‘கஜினி’, ‘வாரணம் ஆயிரம்’, ‘அயன்’, ‘சிங்கம்’ போன்ற படங்கள் சூப்பர் ஹிட்டானது. பிறகு இவரின் சிலப் படங்கள் தோல்வியைத் தழுவினாலும், கடந்த சில ஆண்டுகளில் இவர் நடிப்பில் வெளியான ‘சூரரைப்போற்று’, ‘ஜெய்பீம்’, ‘விக்ரம்’ போன்ற படங்கள் வெற்றி பெற்றுள்ளது. ‘சூரரைப் போற்று’ படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகருக்கான தேசிய விருதும் இவருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

இவர் நடிப்பில் அடுத்தததாக பாலா இயக்கத்தில் ‘வணங்கான்’, வெற்றிமாறன் இயக்கத்தில் ‘வாடிவாசல்’, சிறுத்தை சிவாவுடனான படம், ‘விக்ரம்’ இரண்டாம் பாகம் ஆகியவை வெளியாகவுள்ளன.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in