வட்டமிடும் கழுகு...பற்றியெரியும் காடு: வெளியானது ‘சூர்யா 42’ மோஷன் போஸ்டர்!

வட்டமிடும் கழுகு...பற்றியெரியும் காடு: வெளியானது ‘சூர்யா 42’ மோஷன் போஸ்டர்!

சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடிக்கும் ‘சூர்யா 42’ படத்தின் போஸ்டர் இன்று வெளியாகியுள்ளது.

இன்று வெளியாகியுள்ள 'சூர்யா 42’ மோஷன் போஸ்டரில், தொடக்கத்தில் வானில் ஒரு கழுகு வட்டமிடுகிறது. போர்க்களமானது ஆங்காங்கே தீப்பிடித்து எரிகிறது. திரையில் அரத்தர், வெண்காட்டார், மண்டாங்கர், முக்கட்டார், பெருமனத்தார் என்ற பெயர்களும் அதற்கு பின்னால் போர்ப்படைகளும் தோன்றுகிறது. கடைசியாக நெருப்பை வட்டமிட்ட கழுகு, போர் உடையில் முதுகில் வேல்,கையில் கோடாரியுடன் நிற்கும் நாயகனின் தோள்மீது அமர்கிறது. மேலும் இப்படம் 3டி தொழில் நுட்பத்தில், 10 மொழிகளில் தயாராகிறது எனவும் போஸ்டரில் அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து அஜித்குமாருடன் பணிபுரிந்த சிவா, கடைசியாக நடிகர் ரஜினியுடன் ‘அண்ணாத்த’ படத்தை இயக்கினார். இவர் தற்போது சூர்யாவின் 42-வது படத்தை இயக்கி வருகிறார். தற்காலிகமாக ‘சூர்யா 42’ என பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தின் பூஜை கடந்த மாதம் தொடங்கப்பட்டு முதல் கட்ட படப்பிடிப்பு முடிவடைந்துள்ளது. இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தொடங்க இருக்கும் நிலையில், இன்று காலை 10 மணிக்கு படத்தின் மோஷன் போஸ்டர் வெளியானது.

தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கும் இப்படத்தில் திஷா பட்டானி, யோகிபாபு, ரெடின் கிங்க்ஸ்லே, கோவை சரளா உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். முதல் கட்டபடப்பிடிப்பு சென்னையில் நடந்த நிலையில் இரண்டாம் கட்டபடப்பிடிப்பு கோவாவில் இந்த மாதம் 13-ம் தேதி தொடங்க இருக்கிறது. படத்தை யுவி கிரியேஷன்ஸ் மற்றும் ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் ஆகியவை இணைந்து தயாரிக்கிறது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in