என் அப்பா இறப்பில் இருந்து ஆரம்பித்தது 'சூரரைப்போற்று’ : தேசிய விருது பெற்ற இயக்குநர் சுதா கொங்கரா நெகிழ்ச்சி

என் அப்பா இறப்பில் இருந்து ஆரம்பித்தது 'சூரரைப்போற்று’ :  தேசிய விருது பெற்ற  இயக்குநர் சுதா கொங்கரா நெகிழ்ச்சி

இயக்குநர் சுதா கொங்கரா ‘சூரரைப்போற்று’ படத்திற்கு தேசிய விருது கிடைத்ததை அடுத்து அதற்கான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டன. அதில், சுதா கொங்கரா இயக்கத்தில் கடந்த 2020-ல் வெளியான ‘சூரரைப்போற்று’ திரைப்படம் சிறந்த நடிகர், சிறந்த நடிகை, பின்னணி இசை, கதை, திரைக்கதை என ஐந்து பிரிவுகளில் தேசிய விருதுகளை வென்று கவனத்தைக் குவித்தது. இதனையடுத்து படத்தின் இயக்குநரான சுதா கொங்கரா இதற்கு நன்றி தெரிவித்து தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவு ஒன்றைப் பகிர்ந்துள்ளார்.

அதில் அவர் கூறி இருப்பதாவது, " என் அப்பா இறந்த போது தான் இந்த படத்தை தொடங்கி இருந்தேன். என் அப்பாவின் கடைசி முகம் எனக்கு நினைவிருக்கிறது. நான் கதவருகில் நின்றிருந்த போது, அவர் என்னை அழைத்து பேசினார். இந்த ஒரு காட்சியை நான் ‘சூரரைப்போற்று’ படத்திலும் இணைத்திருந்தேன். ஒரு ஃபிலிம் மேக்கராக நான் நினைப்பது என்னவென்றால் நம்மில் பெரும்பாலானோர், இப்படி நம் வாழ்க்கை தருணங்களை படமாக்குவதில் பேராசை கொண்டவர்களாக இருக்கிறோம்.

‘சூரரைப்போற்று’ படத்தில் இது போல பல தருணங்களை நான் வைத்துள்ளேன். இதற்காக என் தந்தைக்கு நன்றி. எனக்கு இப்போதுள்ள ஒரே ஒரு கவலை என்னவென்றால், இந்த படத்திற்காக நான் விருது வாங்குவதைப் பார்க்க என் தந்தை இல்லை என்பது தான். என் குரு மணிரத்னத்திற்கு நன்றி. அவர் எனக்குச் சொல்லி கொடுத்தது தான் எல்லாம். அவர் இல்லாமல் நான் ஜூரோ. கேப்டன் கோபிநாத் மற்றும் சூர்யாவிற்கு நன்றி. ஒருவர் என்னை நம்பி அவரது வாழ்க்கை கதையைக் கொடுத்தார். மற்றொருவர் அவராகவே நடித்தார்" என கூறியுள்ள சுதா, படத்தில் நடித்துள்ள மற்ற நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள், தன்னுடைய சோர்வான சமயங்களில் உடனிருந்த குடும்ப உறுப்பினர்கள், உதவி இயக்குநர்கள் மற்றும் மாகவி பாரதியாரின் ‘சூரரைப்போற்று’ வசனம் ஆகியவற்றிற்கும் தனது நன்றியைத் தெரிவித்துள்ளார்.

"இவர்கள் எல்லாரையும் விட ரசிகர்களாகிய உங்களுக்கு மிக பெரிய நன்றி. இரண்டு வருடங்கள் கழித்து திரைப்படம் திரையரங்குகளில் வெளியான போதும் கத்தி, அழுது, சந்தோஷப்பட்டு இந்த படத்தை கொண்டாடி இருந்தீர்கள். நீங்கள் தான் என்னை உயிர்ப்புடன் வைத்து அடுத்தடுத்து என்னை இயங்க வைத்து கொண்டு இருக்கிறீர்கள். நீங்கள் தான் என் தெய்வம்.

இறுதியாக என் இயக்குநர்கள் எல்லாருக்கும் என்னுடைய மகிழ்ச்சி. நீங்கள் போராடுகிறீர்கள். ஆனாலும் நீங்கள் விடாமுயற்சியுடன் அனைத்து முரண்பாடுகளுக்கும் எதிராக உருவாக்குகிறீர்கள். நீங்கள் விரும்பும் விதத்தில், நீங்கள் விரும்பும் போது மற்றும் நீங்கள் விரும்பும் நபர்களுடன் நீங்கள் திரைப்படங்களை உருவாக்குகிறீர்கள். இது இனி வரும் தலைமுறையினருக்கும் ஒரு முன்னுதாரணம். எல்லாருக்கும் என்னுடைய அன்பும் நன்றியும்’ என கூறியுள்ளார் சுதா கொங்கரா.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in