பாலியல் வழக்கில் நடிகரின் முன் ஜாமீனுக்கு எதிரான மனு: உச்ச நீதிமன்றத்தில் நாளை விசாரணை

பாலியல் வழக்கில் நடிகரின் முன் ஜாமீனுக்கு எதிரான மனு: உச்ச நீதிமன்றத்தில் நாளை  விசாரணை

பாலியல் வன்கொடுமை வழக்கில் நடிகருக்கு வழங்கப்பட்டுள்ள முன் ஜாமீனை ரத்து செய்யக் கோரிய மனுக்கள் மீதான விசாரணை, உச்ச நீதிமன்றத்தில் நாளை வருகிறது.

மலையாள நடிகரும், தயாரிப்பாளருமான விஜய் பாபு மீது, இளம் நடிகை ஒருவர், கடந்த ஏப்ரல் 22-ம் தேதி கொச்சி போலீஸில் பாலியல் வன்கொடுமை புகார் கொடுத்தார். இதையடுத்து ஃபேஸ்புக் லைவில் தோன்றிய விஜய் பாபு, நடிகையின் பெயரை வெளிப்படுத்தினார். இது பரபரப்பானது. இதனால், விஜய் பாபு மீது மற்றொரு வழக்கை போலீஸார் பதிவு செய்தனர். இது தொடர்பான விசாரணைக்கு ஆஜராகுமாறு அவருக்கு சம்மன் அனுப்பியதும் அவர் வெளிநாட்டுக்குத் தப்பியோடினார்.

இதற்கிடையே, தனக்கு முன் ஜாமீன் கேட்டு கேரள உயர்நீதிமன்றத்தில் அவர் மனு தாக்கல் செய்தார். மே 31-ம் தேதி நிபந்தனைகளுடன் அவருக்கு முன்ஜாமீன் வழங்கப்பட்டது. பின்னர் கொச்சி திரும்பினார். அவரிடம் போலீஸார் விசாரணை நடத்தி வந்த நிலையில், புகாரை வாபஸ் வாங்குவதற்கு நடிகர் தரப்பில் இருந்து ரூ.1 கோடி வரை பேரம் பேசப்பட்டதாகப் பாதிக்கப்பட்ட நடிகை புகார் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், விஜய் பாபுவுக்கு வழங்கப்பட்ட முன் ஜாமீனை ரத்து செய்ய வேண்டும் என்று கேரள அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. பாதிக்கப்பட்ட நடிகை சார்பிலும் உச்ச நீதிமன்றத்தில் இதே கோரிக்கைக்காக மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த மனுவில் வெளிநாடு தப்பியோடிய விஜய் பாபு, முன் ஜாமீன் கிடைத்த பிறகே இந்தியா திரும்பியுள்ளார். இதன் மூலம் சட்டத்தின் ஆட்சிக்கு அவர் சவால் விட்டுள்ளார் என்றும் முன் ஜாமீனை தொடர அனுமதித்தால் அவர், சாட்சியங்களை அழித்து சாட்சிகள் மீது ஆதிக்கம் செலுத்தலாம் என்றும் தனது மனுவில் தெரிவித்துள்ளார்.

இந்த மனுக்கள் மீதான விசாரணை, நாளை நடைபெற இருக்கிறது. நீதிபதிகள் இந்திரா பானர்ஜி, கே.மகேஷ்வரி தலைமையிலான விடுமுறை கால அமர்வின் முன், விசாரணை நடைபெற இருக்கிறது. நடிகர் விஜய் பாபுவின் முன் ஜாமீன் தொடருமா, ரத்து செய்யப்படுமா என்பது நாளை தெரியவரும்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in