நடிகர் ஜீவா நடிப்பில் காதலும் காமெடியும் கலந்து செய்த திரைப்படங்கள், வணிக ரீதியிலான வெற்றியுடன் ரசிகர் மத்தியிலும் வரவேற்பு பெற்றவை. அதே பாணியில், மற்றுமொரு படைப்பாக ‘வரலாறு முக்கியம்’ திரைப்படத்தின் மூலம் விரைவில் திரையில் பிரவேசிக்க இருக்கிறார் ஜீவா.
ஜீவாவின் பிறந்தநாளை முன்னிட்டு அவர் தோன்றும் வரலாறு முக்கியம் திரைபடத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியிடப்பட்டிருக்கிறது.
ஆக்ஷன் மற்றும் சீரியசான படைப்புகளில் ஜீவா நடித்தபோதும், சிவா மனசுல சக்தி போன்ற ரோம்-காம் திரைப்படங்களே அவரை ரசிகர் மத்தியில் கொண்டுபோய் சேர்த்திருக்கின்றன. சற்று இடைவெளிக்குப் பின்னர் வரலாறு முக்கியம் மூலம், அதே வழிக்கு திரும்பியிருக்கிறார் நடிகர் ஜீவா.
குடும்ப நிறுவனமான சூப்பர் குட் ஃபிலிம்ஸ் சார்பில் தந்தை ஆர்.பி.சௌத்ரி தயாரிக்க அறிமுக இயக்குநர் சந்தோஷ் ராஜன் திரைப்படத்தை இயக்கி உள்ளார். சிவப்பு மஞ்சள் பச்சை திரைப்படத்தில் கவனம் ஈர்த்த காஷ்மீரா பர்தேஷி, இதில் கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் கே.எஸ்.ரவிக்குமார், விடிவி.கணேஷ், சரண்யா பொன்வண்ணன் ஆகியோருடன் மலையாள தேசத்திலிருந்து சித்திக் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் தோன்றுகின்றனர். இசையும் மலையாளத்திலிருந்தே இறக்குமதியான வகையில், ஜிமிக்கி கம்மல் பாடல் புகழ் ஷான் ரஹ்மான் இசையமைத்திருக்கிறார்.
தமிழகத்தின் சென்னை, கோவை ஆகியவற்றோடு ஹைதராபாத் மற்றும் கேரளாவின் பிரதான இடங்களிலும் தொடர்ந்த படப்பிடிப்பு அண்மையில் நிறைவடைந்தது. போஸ்ட் புரடக்ஷன் பணிகளில் மும்முரமாக இருக்கும் படக்குழு, கரோனா பரவலைப் பொறுத்து டிரைலர், திரைவெளியீடு உள்ளிட்ட முன்னறிவுப்புகளை தீர்மானிக்க இருக்கிறது.
சூப்பர் குட் பிலிம்ஸின் வரலாறு படைத்த திரைப்படங்களின் வரிசையில் ஜீவாவின் வரலாறு முக்கியம் திரைப்படமும் சேருமா?