பயந்த கண்கள்; வெள்ளந்திக் குரல்: சுலக்‌ஷணா எனும் யதார்த்த நடிகை!

நடிகை சுலக்‌ஷணா பிறந்தநாள் சிறப்புப் பகிர்வு
'தூறல் நின்னு போச்சு’ சுலக்‌ஷணா
'தூறல் நின்னு போச்சு’ சுலக்‌ஷணா

முகத்தில் கொஞ்சம் மெச்சூரிட்டியும் குரலில் குழந்தைத்தனமும் கொண்டிருப்பது வித்தியாசமானதொரு இணைப்புதான். இந்த இணைப்பின் மூலமாகத்தான் அவருக்கும் ரசிகர்களுக்குமான பந்தம் பின்னிப்பிணைந்து வளர்ந்தது. குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, பின்னர் நாயகியாக நடிக்கத் தொடங்கிய அந்த நடிகை, இன்னமும் தன் நடிப்பால் அசத்திக்கொண்டிருக்கிறார் என்பதே பெருஞ்சாதனைதான். நடிகை சுலக்‌ஷணாவைச் சொல்லும்போது இத்தகைய சாதனையாளராகத்தான் பார்க்க வேண்டியிருக்கிறது.

ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த சுலக்‌ஷணா, தெலுங்கில்தான் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான கமல், வாலிபத்தில் கே.பாலசந்தரால் ‘அரங்கேற்றம்’ படத்தின் மூலம் அடுத்த ரவுண்டுக்கு வந்தார். சுலக்‌ஷணாவுக்கும் இப்படியொரு ஒற்றுமையும் வேற்றுமையும் உண்டு. ‘காவியத்தலைவி’ படத்தில் குழந்தையாக நடிக்க வைத்த கே.பாலசந்தர், பின்னாளில் அப்படியொரு கேரக்டரை ‘சிந்துபைரவி’யில் வழங்கி அவரின் திரை வாழ்வின் மகுடத்தில் மயிலிறகு சூட்டினார்.

1980-ல், தெலுங்கில் ’சுபோதையம்’ எனும் படத்தில் நாயகியாக அறிமுகமானார் சுலக்‌ஷணா. இயற்பெயர் ஸ்ரீதேவி என்றிருக்க, ஏற்கெனவே இந்தியாவையே கலக்கிய ஸ்ரீதேவி இருக்கும்போது, பெயர்க் குழப்பம் வருமோ என சுலக்‌ஷணா எனப் பெயர் சூட்டப்பட்டது. ‘ஒரே ஜீவன் ஒன்றே உள்ளம் வாராய் கண்ணே’ என்று நம்மூர் ‘நீயா’வில் பாம்பாக நடித்த சந்திரமோகன்தான், சுலக்‌ஷணாவின் முதல் நாயகன். அதன் பின்னர் தெலுங்கில் படங்கள் வந்தன.

தமிழ் சினிமாவின் பக்கம் வந்தார் சுலக்‌ஷணா. முதல் படத்திலேயே நம் உள்ளம் கவர்ந்தார்.

அந்தக் குண்டு முகமும், கண்களில் எந்நேரமும் குடியிருக்கும் பயந்தாங்கொள்ளித்தனமும் வெகுளித்தனமும் என நம்மை மிக எளிதாக ஈர்த்தார். கே.பாக்யராஜின் ‘தூறல் நின்னு போச்சு’ படத்தில், ‘என்னைப் பாக்க வர்ற முத மாப்பிள்ளைக்கே என்னைப் பிடிச்சிப்போயிடணும் பிள்ளையாரப்பா’ என்று பிரார்த்தனை செய்துவிட்டு, கண்களை மூடியபடி, மண் தரையில் ‘பிள்ளையாரப்பா பிள்ளையாரப்பா பிள்ளையாரப்பா...’ என்று வட்டம் போட, அந்த வட்டம் சரியாக இணைந்துகொள்ள, மகிழ்ச்சியுடனும் குதூகலத்துடனும் வருகிற மாப்பிள்ளையே நமக்கு செட்டாகிவிடுவார் என்று முகம் முழுக்க சந்தோஷத்தையும் நிம்மதியையும் படரவிடுகிற அந்த சுலக்‌ஷணாவின் அறிமுகத்திலேயே நமக்கு அவரைப் பிடித்துப்போனது.

‘தூறல் நின்னு போச்சு’ படத்தின் மங்கலமாகவே நமக்குத் தெரிந்த சுலக்‌ஷணா, அத்தனை இயல்பாக நடித்து அசத்தினார். ‘காபி ஆறுது எடுத்துக்கோங்க, காபி ஆறுது எடுத்துக்கோங்க’ என்று அழுதுகொண்டே, பதற்றத்துடன் சொல்லி, நம்மையும் பதறடித்து, ‘சரி நாங்க எடுத்துக்கறோம்’ என்று் திரையை நோக்கி, நம் கையை நீட்டச் செய்து ‘அப்ளாஸ்’ அள்ளியிருப்பார்.

‘தூறல் நின்னுபோச்சு’ தந்த அறிமுக வெற்றியே அடுத்தடுத்த கட்டத்துக்கு சுலக்‌ஷணாவை அழைத்துச் சென்றது.

பெண் பார்த்து சம்மதம் சொன்ன பிறகு, பாக்யராஜ் தனிமையில் சந்திக்க வருவதை பயத்துடன் எதிர்கொள்வதும், வரதட்சணைப் பேச்சுவார்த்தையால் திருமணம் நடக்காது எனும் நிலையில் குமைந்துபோவதும், ஒருகட்டத்தில் ஊரைவிட்டு ஓடிப்போய்விடலாம் எனும் பாக்யராஜின் முடிவுக்குச் சம்மதம் தெரிவித்து, ஊர் எல்லையில் காத்திருப்பதும் பாக்யராஜ் வராத நிலையில் கலங்குவதும் பிறகு காலுக்கு அவரே சூடுபோட்டுக்கொள்கிற விதமாக, கொள்ளிக்கட்டையில் கால்வைத்துக் கதறுவதும் என ஒவ்வொரு காட்சியிலும் சுலக்‌ஷணாவின் நடிப்பு, நம்மை ஈர்த்துக்கொண்டே இருக்கும்.

இதையடுத்து, வரிசையாகப் படங்கள் வந்தன. ரஜினியுடன் மாதவி ஜோடியாக நடித்தாலும் ‘தம்பிக்கு எந்த ஊரு’ படத்தில் மறக்க முடியாத கதாபாத்திரத்தில், இரண்டாவது நாயகியாக நடித்தார். ஏவி.எம்மின் ‘தூங்காதே தம்பி தூங்காதே’ படத்தில் கமலுக்கு ஜோடியாக (இன்னொரு கமலுக்கு ராதா ஜோடி) நடித்தார். ஒவ்வொரு படத்திலும் தன் திறமையை வெளிப்படுத்திக் கொண்டே இருந்தார்.

மேஜர் சுந்தர்ராஜன் இயக்கிய ‘இன்று நீ நாளை நான்’ படத்தில் சிவகுமாருடன் அற்புதமான கதாபாத்திரத்தைத் தாங்கி நடித்தார். லட்சுமியின் அசுரத்தனமான நடிப்பு ஆளுமை இருந்தும் கூட, சுலக்‌ஷணாவின் இயல்பான நடிப்பால் கலங்கடித்தார்.

மணிவண்ணனின் ‘குவா குவா வாத்துகள்’ படத்தில் அப்பாவி ஜோடியாக சிவகுமாரும் சுலக்‌ஷணாவும் சேர்ந்து செய்யும் அலப்பறைகள், தியேட்டரையே அதிரவைத்தன. எண்பதுகளின் மத்தியில் அறிமுகமான சுலக்‌ஷணா, அப்போதைய இயக்குநர்களின் சாய்ஸாக இருந்தார். அதேசமயத்தில், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என அங்கேயும் புகுந்து புறப்பட்டார். எந்தக் கதாபாத்திரமாக இருந்தாலும் அதை உள்வாங்கி, கிரகித்து நடிப்பார் எனப் பேரெடுத்தார்.

இயக்குநர் சிகரம் கே.பாலசந்தரும் இசைஞானி இளையராஜாவும் இணைந்த முதல் படம் ‘சிந்துபைரவி’. ‘சிந்து’வாக சுஹாசினி ஒருபக்கம்... ஜேகேபி-யாக சிவகுமார் ஒருபக்கம். நடுவே, ‘பைரவி’யாக நடித்து, தன் வெகுளித்தனப் பேச்சாலும் வெள்ளந்தி மனதாலும் நடிப்பில் ஸ்கோர் செய்து அசத்தினார். சுஹாசினியை முதன்முதலில் சந்திக்கும் காட்சியில், சுஹாசினியின் அத்துமீறலான சேட்டைகளும் பேச்சும் சுலக்‌ஷணாவுக்கு உள்ளே கோபமூட்டும். அதற்கு ஒரு ஷாட் வைத்திருப்பார் பாலசந்தர். மனதுக்குள் ‘பொளேர் பொளேர்’ என சுஹாசினியை அடிக்கத் தோன்றும் சுலக்‌ஷணாவுக்கு. அதைக் கற்பனை செய்து பார்ப்பார். அந்தக் காட்சி முடிந்ததும், நிஜத்தில், அப்படியே மறந்துவிட்டு, சுஹாசினியை தன் தோளில் சாய்த்துக் கொள்வார். இந்த இரண்டையும் வேறுபாடுகள் காட்டி நடிப்பில் ஜொலித்திருப்பார் சுலக்‌ஷணா.

இதன் பின்னர் திருமணம், குழந்தைகள், உறவுச்சிக்கல்கள் என்று வந்தன. படங்களில் நடிக்கின்ற வாய்ப்பும் குறைந்தது. அடுத்தகட்டமாக, அக்கா, அண்ணி, அம்மா என கேரக்டர்கள் கிடைக்க, ‘எந்தக் கேரக்டராக இருந்தால் என்ன? நடிப்பு நடிப்புதானே’ என்று சோர்ந்து போய்விடாமல், கிடைக்கின்ற வாய்ப்புகளில் எல்லாம் சிறப்பாக ஜொலித்தார். போதாக்குறைக்கு, சின்னத்திரையிலும் வாய்ப்புகள் வந்தன. அதிலும் தான் ஏற்கும் கதாபாத்திரங்களுக்கு உயிர் கொடுத்து வருகிறார்.

1982-ல் வெளியான ‘தூறல் நின்னுபோச்சு’ மூலம் தமிழ்த் திரையுலகிற்கு வந்த சுலக்‌ஷணாவுக்கு இது தமிழ் சினிமாவில் 40-வது ஆண்டு. 1965 செப்டம்பர் 1-ம் தேதி பிறந்த சுலக்‌ஷணாவுக்கு, இன்று 57-வது பிறந்தநாள்.

இத்தனை வயதில் எத்தனை கதாபாத்திரங்களில் நடித்தாலும், அந்த கருகரு கண்களின் வழியே காட்டுகிற அப்பாவித்தனமும் வெள்ளந்தி குணமும் இன்னும் அப்படியே இளமை மாறாமல் இருக்கிறது. யதார்த்த நடிகையாக வலம் வரும் சுலக்‌ஷணாவை வாழ்த்துவோம்!

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in