அல்லு அர்ஜுனின் `புஷ்பா 2’ படத்தில் வெளிநாட்டு நடிகை?

அல்லு அர்ஜுனின் `புஷ்பா 2’ படத்தில் வெளிநாட்டு நடிகை?

'புஷ்பா' படத்தின் அடுத்த பாகத்தில் வெளிநாட்டு நடிகை ஒருவர் நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது.

அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியாகி வரவேற்பைப் பெற்ற படம், ’புஷ்பா’. சுகுமார் இயக்கிய இதில், ராஷ்மிகா மந்தனா ஸ்ரீவள்ளி என்ற கேரக்டரில் நடித்திருந்தார். மலையாள நடிகர் பஹத் ஃபாசில், கன்னட நடிகர் தனஞ்செயா, சுனில், அஜய் கோஷ், ராவ் ரமேஷ், மைம் கோபி உட்பட பலர் நடித்த இந்தப் படத்துக்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசை அமைத்திருந்தார். அவர் இசையில் பாடல்கள் சூப்பர் ஹிட்டாகின. நடிகை சமந்தா, ’ஊ சொல்றியா மாமா’ என்ற குத்துப்பாடலுக்கு ஆடியிருந்தார்.

மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரித்த இந்தப் படம், தெலுங்கு தவிர, தமிழ், இந்தி, மலையாளம், கன்னட மொழிகளி்லும் வெளியாகி வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்தின் அடுத்த பாகத்துக்கான வேலைகளைப் படக்குழு தொடங்கியுள்ளது. அடுத்த மாத இறுதி அல்லது ஆகஸ்ட் மாதம் படப்பிடிப்பு தொடங்க இருக்கிறது.

முதல் பாகம் வசூலில் மிரட்டியிருப்பதால் அடுத்தப் பாகத்தை இன்னும் பிரம்மாண்டமாக உருவாக்க உள்ளனர். புஷ்பா 2 கதை வெளிநாட்டுப் பின்னணியில் எடுக்கப்பட இருக்கிறது. செம்மரக் கடத்தல் தாதாவாக மாறும் புஷ்பா, வெளிநாடுகளில் தன் ஆதிக்கத்தை எப்படி செயல்படுத்துகிறார் என்பது போல கதை அமைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

இதற்காக வெளிநாட்டு காடுகளில் படப்பிடிப்பை நடத்த உள்ளனர். ’புஷ்பா’படத்தின் கிளைமாக்ஸில் ராஷ்மிகாவை, அல்லு அர்ஜுன் திருமணம் செய்வது போலவும் வனத்துறை அதிகாரி பஹத் பாசில், தனது அவமானத்துக்கு அல்லு அர்ஜுனை பழிவாங்க காத்திருப்பது போலவும் படம் முடிந்திருந்தது.

இந்நிலையில் இரண்டாம் பாகத்தின் கதை வெளிநாட்டிலும் நடக்க இருப்பதால் வெளிநாட்டு நடிகை ஒருவரை இன்னொரு ஹீரோயினாக நடிக்க வைக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. படத்தில் ராஷ்மிகா தவிர இன்னொரு நாயகியும் நடிக்க இருக்கிறார். பாலிவுட் நடிகை ஒருவர் ஒரு பாடலுக்கு ஆட இருக்கிறார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in