துணிவு, வாரிசு சிறப்புக்காட்சிகள் திடீர் ரத்து: தமிழக அரசு அதிரடி

துணிவு, வாரிசு சிறப்புக்காட்சிகள் திடீர் ரத்து: தமிழக அரசு அதிரடி

நடிகர் அஜித் நடித்துள்ள `துணிவு' மற்றும் நடிகர் விஜய் நடித்துள்ள 'வாரிசு' ஆகிய படங்களுக்கு அதிகாலை சிறப்பு காட்சிகளை ரத்து செய்து தமிழக அரசு அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.

அஜித்குமார் நடிப்பில் ஹெச்.வினோத் இயக்கத்தில் 'துணிவு' திரைப்படம் தயாராகியுள்ளது. இந்த படத்தில் மஞ்சுவாரியர், சமுத்திரக்கனி, ஜி.எம்.சுந்தர், மகாநதி சங்கர், ஜான் கொக்கன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். போனி கபூர் தயாரித்துள்ள இந்த படத்தின் தமிழ்நாடு வெளியீட்டு உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் பெற்றுள்ளது. இந்தப் படம் வரும் 11-ம் தேதி வெளியாக உள்ளது. இதேபோல் நடிகர் விஜய் நடிப்பில் வம்சி இயக்கத்தில் தயாராகியுள்ள ‘வாரிசு’ திரைப்படம் வரும் 11-ம் தேதி வெளியாகிறது.

இதனிடையே, இரண்டு நடிகர்களின் ரசிகர்களும் பெரிய பெரிய கட்அவுட்டுகளை வைத்து அதன் மீது பாலாபிஷேகம் செய்து வருகின்றனர். மேலும் தங்கள் தலைவரின் படம் வெற்றி பெற வேண்டி பாதயாத்திரை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் அண்மையில் விஜய் ரசிகர் மன்ற தலைவர் ஒருவர் 'வாரிசு' படம் சிறப்பு காட்சிகளுக்கான அனைத்து டிக்கெட்டுகளையும் வாங்கி சென்றதாகவும் அப்போது ரசிகர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டதாகவும் செய்தி வெளியாகி இருந்தது. இதையடுத்து விஜய் ரசிகர் மன்ற தலைவரின் காரை சக ரசிகர்கள் அடித்து உடைத்தனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. மேலும் இரண்டு ரசிகர்களும் போட்டிப்போட்டு போஸ்டர்களை ஒட்டி வருகின்றனர். இதனால் திரையரங்குகளில் கலவரம் ஏற்படலாம் என்று தகவல் வெளியாகி இருக்கிறது.

இதனிடையே, வரும் 13, 14, 15, 16 ஆகிய தேதிகளில் திரையரங்குகளில் துணிவு, வாரிசு படங்களுக்கு அதிகாலை சிறப்பு காட்சிகளுக்கு அனுமதி கிடையாது என்று தமிழக அரசு திடீரென அறிவித்து இருப்பது இரண்டு ரசிகர்களுக்கும் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது இது குறித்து அனைத்து மாவட்ட ஆட்சியருக்கும், வருவாய் இணை ஆணையர் அனுப்பி உள்ள சுற்றறிக்கையில், ஜனவரி 13, 14, 15 மற்றும் 16 ஆகிய தேதிகளில் அதிகாலை 4 மற்றும் 5 மணி காட்சிகளுக்கு அனுமதி அளிக்கக்கூடாது. திரையரங்கு நுழைவு வாயில்களில் பெரிய கட்அவுட் வைத்து பால் அபிஷேகம் செய்வதற்கு தடை விதிக்கப்பட வேண்டும். மேலும், கூடுதல் பார்க்கிங் கட்டணம் வசூலிக்கக்கூடாது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in