விஜய் அரசியல் விஜயம் எப்போது?

விஜய், விஜய்காந்தா அல்லது ரஜினிகாந்தா?
விஜய்
விஜய்

விஜய் அரசியலுக்கு வருவாரா? இப்படி ஒரு எதிர்பார்ப்பு விஜய் ரசிகர்களுக்கு அப்பாலான பொதுவெளியில், தற்போதைக்கு இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். ஆனால், தனது சினிமா பணிகளுக்கு ஊடாக விஜய் காட்டி வரும் அரசியல் ஆர்வமும், தனது மக்கள் இயக்கத்தை கட்டமைப்பதில் காட்டும் ஈடுபாடும் அரசியல் பார்வையாளர்கள் மத்தியில் ஆச்சரியம் தருபவை.

இந்த ஆயத்தங்களின் அடிப்படையில், விஜயின் நேரடி அரசியல் பிரவேசம் எதிர்வரும் 2024 மக்களவைத் தேர்தலா அல்லது 2026 சட்டப்பேரவை தேர்தலா என்ற எதிர்பார்ப்புகள், அவரது மக்கள் இயக்கத்தினர் மத்தியில் எகிறிக்கிடக்கின்றன.

விஜயை பொறுத்தளவில் அவரது அரசியல் பிரவேசம் அத்தனை சீக்கிரம் நடந்துவிடுமா? அதற்கான காரணங்கள் விஜயிடமும், விஜய்க்கு வெளியிலும் அதிகரித்திருக்கிறதா? விஜயின் அரசியல் ஆசையின் அடித்தளம் என்ன? அரசியல் பிரவேசத் தயங்கலில் இன்னொரு ரஜினி ஆகிறாரா அல்லது விஜய்காந்த் போல அதிரடி காட்ட இருக்கிறாரா? விஜய்க்கான வெற்றிடம் தமிழக அரசியலில் நிலவுகிறதா? விஜய் அரசியல் ஆர்வத்தின் மறைமுக நோக்கங்கள் என்ன? - இப்படி சில கேள்விகள் ரசிகர்கள் மற்றும் அரசியல் களத்தில் அலையடித்து வருகின்றன.

விஜய்
விஜய்

நடிகர்களின் ஆதாயமும் அரசியலும்

சினிமாவில் கோடி கோடியாய் வருமானம் பார்க்கும் நட்சத்திரங்கள், பெரும்பாலும் இரண்டு அடிப்படையான காரணங்களுக்காக அரசியலில் ஆர்வம் காட்டுகிறார்கள். முதலாவது, சம்பாதித்ததை பாதுகாப்பது அல்லது மேலதிகம் சேர்க்க விழைவது. இரண்டாவது, பணத்துக்கு அடுத்தபடியாக புகழின் அடுத்த படிக்கு ஆசைப்படுவது. இதற்கு அப்பால் மக்கள் சேவை என்பதெல்லாம், நடப்பு வாக்கரசியல் நிதர்சனத்தில் வாய்ப்பே இல்லாதது.

விஜயின் மார்கெட் நிலவரம், அவரது ஆண்டு வருமானம் சில நூறு கோடிகள் என்கிறது. இந்த வகையில் தனது சினிமா வாழ்க்கையின் உச்சத்தில் இருக்கிறார் விஜய். 1992-ல் ’நாளைய தீர்ப்பு’ வாயிலாக சினிமாவில் காலடி வைத்த விஜய், அங்கிருந்து தற்போதைய உச்சம் தொட 30 ஆண்டுகள் தீவிரமாக உழைத்திருக்கிறார். அப்படியான உயரத்தை சடுதியில் உதறி, தடாலடியாக அரசியலில் குதிக்க விரும்ப மாட்டார். ஆனால், சினிமாவில் இருந்தபடியே அரசியலுக்கான ஆயத்தங்களில் தற்போது போலவே தொடர்ந்து ஈடுபடுவார்.

’தலைவா’ விஜய்
’தலைவா’ விஜய்

விஜயை நிரண்டிய அரசியல் கட்சிகள்

இன்றைய தேதியில் தமிழக அரசியல் களத்தில் முன்நிற்கும், திமுக, அதிமுக, பாஜக என 3 கட்சிகளிடமும் விஜய் தனது திரைப்படங்களை முன்வைத்து மோதலை சந்தித்திருக்கிறார். ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது ’காவலன்’, ’தலைவா’ என அடுத்தடுத்த 2 படங்களை முன்வைத்து ஆளும்கட்சியுடன் மோதினார். ஆளும் தலைமையுடன் பேச்சுவார்த்தை நடத்திய பிறகே ‘காவலன்’ வெளியானது. தலைவா படத்தின் துணை தலைப்பான ’டைம் டு லீட்’ என்பதை நீக்கியதோடு, விஜய் பகிரங்க விளக்க வீடியோ வெளியிட்ட பின்னரே அந்த படமும் தமிழகத்தில் வெளியானது.

திமுக ஆதரவாளராக அறியப்பட்ட தந்தை எஸ்ஏசி வழியில் விஜயும் அடையாளம் காணப்பட்டாலும், ‘கத்தி’ படத்தை முன்வைத்து திமுகவினரிடம் சர்ச்சையில் சிக்கினார். ’இளைய தளபதி’ என்பது ’தளபதி‘ ஆனபோது தொடங்கி, அண்மை வெளியீடான ‘ வாரிசு’ ரிலீஸ் வரை அந்த உரசல் தொடர்ந்தது. திராவிட கட்சிகளைவிட விஜயை சீண்டியதில் பாஜக முந்தியதும் சுவாரசியமானது. 2003-ல் ’கீதை’ படத்தின் தலைப்புக்கு எதிராக இந்துத்துவ அமைப்புகள் நெருக்கடி தந்ததில், அது ’புதிய கீதை’யாக வெளியாகி விஜயின் தோல்விப் படங்களில் ஒன்றானது. பின்னர் ‘மெர்சல்’, ‘பிகில்’, ‘சர்க்கார்’ என பாஜகவின் ஜிஎஸ்டி, பணமதிப்பிழப்பு விவகாரங்களை வசனங்களில் விஜய் கிண்டியதில், பாஜகவினரின் கடுமையான நெருக்கடிகளை எதிர்கொண்டார். தனது பட வசனங்களுக்கு அப்பால், அவர் ’ஜோசப் விஜயா’க இருந்ததும் முக்கிய காரணமானது.

ஆழம் பார்த்த அரசியல்

2008-ல் இலங்கைத் தமிழர்களுக்காக உண்ணாவிரதம் இருந்ததே, விஜயின் முதல் பிரதான அரசியல் நகர்வாக அடையாளம் காணப்பட்டது. அதற்கு ரசிகர்கள் மத்தியில் எழுந்த வரவேற்பை அடுத்து, புதுக்கோட்டையில் வைத்து மக்கள் இயக்கத்துக்கான அறிவிப்பை வெளியிட்டார். ” நான் எதில் கால் வைத்தாலும் அதில் ஜெயிக்க வேண்டும் என்ற வெறியும் வேகமும் இருக்கும். இறங்குவதற்கு முன்னர் ஆழம் பார்ப்பது அவசியம். இப்போதுதான் தலைவர்களின் புத்தகங்களை படித்து வருகிறேன்” என்று வெளிப்படையாக பேசி ஈர்த்தார்.

இதற்கு அப்பால், அப்போது ராகுல் காந்தியை சந்தித்தது முதல் அண்மையில் தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் மற்றும் புதுச்சேரி முதல்வர் ரங்கசாமியுடனான சந்திப்பு வரை அரசியல்வாதிகளுடன் விஜய் ஊடாடியே வருகிறார். ஆனால் இவையனைத்தும், அவரது திரைப்படங்களின் வெளியீடு தொடர்பாகவே அமைந்திருக்கின்றன. ரஜினி காந்த் போன்றே திரைப்பட வெளியீடு தோறும் ரசிகர்கள் மத்தியில் அரசியல் ஆசையை விதைப்பதற்கு நிகராகவே, ரசிகர்களுடனான நேரடி சந்திப்பு முதல் ஆடியோ வெளியீட்டு விழாக்களில் குட்டிக்கதை சொல்வது வரை விஜய் அரங்கேற்றி வருகிறார்.

ரசிகர்களுடன் விஜய்
ரசிகர்களுடன் விஜய்

எல்லோரும் எம்ஜிஆர் ஆக முடியுமா

தமிழ் நாட்டில் சினிமாவிலிருந்து அரசியலுக்கு செல்லும் நட்சத்திரங்கள் பலருக்கும் எம்ஜிஆரே ஆதர்சம். ஆனாலும் அவர்கள் எவராலும் எம்ஜிஆர் ஆக முடியாதது பெரும் சோகம். கமல்ஹாசனை கவிழ்த்துப் போட்டதிலும், ரஜினி காந்தை கால்வைக்கவே தயங்கச் செய்ததிலும், இருபெரும் உச்ச நட்சத்திரங்களை தமிழக அரசியல் சூழல் அலற விட்டிருக்கிறது. மீறி சூடு பட்டவர்களில் சிவாஜி கணேசன் முதல் சரத் குமார் வரை நீளமான பட்டியல் உண்டு. விஜய் காந்த் போன்ற அரிதான உதாரணங்கள் தவிர்த்து, திரையிலிருந்து அரசியலுக்கு தாவ முயன்றவர்கள் அனைவரும் தோற்றே இருக்கிறார்கள்.

திரை மாயைகள் சுலபத்தில் உடைபட்ட, சகலமும் சமூக ஊடகங்களில் சந்தி சிரிக்கும் இக்காலத்தில், ஒருவேளை எம்ஜிஆரின் அரசியல் பிரவேசம் நடந்திருப்பினும் அவரின் எதிர்காலம் கேள்விக்குறியாகியும் இருக்கக்கூடும். அந்தளவுக்கு சினிமா மீதான கவர்ச்சி முதல், வாக்கரசியல் மீதான நம்பிக்கை வரை சகலமும் சாயம் போயிருக்கின்றன. நட்சத்திரங்களை கூட்டம் இழுப்பதற்கு மட்டுமே அரசியல் கட்சிகள் பயன்படுத்தத் தொடங்கியிருக்கும் காலத்தில், இன்னொரு எம்ஜிஆராக விஜயால் வளர்வது கடினமே. இந்த நிதர்சனத்தை உணர்ந்திருப்பதே, விஜயையும் தயங்கச் செய்து வருகிறது.

விஜய் இடும் அடித்தளம்

இவற்றையெல்லாம் உணர்ந்தே, தவிர்க்கவே இயலாத எதிர்கால அரசியல் நகர்வுக்கு திடமான அஸ்திவாரத்தை இப்போது கட்டமைத்து வருகிறார் விஜய். அதற்கான ஏற்பாடுகளே அண்மை வருடங்களாக சத்தமின்றி அரங்கேறி வருகின்றன. இதற்காக ரசிகர்களை விரும்பி சந்திப்பதும், நெருக்கம் பாவிப்பதுமான வாய்ப்புகளை அதிகரித்திருக்கிறார். ஒரு ரசிகனை தீவிர கட்சித் தொண்டனாக புடம் போடுவதற்கான பணிகளை மக்கள் இயக்கத்தில் தொடங்கியிருக்கிறார்கள். ரசிகர்கள் மத்தியில் விஜயை பெரும் பிம்பமாக கட்டமைப்பது, அவர்கள் மத்தியில் அரசியல் ஆசைகளை தூண்டுவது ஆகியவையும் இந்த வகைகளில் தொடர்கின்றன.

ஊரக உள்ளாட்சித் தேர்தலில் 169 இடங்களில் நின்று சுமார் 100 இடங்களை வென்றதில், விஜய் மக்கள் இயக்கத்தினர் பிரதான அரசியல் கட்சியனரை துணுக்குற செய்தனர். இத்தனைக்கும், தேர்தலில் நின்றவர்களுக்காக வெளிப்படையாக குரல் கொடுக்கவும் விஜய் மறுத்துவிட்டார். மக்கள் இயக்கம் பெயரையும், கொடியையும் மட்டுமே பயன்படுத்த அனுமதித்தார். இந்த அடிப்படையில், எதிர்வரும் 2024 மக்களவை மற்றும் 2026 சட்டப்பேரவை தேர்தல்களில் விஜயின் அரசியல் நிலைப்பாடு, அடுத்தகட்டமாக என்னவாக இருக்கும் என்பது பல தரப்பிலும் எதிர்பார்ப்பாக உள்ளது.

விஜய்
விஜய்

புதுச்சேரி மார்க்கமாக அரசியல் பயணம்

மக்களவை தேர்தல் என்பது பிரதமரை தீர்மானிக்கும் தேர்தல் என்பதால் விஜய் அடக்கி வாசிக்கவே அதிக வாய்ப்புண்டு. அடுத்து வரும் சட்டப்பேரவை தேர்தலில் அவர் வெளிப்பட சாத்தியம் அதிகம். ஆனால் அதிலும், உள்ளாட்சித் தேர்தல் பாணியில், தனது மக்கள் இயக்கத்தினரை ‘சுயமாக’ களமிறங்கச் செய்து ஆழம் பார்க்கவே செய்வார். இதற்கு அப்பால் ரசிகர் மன்றத் தலைவர் புஸ்ஸி ஆனந்த் இழுப்புக்கு உடன்பட்டு, புதுச்சேரியில் களமிறங்க அதிக வாய்ப்புகள் தென்படுகின்றன.

புதுவை ஆய்வக சோதனைகளின் வெற்றியைப் பொறுத்து, தமிழகத்தில் அவை பரிசோதிக்கப்படும். இல்லையென்றால் கமுக்கம் பாவிக்கப்படும். இவற்றின் மூலம் ஆதாயம் உண்டு; சேதாரம் குறைவு. மாறாக தடாலடியாக வாய்ஸ் கொடுத்து வருமான வரித்துறை விசாரணை உள்ளிட்ட சங்கடங்களை வரிந்துகொள்ள விஜய் தயாரில்லை. தனிப்பட்ட வகையிலும் கட்சி, அதற்கான கொள்கை ஆகியவற்றை வடிவமைப்பதிலும், தயாராகாத விஜய் அவசரப்பட்டால் அவரது சினிமா மற்றும் அரசியல் என இரண்டின் எதிர்காலமும் கேள்விக்குறியாக வாய்ப்புண்டு.

விஜய்
விஜய்

அதிகம் எதிர்பார்க்கும் அரசியல் வெற்றிடம்

தமிழக அரசியலில் அநேகர் எதிர்பார்க்கும் அரசியல் வெற்றிடத்தையே, விஜயும் எதிர்பார்த்து இலவு காத்திருப்பதாக கூறுகின்றனர். மேலும் ஸ்டாலினுக்குப் பின்னரான உதயநிதி உடனான போட்டியாக விஜயின் பிரவேசம் இருக்கும் என்றும் ஆருடம் சொல்கிறார்கள். இது ஒரு சுவாரசியமான சினிமாவுக்கு கதையாலாம். ஆனால் தகிக்கும் அரசியல் களம் என்பது எதிர்பாரா மாற்றங்களையும், சவால்களையும் உள்ளடக்கியது. எனவே விஜய் போன்றவர்கள் எதிர்பார்க்கும் காலம் கனிவது கடினமே. இது தவிர்த்து எதிர்பாரா திருப்பங்கள், விஜய்க்கான எதிர்ப்புகள் உள்ளிட்டவற்றால் வேண்டுமெனில் விஜய் வெடிப்பாக அரசியலுக்கு பிரவேசிக்கலாம்.

கடந்த 10 ஆண்டுகளாக தன்னுடைய ஒவ்வொரு படத்தின் வெளியீட்டுக்கும் ஏராளமான சவால்களை சந்தித்து வரும் விஜய், தவிர்க்க இயலாது அரசியலை நோக்கி நகரவே செய்கிறார். ஆனால், அவரது ரசிகர்களின் ஆர்வத்துக்கும், வேகத்துக்கும் ஈடுகொடுக்க முடியாது மெத்தனிக்கிறார். இயல்பில் கூச்ச சுபாவியாக இருப்பதும், கேமரா முன்பாக மட்டுமே அதிரடிப்பதும், ஆடியோ ரிலீஸ் குட்டிக்கதைகளை கூட ஒத்திகையின்றி பேச முடியாதவராக இருப்பதும், சொந்தக் காரணங்களுக்கு அப்பால் அரசியல் குறித்த அடிப்படை புரிதல் போதாதிருப்பதும் விஜய்க்கு அடிசறுக்கவே செய்யும்.

எனவே, விஜய் காந்த் பாணியில் ரசிகர்களை வைத்து அரசியல் பாதைக்கு அடியெடுக்கத் தயாராகும் அதே நேரத்தில், ரஜினி காந்த் போலவே தயங்கவும், தகுதியான காலத்துக்கு காத்திருக்கவும் செய்கிறார். விஜய்க்கான சினிமா வாய்ப்புகள் சரிவு காணும்போது, நடிகர்களின் எழுதப்படாத விதியாக அவர் நிச்சயம் அரசியலுக்கு வர வாய்ப்புண்டு. அதுவரை, ரசிகர்களை வைத்து பரீட்சார்த்தம் மட்டுமே பார்த்துக்கொண்டிருப்பார் என்று நம்பலாம்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in