
தமிழ் திரைப்படத்துறையின் முன்னோடி வசனக்கர்த்தாவான ஆரூர்தாஸுக்கு கலைஞர் நினைவு கலைத்துறை வித்தகர் விருதை அவரது வீட்டிற்குச் சென்று தமிழக முதல்வர் ஸ்டாலின் வழங்கி கௌரவித்தார்.
தமிழ்த் திரையுலகில் சிறந்து விளங்கிய வாழ்நாள் சாதனையாளருக்கு முத்தமிழறிஞர் கலைஞர் பெயரில் கலைஞர் நினைவு கலைத்துறை வித்தகர் விருது தமிழ்நாடு அரசின் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் ஜுன் 3 அன்று வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது. இதற்கு 10 லட்ச ரூபாயும், விருதும் வழங்கப்படுகிறது.
அதன்படி, 2022-ம் ஆண்டிற்கான கலைஞர் நினைவு கலைத்துறை வித்தகர் விருதிற்கு தமிழ் திரைப்படத்துறையில் வசனங்கள் மூலம் புகழ் பெற்ற ஆரூர்தாஸ் (90) தேர்ந்தெடுக்கப்பட்டார்.
முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்த நாளான இன்று வசனக்கர்த்தா ஆரூர்தாஸூக்கு கலைஞர் நினைவு கலைத்துறை வித்தகர் விருதை முதல்வர் ஸ்டாலின் அவரது வீட்டிற்கு நேரடியாகச் சென்று வழங்கினார். அதற்கு ஆரூர்தாஸ் முதல்வருக்கு நன்றியைத் தெரிவித்துள்ளார்.