
பிரபல பின்னணி பாடகரும், நடிகருமான மாணிக்க விநாயகம்(78) உடல்நலக்குறைவால் நேற்று காலமானார். சமீபத்தில், இதயக்கோளாறு காரணமாக அறுவை சிகிச்சை செய்திருந்த நிலையில் நேற்று மாலை மாரடைப்பால் காலமானார். 800-க்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடி உள்ள இவர், ‘திருடா திருடி’, ‘திமிரு’, ‘பேரழகன்’ உட்படப் பல திரைப்படங்களில் நடித்துள்ளார்
மயிலாடுதுறையைப் பூர்வீகமாகக் கொண்ட மாணிக்க விநாயகம், பிரபல நடன ஆசிரியர் வழுவூர் ராமையாவின் இளைய மகானாக 1948-ம் ஆண்டு டிச.,10-ம் தேதி பிறந்தார். இளம் வயது முதலே நன்றாகப் பாடக்கூடிய திரைப்பெற்றிருந்தார். கனீர் என்று ஒலிக்கக்கூடிய வெண்கல குரலுக்குச் சொந்தக்காரரான இவர், விக்ரம் நடித்த ‘தில்’ திரைப்படத்தில் வித்யாசாகர் இசையமைப்பில் ‘கண்ணுக்குள்ள கெழுத்தி’ என்ற பாடல் மூலம் திரைப்பாடகராக அறிமுகமானார். தொடர்ந்து, ‘ஏலே இமயமலை’ (தவசி) தேரடி வீதியில் தேவதை வந்தா (ரன்), பொம்பளைங்க காதலைதான் நம்பிவிடாதே (உன்னை நினைத்து), விடை கொடு எங்கள் நாடே (கன்னத்தில் முத்தமிட்டால்). கொடுவா மீச அறுவா பார்வை (தூள்), சின்ன வீடா வரட்டுமா (ஒற்றன்), கொக்கு பற பற (சந்திரமுகி), உள்ளிட்ட ஏராளமான புகழ் பெற்ற பாடல்களைப் பாடியுள்ளார்.
பாடகராக மட்டுமல்லாது பல திரைப்படங்களில் நடிகராகவும் நடித்துள்ளார். குறிப்பாக ‘யுத்தம் செய்’ திரைப்படத்தில் வில்லனாக நடித்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். திரைப்பாடல்கள் மட்டுமல்லாமல் பக்தி பாடல்கள், கிராமியப்பாடல்கள் என ஆயிரக்கணக்கான பாடல்களை இவர் பாடி உள்ளார்.
தன் வெண்கல குரலால் ரசிகர்களை ஈர்த்த மாணிக்க விநாயகம் அவர்களிள் மறைவு இசை ரசிகர்கள் இடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திரையுலகினரும் ரசிகர்கள் பலரும் அவருக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாணிக்க விநாயகத்தின் உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தியுள்ளார்