நடித்துக்கொண்டே இதையும் ஒரு சேவையாகச் செய்கிறேன்!

’விசாரணைக் கைதி’ நாயகி ஸ்ருதி ரெட்டி பேட்டி
ஸ்ருதி ரெட்டி
ஸ்ருதி ரெட்டி

ஆக்‌ஷன் கிங் அர்ஜுன் நடித்த ‘ஜெய்ஹிந்த் 2’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் ஸ்ருதி ரெட்டி. அதன்பிறகு சேரனின் உதவியாளர் எம்.எஸ்.ராஜ் இயக்கத்தில் வெளியான ‘மெரினா புரட்சி’ திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து, “யார் இந்தப் பெண்?” எனக் கேட்க வைத்தவர். தற்போது, நட்டி நடராஜ் நாயனாக நடித்துவரும் ‘விசாரணைக் கைதி’ படத்தில் நாயகியாக நடித்து வருகிறார். ஐடி துறையிலிருந்து சினிமாவுக்குள் வந்திருக்கும் ஸ்ருதியுடன் காமதேனுவுக்காக பிரத்யேகமாக உரையாடியதிலிருந்து...

‘ஜெய் ஹிந்த் 2’ படத்துக்குப் பிறகு அடுத்த 4 வருடங்கள் உங்களை சினிமாவில் பார்க்க முடியவில்லையே..?

முதல் படமே ஆக்‌ஷன் கிங் அர்ஜுன் சாருடன் நடிப்பேன் என்று நினைத்துப் பார்க்கவில்லை. அந்தப் படத்துக்குப் பிறகு நான் ‘பிடெக்’ படிக்க வேண்டும் என்றார்கள். அப்பா - அம்மா பேச்சை தட்ட முடியவில்லை. ‘பிடெக் ஐடி’ படிப்பு 4 வருடம். அதனால் வேறு எதிலும் கவனம் செலுத்த முடியவில்லை. கல்லூரியில் 85 சதவீத வருகைப் பதிவு இல்லாவிட்டால் தேர்வு எழுத விடமாட்டார்கள். படிப்பு விஷயத்தில் ரிஸ்க் வேண்டாம் என்று தமிழ், தெலுங்கு இரண்டிலுமே நல்ல வாய்ப்புகள் வந்தும் என்னால் ஏற்க முடியவில்லை. இன்ஜினியரிங் முடித்தபிறகு எம்பிஏ படிக்க வேண்டும் என்று ஆர்வம் வந்தது. அதையும் 23 வயதுக்குள் படித்து முடித்துவிட்டேன். இந்தக் கடமைகள் எல்லாம் இருந்ததால் தொடர்ச்சியாக என்னை சினிமாவில் பார்க்கமுடியாமல் போய்விட்டது.

உங்களைக் கொஞ்சம் அறிமுகம் செய்து கொள்ளுங்கள்…

நான் பிறந்தது வளர்ந்தது எல்லாம் ஆந்திராவின் கடப்பாவில். அப்பா தானியங்கள் வியாபாரம் செய்கிறார். அம்மா குடும்பத் தலைவி. 4 வயதிலேயே பரதநாட்டிய வகுப்பில் சேர்த்துவிட்டார்கள். 12 வயதில் அரங்கேற்றம். பத்தாம் வகுப்பில் தொடங்கி 4 ஆண்டுகள் பள்ளி ஆண்டு விழாக்களில் எனது நடன நிகழ்ச்சி தொடர்ந்து இடம்பெற்றன. பள்ளிக் கூடத்திலேயே எனக்கு ரசிகர்கள் கிடைத்துவிட்டார்கள்.

“உன்னால் அபிநயங்களை நன்கு உணர்ந்து வெளிப்படுத்த முடிகிறது. சினிமாவில் நடிக்க முயற்சி செய்” என்று எனது நடன குரு ஊக்கப்படுத்தினார். அப்போதுதான் எனக்கு சினிமா மீது ஆர்வம் பிறந்தது.

அவர் சொன்னதுபோலவே எனது நடனத்தைப் பார்த்து முதலில் ஒரு தெலுங்குப் படத்தில் சின்னக் கதாபாத்திரத்தில் நடிக்க அழைத்தார்கள். அப்போது எனக்கு 15 வயது. பிறகு கல்லூரியில் சேரும் முன்பாக ‘ஜெகன் நிர்தோஷி’ என்கிற தெலுங்குப் படத்தில் கதாநாயகியின் தங்கையாக நடித்தேன். அந்தப் படத்துக்குப் பிறகு ‘ஜெய்ஹிந்த் 2’ பட வாய்ப்பு அமைந்தது. தற்போது, சினிமாவுக்குப் பயன்படும் என்று குத்துச் சண்டை, களரி, சிலம்பம், குதிரையேற்றம் ஆகியவற்றை முறையாகக் கற்று முடித்திருக்கிறேன்.

சென்னை கல்லூரிகளில், ‘ஆளுமைத் திறன், மனநல மேம்பாடு’ குறித்து நீங்கள் உரையாற்றுவதாகச் செய்திகள் வெளியானதே..?

மேடைப் பேச்சு நன்றாகவே வரும். எனது அம்மா வழித் தாத்தா சிறந்த மேடைப் பேச்சாளர். அவரிடமிருந்துதான் மேடைப் பேச்சுக் கலையைக் கற்றுக்கொண்டேன். கரோனா ஊரடங்கு முடிந்து கல்லூரிகள் திறந்த பிறகு ஹைதராபாத்தில் பல கல்லூரிகளில் தெலுங்கில் மனநல மேம்பாடு, சுய ஆளுமைத் திறனை வளர்த்துக் கொள்ளுதல் ஆகிய தலைப்புகளில் ஒரு மணி நேரம் பேசுவதும் பிறகு மாணவர்களுடன் கலந்துரையாடுவதுமாக இருக்கிறேன்.

கரோனாவுக்குப் பிறகு மாணவர்கள் மன ரீதியாக கல்வி கற்பதில் இருக்கும் இயல்பான ஆர்வத்தைத் தொலைத்து விட்டிருக்கிறார்கள். அதற்குக் காரணம், ஸ்மார்ட் போன் மற்றும் லேப் டாப்பில் அதிக நேரம் ‘ஸ்கிரீன் டைம்’ செலவிட்டதுதான். குறிப்பாக, ரீல்ஸ், வீடியோக்கள், இண்ஸ்டாகிராம், வெப் சீரீஸ் என்று அதிக நேரம் செலவிட்டு படிப்பிலிருந்து விலகிப் போய்விட்டார்கள். இதிலிருந்து விடுபட அவர்களுக்குப் பயிற்சி அளிக்கும் விதமாக பல உத்திகளைச் சொல்லிக் கொடுக்கிறேன். அதற்கு நல்ல வரவேற்பு இருக்கிறது. நடித்துக்கொண்டே இதையும் ஒரு சேவை போல் செய்து வருகிறேன்.

‘மெரினா புரட்சி’ படம் தணிக்கைக் குழுவில் சிக்கி படாதபாடு பட்டது. படத்துக்கு அடுத்தடுத்து தடை விதித்தபோது எப்படி உணர்ந்தீர்கள்?

தமிழில் கதாநாயகியாக அதுதான் எனக்கு முதல் படம். மிகவும் வேதனையாக இருந்தது. ‘மெரினா புரட்சி’ பற்றி இயக்குநர் எம்.எஸ்.ராஜ் சொல்லும்போதே, “இது டாக்குமென்ட்ரியும் ஃபிக்‌ஷனும் கலந்த டாக்கு டிராமா வகைப் படம். இப்படியொரு படத்தில் கதாநாயகியாக அறிமுகம் ஆகும் வாய்ப்பு யாருக்கும் அமையாது” என்று சொல்லியே என்னை ஒப்பந்தம் செய்தார். நான் தற்போது இந்த அளவுக்கு நன்றாகத் தமிழ் பேசுகிறேன் என்றால் அதற்கு ‘மெரினா புரட்சி’ இயக்குநரும் அவரது டீமும்தான் காரணம். எனக்கு பொறுமையாகத் தமிழ் சொல்லிக் கொடுத்தார்கள். ஒரு மாதத்துக்குள் வேகமாக தமிழை எழுதப் படிக்கவும், சரியான உச்சரிப்புடன் பேசவும் கற்றுக்கொண்டேன்.

படம் முதலில் தணிக்கைக்கு அனுப்பட்டப்போது தடை விதித்தார்கள். பிறகு மறு சீராய்வுக் குழுவுக்கு அனுப்பியபோதும் தடை. ஏன் தடை என்று தணிக்கை குழு பதில் கொடுக்காமல் அப்படியே கிடப்பில் போட்டார்கள். ஆனால், இயக்குநர் விடுவதாக இல்லை. உயர்நீதி மன்றத்தில் வழக்குப் போட்டார். அதன்பிறகு, “ஏன் தடை என்று ஒரு வாரத்துக்குள் தணிக்கைக் குழு காரணம் சொல்லவேண்டும்” என்று நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்பிறகுதான் தவிர்க்கவே முடியாமல் தணிக்கை செய்து ‘யூ’ சான்றிதழ் வழங்கினார்கள். ஜல்லிக்கட்டு தடைக்கு எதிராக மக்களும் மாணவர்களும் இணைந்து நடத்திய போராட்டத்துக்கு உந்துதலாக இருந்தவர்கள் யார் என்று படம் பேசும். அதையெல்லாம் தணிக்கைக் குழுவால் ஏற்றுக்கொள்ள முடியாமல்தான் படத்துக்குத் தடை விதித்தார்கள் என்று இயக்குநர் சொன்னார்.

என்ன மாதிரியான படங்களில் நடிக்க விரும்புகிறீர்கள்? தற்போது நடித்து வரும் படங்கள் குறித்து கூறுங்கள்.

நட்டி நடராஜ் சார் ஹீரோவாக நடிக்கும் ‘விசாரணைக் கைதி’ படத்தில் ஹீரோயினாக நடிக்கிறேன். அதில் எனக்கு திலகவதி என்கிற வழக்கறிஞர் கதாபாத்திரம். ஒரு நிரபராதியை விடுவிக்கும் மிக முக்கியமான ரோல். கிட்டத்தட்ட ‘ஜெய் பீம்’ சூர்யா மாதிரிதான். எனக்கு நிறைய வசனக் காட்சிகள் இருக்கின்றன. எல்லாமே நீதிமன்றக் காட்சிகள்.

இந்தப் படம் என்றில்லை... தமிழில் நான் அறிமுகமான ‘ஜெய்ஹிந்த் 2’ படத்தில் மாணவர்களுக்காகப் போராடும் லண்டன் மாணவியாக நடித்திருந்தேன். அடுத்து ‘மெரினா புரட்சி’யில் மாணவர்களின் கருத்துகளை பல தடைகளைத் தாண்டி தொலைக்காட்சி வழியாக மக்களிடம் கொண்டு சேர்க்கும் செய்தியாளராக நடித்திருந்தேன். இப்போது ஒரு நிரபராதியின் பின்னால் நிற்கும் வழக்கறிஞர். இப்படி இதுவரை நான் ஏற்றுள்ள எல்லா கதாபாத்திரங்களுமே புரட்சிகரமானவையாக அமைந்தது ஒரு எதிர்பாராத ஆச்சரியம்! இனியும் நான் நடிக்கப் போகும் படங்களிலும் சிறந்த கதாபாத்திரங்களாக இருக்கும்படி பார்த்துக்கொள்வேன்.

உங்களுடைய செல்ல நாய்க்கு சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாடி இருக்கிறீர்களே..?

ஆமாம்! அவளொரு சைபீரியன் ஹஸ்கி. பெயர் நலா. ‘லயன் கிங்’ படத்தில் சிம்பாவின் தோழியாக வருமே ஒரு சிங்கம். அந்தக் கதாபாத்திரத்தின் பெயர்தான் நலா. இரண்டு வயது ஆகிறது. படப்பிடிப்பு, நிகழ்ச்சிகள் என்று களைத்து வீடு திரும்பும்போது அவள் தரும் முத்தங்கள் எனக்குப் புது உற்சாகத்தைத் தந்துவிடும். தன்னைக் குளிப்பாட்டிவிடும்படி அவளே என் ஆடையைக் கடித்து இழுத்துக்கொண்டு தோட்டத்தில் இருக்கும் குளியல் தொட்டிக்குப் போவாள். ஒரு சின்ன ஈ தன்னை வட்டமிட்டாலும் அவளுக்குப் பிடிக்காது. அதைக் குறிவைத்து பிடித்துவிட்டுத்தான் மறு வேலை பார்ப்பாள். அவளொரு சைவ உணவுக்காரி; என்னுடைய உயிர்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in