ஸ்ரீதேவி அணிந்து நடித்த புடவைகள் ஏலம்: ‘இங்கிலீஷ் விங்கிலீஷ்’ இயக்குநருக்குக் குவியும் பாராட்டுகள்!

ஸ்ரீதேவி அணிந்து நடித்த புடவைகள் ஏலம்: ‘இங்கிலீஷ் விங்கிலீஷ்’ இயக்குநருக்குக் குவியும் பாராட்டுகள்!

‘இங்கிலீஷ் விங்கிலீஷ்’ படத்தில் ஸ்ரீதேவி அணிந்திருந்த புடவைகள் அனைத்தையும் ஏலம் விட முடிவு செய்திருப்பதாக அந்த படத்தின் இயக்குநர் கௌரி ஷிண்டே அறிவித்திருக்கிறார்.

பாலிவுட் இயக்குநர் ஆர்.பால்கி தயாரிப்பில், அவரது மனைவி கெளரி ஷிண்டே இயக்கிய திரைப்படம் ‘இங்கிலீஷ் விங்கிலீஷ்’. 2012 அக்டோபர் 5-ல் வெளியான இந்தப் படத்தில் நடுத்தர வயது நாயகியாக, ஆங்கிலம் தெரியாத குடும்பத் தலைவியாக நடித்திருந்தார் ஸ்ரீதேவி. 1997-ல் வெளியான ‘ஜுடாயி’ படத்துக்குப் பின்னர் 15 ஆண்டுகள் கழித்து அவர் நடித்த அந்தப் படம் மிகப் பெரிய வெற்றி பெற்றது. அதன் பின்னர் ஓரிரு படங்களில் ஸ்ரீதேவி நடித்திருந்தாலும், ‘இங்கிலீஷ் விங்கிலீஷ்’ படம் அவரது முழுமையான திரை ஆளுமையைக் கட்டியம் கூறிய படமாகவே இன்றும் கொண்டாடப்படுகிறது.

இப்படம் வெளியாகி 10 ஆண்டுகள் ஆகும் நிலையில், இப்படத்தில் ஸ்ரீதேவி அணிந்து நடித்த புடவைகளை ஏலத்தில் விடுவதாக இயக்குநர் கெளரி ஷிண்டே அறிவித்திருக்கிறார். இதன் மூலம் கிடைக்கும் தொகை ஏழைச் சிறுமிகளின் கல்விக்காக நடத்தப்படும் தொண்டு நிறுவனங்களுக்கு, நன்கொடையாக வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்திருக்கிறார். இந்த அறிவிப்புக்கு பல்வேறு தரப்பினர் பாராட்டும் வரவேற்பும் தெரிவித்துவருகிறார்கள்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in