ஸ்ரீதிவ்யா
ஸ்ரீதிவ்யா

‘ஒத்தைக்கு ஒத்த’ வரும் ஸ்ரீதிவ்யா, விட்ட இடத்தைப் பிடிப்பாரா?

ஸ்ரீதிவ்யாவுக்கு தமிழ் ரசிகர்கள் கொடுத்திருக்கும் இடம் தனித்துவமானது. அவர் எத்தனை வருடம் இடைவெளி எடுத்துகொண்டாலும் அதைப் பொருட்படுத்தாமல் அவரை ஆதரிப்பதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள். தெலுங்கைத் தாய்மொழியாகக் கொண்ட ஸ்ரீதிவ்யா 10 வயதில் தெலுங்கு சினிமாவில் சிறார் நடிகராக நடிக்க வந்தார். சிறந்த குழந்தை நட்சத்திரத்துக்கான நந்தி விருதையும் வென்றார்.

பின்னர் ’மானசரா’ தெலுங்குப் படத்தின் மூலம் 2010இல் கதாநாயகியாக அறிமுகமானார். தமிழில் அவரை ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ படத்தின் மூலம் 2013இல் அறிமுகப்படுத்தினார் இயக்குநர் பொன் ராம். மறுபடியும் ‘காக்கி சட்டை’, ‘ரெமோ’ என சிவகார்த்திகேயன் படங்களிலும், கார்த்தியுடன் ‘காஷ்மோரா’,  விஷாலுடன் ’மருது’, ஜி.வி.பிராகாஷுடன் ‘பென்சில்’ என முன்னணி ஹீரோக்களுடன் ஒரு டஜன் படங்களில் நடித்து வந்தார்.

திடீரென 2017க்குப் பிறகு தமிழ் சினிமாவிலிருந்து முற்றிலும் விலகியிருந்தார். தெலுங்குப் படங்களிலும் ஏனோ நடிக்கவில்லை. முன்னணிக் கதாநாயகியாக வருவார் என்ற ரசிக எதிர்பார்ப்புகள் வலுத்ததன் மத்தியில், குறிப்பாக நயன்தாரா, த்ரிஷா உள்ளிட்ட பலருக்கும் போட்டியாக இருப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில்தான் ஸ்ரீதிவ்யா மௌனமானார்.

உண்மையில் அவருக்கு வாய்ப்புகள் வரவில்லையா அல்லது ‘வேறு காரணங்’களால் அவர் கோலிவுட்டிலிருந்து விலகியிருந்தாரா என்றும் பேசப்பட்டது. எப்படியிருப்பினும் கடந்த ஐந்து ஆண்டுகளாக எந்தப் படத்திலும் நடிக்காமலும் ஊடகங்களில் தனது முகத்தைக் காட்டாமலும் ஒதுங்கியிருந்த ஸ்ரீதிவ்யாவை, மலையாளத்தின் முன்னணி நாயகனும் ‘லூசிஃபர்’ படத்தின் இயக்குநருமான பிருதிவிராஜ், கடந்த ஆண்டு தனது ‘ஜனகணமன’ படத்தில் தனக்கு ஜோடியாக நடிக்க வைத்தார்.

அதைத் தொடர்ந்து, அதர்வா நடித்து வரும் ‘ஒத்தைக்கு ஒத்த’ படத்தில் கதாநாயகியாக ஒப்பந்தமாகி நடித்தும் முடித்துவிட்டார். தற்போது அந்தப் படத்தை முந்திக்கொண்டு வருகிறது விக்ரம் பிரபுவின் நடிப்பில் உருவாகியுள்ள ‘ரெய்டு’. அந்தப் படத்தில் விக்ரம் பிரபுவுக்கு ஸ்ரீதிவ்யாதான் ஜோடி. ‘ரெய்டு’ மற்றும் ’ஒத்தைக்கு ஒத்த’ படங்கள் வெளியான பிறகு, ஸ்ரீதிவ்யா தமிழில் விட்ட இடத்தைப் பிடிப்பாரா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும். 

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in