‘ஸ்பைடர்மேன் நோ வே ஹோம்’ : மகிழ்ச்சியில் மார்வல் ரசிகர்கள்

‘ஸ்பைடர்மேன் நோ வே ஹோம்’ : மகிழ்ச்சியில் மார்வல் ரசிகர்கள்

“சூப்பர் ஹீரோ திரைப்படங்கள் சிறுவர்களுக்கானது” இப்படி யாராவது உங்களிடம் சொன்னால், தயக்கமின்றி அவர் சொல்வது தவறு என்று மறுதலியுங்கள். ஏனென்றால், சென்ற வாரம் வெளியான ‘ஸ்பைடர்மேன் நோ வே ஹோம்’ திரைப்படம் 30 வயது கடந்த ரசிகர்களைத் திரையரங்கில் சந்தோஷக் களிப்பில் கூச்சலிட வைத்திருக்கிறது. சோகக் காட்சிகளில் அழவைத்து, அற்புதமான கதைசொல்லல் மூலம் ரசிகர்களின் பால்ய நினைவுகளை மீட்டெடுத்து மெய்சிலிர்க்கச் செய்திருக்கிறது.

பால்யத்தின் முதல் சூப்பர் ஹீரோ ஸ்பைடர்மேன்

புதுயுகமான 2000-மாவது ஆண்டு பிறந்த பிறகு, சினிமாத் துறை அசுரத்தனமான வளர்ச்சியடைந்தது. 2001-ல் வெளிவந்த ‘ஹாரிபாட்டர் அண்ட் தி பிளாசப்பர்’ஸ் ஸ்டோன்’ திரைப்படம், உலகம் முழுக்க பார்வையாளர்களை ஆச்சரியத்தில் திக்குமுக்காடவைத்தது. அதிநவீன கிராஃபிக்ஸ் தொழில்நுட்பங்களுடன் ஹாரிபாட்டர் பறக்கும் துடைப்பத்தில் பறப்பதைப் பார்த்த, சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அசந்து போனார்கள். அதுவரை உலக சினிமா என்றாலே ஜேம்ஸ் பாண்ட், அர்னால்ட், சில்வஸ்டர் ஸ்டாலோன், ஜாக்கிசான் போன்றவர்களின் படங்களையே பார்த்துப் பழகியிருந்த 90-களில் பிறந்தவர்களுக்கு, ஹாரி பாட்டர் திரைப்படம் சினிமாவின் மீதான வேறு ஒரு பார்வையை உருவாக்கியது.

இந்த ஆச்சரியத்திலிருந்து மீளாத ரசிகர்களுக்கு, அடுத்த விருந்தாக 2002-ல் வெளியானது ‘ஸ்பைடர்மேன்’ திரைப்படம். சாம் ரேமி இயக்கத்தில், டோபி மேக்யூர் நடிப்பில் வெளியான இப்படம்தான் 90’ஸ் கிட்ஸ் பார்த்த முதல் சூப்பர் ஹீரோ திரைப்படம். இதைப் பார்த்துவிட்டு, வீட்டின் மூலை முடுக்கிலிருந்த சிலந்திகளை எடுத்து கையில் கடிக்கவிட்டு நாமும் ஸ்பைடர்மேன் ஆகலாம் என்று கனவு கண்டு, பல சிலந்திகளைச் சித்ரவதை செய்த பொடியன்களில் நானும் ஒருவன்.

இப்படம் வெளியான அடுத்த ஆண்டே, ‘ஹல்க்’ திரைப்படம் வெளியானது. பிறகு 2004-ல், ‘ஸ்பைடர்மேன்-2’, பின்பு 2007-ல் ‘ஸ்பைடர் மேன்-3’ என்று அடுத்தடுத்த ஆண்டுகள் சூப்பர் ஹீரோக்களால் உலக சினிமா ஆதிக்கம் செய்யப்பட்டது. இதுவரை வந்த பல சூப்பர் ஹீரோ திரைப்படங்கள் செய்த வசூல் சாதனையை எல்லாம், தற்போது வெளியாகியுள்ள ‘ஸ்பைடர்மேன் நோ வே ஹோம்’ முறியடித்துவிடும் என்கிறார்கள்.

‘ஸ்பைடர்மேன் நோ வே ஹோம்’

2019-ல், வெளியான ‘ஸ்பைடர்மேன் பார் ஃப்ரம் ஹோம்’ திரைப்படத்தின் இறுதியில் வில்லனான மிஸ்டீரியோ, தான் இறப்பதற்குச் சற்று முன்பு, பீட்டர் பார்க்கர்தான் ஸ்பைடர்மேன் என்று உலகறியச் சொல்லிவிடுவார். சென்ற பாகம் எங்கு முடிந்ததோ, சரியாக அங்கிருந்து ‘ஸ்பைடர்மேன் நோ வே ஹோம்’ திரைக்கதை ஆரம்பிக்கிறது. இத்தனை நாள் ரகசியமாக இருந்த பீட்டர் பார்க்கரின் அடையாளம் வெளிப்பட்டவுடன், ஸ்பைடர்மேனின் வாழ்க்கையே தலைகீழாக மாறிவிடுகிறது. அவருடைய வாழ்க்கை மட்டுமன்றி அவருடைய காதலியான எம்ஜே, அவருடைய நண்பன் நெட், ஸ்பைடர்மேனின் அத்தை ஆன்ட் மே என அனைவரின் வாழ்க்கையும் பாதிப்புக்குள்ளாகிறது.

இதிலிருந்து தப்பிக்க, டாக்டர் ஸ்ட்ரேஞ்சிடம் உதவி கேட்கிறார் ஸ்பைடர்மேன். மாயாஜால வித்தகரான டாக்டர் ஸ்ட்ரேஞ், உலகத்தில் பீட்டர் பார்க்கர் தான் ஸ்பைடர்மேன் என்று தெரிந்தவர்கள் அனைவரும் அதை மறக்கும் விதமாக ஒரு மந்திரத்தைப் போடும்போது, அதில் சில குளறுபடிகள் நடந்துவிடுகிறது. மற்ற யுனிவர்ஸ்களில் வாழும் வேறு பீட்டர் பார்க்கர் அதாவது, ஸ்பைடர்மேனை தெரிந்தவர்கள் அனைவரும் இந்த யுனிவர்ஸுக்குள் நுழைந்துவிடுவார்கள்.

மார்வெல் காமிக்ஸ்களைப் பொறுத்தவரை, இந்த உலகம் போலவே பல்வேறு உலகங்கள் பல்வேறு ரியாலிட்டிகளில் இருந்துவருகிறது என்பது கணக்கு. அதன்படி 2002-ல், முதன்முதலில் டோபி மெக்யூர் நடித்த ஸ்பைடர்மேன், பிறகு 2012-ல் ஆண்ட்ரூ கார்ஃபீல்ட் நடிப்பில் வெளியான ‘தி அமேசிங் ஸ்பைடர்மேன்’, 2017-ல் டாம் ஹாலண்ட் நடிப்பில் வெளியான ‘ஸ்பைடர்மேன் ஹோம் கம்மிங்’ திரைப்படத்தில் வரும் ஸ்பைடர்மேன் இவர்கள் எல்லாமே வெவ்வேறு யுனிவர்சில் வாழ்பவர்கள். இந்த வெவ்வேறு யுனிவர்ஸ்களுக்கு இடையே இருக்கும் கதவுகளை டாக்டர் ஸ்ட்ரேஞ்சின் மந்திரம் திறந்துவிட, அடுத்தடுத்து நடக்கும் அதிரடி களேபரங்கள்தான் ‘ஸ்பைடர்மேன் நோ வே ஹோம்’.

டோபி மேக்யூர் -  ஆண்ட்ரூ கார்ஃபீல்ட்
டோபி மேக்யூர் - ஆண்ட்ரூ கார்ஃபீல்ட்

மார்வல் காமிக்ஸ் காத்த ரகசியம்

இத்திரைப்படத்தை உலக காமிக்ஸ் ரசிகர்கள் கொண்டாடுவதன் முக்கியக்காரணம், இந்த தலைமுறை பார்த்து வளர்ந்த 3 ஸ்பைடர்மேன்களையும் ஒரே திரையில் பார்க்கக் கிடைத்த வாய்ப்புதான். டோபி மேக்யூர், ஆண்ட்ரூ கார்ஃபீல்ட், டாம் ஹாலண்ட் என்று மூவரும் திரையில் தோன்றிய மறுகணம், ரசிகர்களின் உற்சாக கூச்சலில் தியேட்டர்கள் அதிர்கின்றன.

படம் வெளியாகும்வரை 3 ஸ்பைடர்மேன்களும் திரையில் தோன்றவுள்ளார்களா என்பதை ரகசியம் காத்துவந்தது படக்குழு. ஆனால், ட்ரெய்லரில் இருந்து ஒரு சில கிராஃபிக்ஸ் தவறுகளை வைத்துக் கண்டிப்பாக 3 ஸ்பைடர்மேன்கள் உண்டு என்று ரசிகர்கள் கணிப்புகளை அள்ளி வீச ஆரம்பித்தாலும், பலருக்கும் திரையில் பார்க்கும்வரை நம்பிக்கை வரவில்லை.

பழைய நினைவுகள்

மூன்று ஸ்பைடர்மேன்கள், அவர்கள் பல படங்களில் போரிட்ட 5 முக்கியமான வில்லன்கள், இவை அனைத்தையும் 2.45 மணி நேரம் ஓடக்கூடிய ஒரே திரைப்படத்தில் சொல்ல வேண்டும். இப்படி ஒரு இக்கட்டான சூழலை மிக அழகாகக் கையாண்டிருக்கிறார்கள் இப்படத்தின் திரைக்கதை எழுத்தாளர்களான க்ரிஸ் மெக்கன்னா மற்றும் எரிக் சோமர்ஸ். கதையின் பண்பு கெட்டுவிடாமல், அதே சமயம் பழைய படங்களின் நிகழ்வுகளை உணர்வுபூர்வமாகவும், நகைச்சுவையுடனும் சொல்லியிருக்கிறார்கள்.

முதல் ஸ்படைர்மேன் படத்தின் ஹீரோ டோபி மேக்யூர், இயந்திர உதவியில்லாமல் தன் உடலிலிருந்தே சிலந்தி வலையைப் பீச்சுவதைக் கேலியாக 3 ஸ்பைடர்மேன்களும் பேசிக்கொள்வது, டோபி மேக்யூர், ஆண்ட்ரூ கார்ஃபீல்டை பார்த்து 3 முறை அழுத்தமாக, “யு ஆர் அமேஸிங்” என்று சொல்வது (ஆண்ட்ரூ நடித்த ஸ்பைடர் மேன் படங்களின் பெயர் ‘தி அமேஸிங் ஸ்பைடர்மேன்’), பேன்ற காட்சிகளை தீவிரமான ஸ்பைடர்மேன் ரசிகர்களால் மட்டுமே கொண்டாட முடியும்.

ஸ்பைடர்மேனின் தாரக மந்திரமான ‘சக்தி பெருகும்போது, பொறுப்புகளும் பெருகுகிறது’ என்ற வசனத்தை 3 பேரும் ஒரே காட்சியில் சொல்வது மெய்சிலிர்க்கும் அனுபவம். ஆண்ட்ரூ கார்ஃபீல்ட் நடித்த ‘தி அமேசிங் ஸ்பைடர்மேன் -2’ படத்தில் ஏற்பட்ட சோகமான முடிவு ரசிகர்கள் மனதில் ஏற்படுத்திய காயத்துக்கு, இப்படத்தில் மருந்திட்டிருக்கிறார்கள். சில மணித்துளிகளே அந்தக் காட்சி வந்தாலும் கண்கள் ஈரமாகின்றன.

மேலும், மார்வலின் இன்னொரு சூப்பர் ஹீரோவான ‘டேர் டெவில்’ மேட் மர்டாக்கின் சிறப்புத் தோற்றம், வெனோமின் சிறப்புத் தோற்றம், டாக்டர் ஸ்ட்ரேஞ் அணியில் ஸ்பைடர்மேனின் நண்பன் நெட் இணைவதற்கான அடித்தளம் என்று ரசிகர்களின் மனதை அறிந்து, அட்டகாசமான விருந்தாக அளித்திருக்கிறது மார்வல் ஸ்டுடியோஸ் (டிசி காமிக்ஸ் இதையெல்லாம் கருத்தில்கொண்டால் நல்லது).

இந்தப் ‘பற்பல யுனிவர்ஸ்’ கான்செப்ட்டை வைத்து, அடுத்து 2 படங்களைத் திட்டமிட்டிருக்கிறது மார்வல் ஸ்டுடியோஸ். அடுத்த படத்தில் இரு டாக்டர் ஸ்ட்ரேஞ்சை பார்க்க இப்போதே தயாராகிவிட்டார்கள் மார்வல் ரசிகர்கள்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in