
மலேசியாவில் படப்பிடிப்பின் போது படுகாயமடைந்த நடிகர் விஜய் ஆண்டனி, கூடிய விரைவில் உங்கள் அனைவரிடமும் பேசுகிறேன் என்று இன்று ட்விட் செய்துள்ளார். இதனால் அவரது ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
கடந்த 2016-ம் ஆண்டு சசி இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியான படம் 'பிச்சைக்காரன்'. தமிழ், தெலுங்கில் வெளியாகி சூப்பர் ஹிட்டான இப்படத்தின் இரண்டாம் பாகம் தயாராகி வருகிறது. இந்தப் படத்தை தயாரிப்பதோடு, இசையமைப்பாளராக மட்டுமின்றி முதல் முறையாக இப்படத்தில் விஜய் ஆண்டனி இயக்குநராகவும் அறிமுகமாகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு மலேசியாவில் பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வந்தது.
லங்காவி தீவில் படப்பிடிப்பு நடைபெற்ற போது விஜய் ஆண்டனி விபத்தில் சிக்கி காயம் அடைந்தார். இதனால் மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அவர் அனுமதிக்கப்பட்டார். இதனால் அவர் விரைவில் குணமாக வேண்டும் என்று அவரது ரசிகர்கள் சமூகவலைதளங்களில் கவலையுடன் பதிவிட்டு வந்தனர்.
இதையொட்டி, " விஜய் ஆண்டனி மருத்துவமனையில் இருந்து வீட்டுக்கு வந்து விட்டார் என்றும், மருத்துவர் ஓய்வில் இருக்கச் சொல்லியுள்ளனர்" என்றும் இயக்குநர் சுசீந்திரன் அறிக்கை மூலம் தெரிவித்தார். அத்துடன், "கூடிய விரைவில் ரசிகர்களிடம் விஜய் ஆண்டனி பேசுவார்" என்று தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், நடிகர் விஜய் ஆண்டனி தனது ட்விட்டர் பக்கத்தில் இன்று ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில், " அன்பு நண்பர்களே, மலேசியாவில் 'பிச்சைக்காரன் 2' படப்பிடிப்பின் போது ஏற்பட்ட விபத்தில் தாடை மற்றும் மூக்கில் எனக்குக் காயம் ஏற்பட்டது. அதில் இருந்து பத்திரமாக மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டேன். அங்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. கூடிய விரைவில் உங்கள் அனைவரிடமும் பேசுகிறேன். எனது உடல்நிலையின் மீதான உங்கள் ஆதரவுக்கும், அக்கறைக்கும் நன்றி" என்று அவர் பதிவிட்டுள்ளார். நடிகர் விஜய் ஆண்டனியின் இந்த ட்விட்டால் அவரது ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.