’வளையோசை’ பாடலில் லதா மங்கேஷருக்கு உதவிய எஸ்.பி.பி!

லதா மங்கேஷ்கருடன் எஸ்.பி.பி, இளையராஜா, கமல்ஹாசன், சுரேஷ் கிருஷ்ணா
லதா மங்கேஷ்கருடன் எஸ்.பி.பி, இளையராஜா, கமல்ஹாசன், சுரேஷ் கிருஷ்ணா

’வளையோசை’ பாடலில் லதா மங்கேஷருக்கு உதவிய எஸ்.பி.பி!

’வளையோசை சல சலவென... பாடலை பாடிய லதா மங்கேஷ்கருக்கு எஸ்.பி.பாலசுப்பிரமணியன் தமிழ் உச்சரிப்புகளில் உதவினார் என்று இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா தெரிவித்துள்ளார்.

பிரபல பாடகி லதா மங்கேஷ்கர், மும்பையில் இன்று காலமானார். அவருக்கு வயது 92. இவர், தமிழில், கமல்ஹாசனின் ’சத்யா’ படத்தில் இடம்பெற்ற ’வளையோசை சலசலவென’, பிரபுவின் ‘ஆனந்த்’ படத்தில் இடம்பெற்ற ’ஆராரோ ஆராரோ’, கார்த்தி நடித்த ‘என் ஜீவன் பாடுது’ படத்தில், ’எங்கிருந்தோ அழைக்கும்’உட்பட சில பாடல்களை பாடியுள்ளார். இந்நிலையில் ’சத்யா’ படப் பாடல் பதிவின் போது பாடகர் எஸ்.பி.பி, தமிழ் உச்சரிப்பில், லதா மங்கேஷ்கருக்கு உதவினார் என்று அந்தப் படத்தின் இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா தெரிவித்துள்ளார்.

இதுபற்றி அவர் கூறியதாவது:

நான் கே.பாலச்சந்தரிடம் ’ஏக் துஜே கேலியே’ படத்தில் பணியாற்றினேன். அதில் இடம்பெற்ற ’தேரே மேரே பிச் மே’பாடலை லதா மங்கேஷ்கர் பாடினார். அதில் சில தமிழ் வரிகளை அவர் பாடுவார். உடன் எஸ்.பி.பாலசுப்பிரமணியன் பாடினார். அப்போது இந்தியை சரியாக உச்சரிக்க அவருக்கு உதவினார் லதாஜி.

பிறகு நான் ’சத்யா’ படத்தை இயக்கியபோது இளையராஜா, ’சிவாஜி பிலிம்ஸ் படத்துக்காக பாட, லதா மங்கேஷ்கர் வருகிறார். அவரை நம்ம படத்துக்கும் ஒரு டூயட்டை பாட சொல்லலாமான்னு யோசிக்கிறேன்’ என்று சொன்னார். நானும் கமல்ஹாசனும் மகிழ்ந்தோம். உடனடியாக பாடல் கம்போஸிங் நடந்தது. வாலி பாடல் எழுதினார். லதாஜி பாடினார். ஆனால் அதற்கு முன் அவர், தன்னைத் தயார்ப்படுத்த நேரம் எடுத்துக் கொண்டார். அப்போதும் அவருடன் பாடியவர் எஸ்.பி.பி.

’வளையோசை’ பாடலில் கமல்ஹாசன், அமலா
’வளையோசை’ பாடலில் கமல்ஹாசன், அமலா

அவருக்கு இந்தி உச்சரிப்புகளை லதாஜி சொல்லிக் கொடுத்தது போல இதில் அவருக்கு தமிழ் உச்சரிப்பை சொல்லிக் கொடுத்தார் எஸ்.பி.பி. பிறகு பாடி முடித்ததும் சரியாக பாடியிருக்கிறேனா, இல்லை மீண்டும் பாடவா? என்று கேட்பார். அவருடைய அர்ப்பணிப்பு சிறப்பானது. அவரின் மாயக்குரலை ரசிகர்கள் எப்போதும் நினைவில் வைத்திருப்பார்கள்.

இவ்வாறு சுரேஷ் கிருஷ்ணா தெரிவித்தார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in