‘இந்த விருதை விவசாயிகளுக்கு அர்ப்பணிக்கிறேன்’ - மலேசியாவில் மனிதநேய விருது வாங்கிய நடிகர் நெகிழ்ச்சி!

‘இந்த விருதை விவசாயிகளுக்கு அர்ப்பணிக்கிறேன்’ - மலேசியாவில் மனிதநேய விருது வாங்கிய நடிகர் நெகிழ்ச்சி!

மலேசியாவைச் சேர்ந்த ‘டேக் கேர் இன்டர்நேஷனல் ஃபவுண்டேஷன்’ எனும் அமைப்பு மக்களுக்காகச் சேவை செய்யும் சிறந்த மனிதர்களை தேர்ந்தெடுத்து ஒவ்வொரு ஆண்டும் 'மனிதகுலத்தின் பெருமை' எனும் பெயரில் மனிதநேய விருது வழங்கி கௌரவிக்கிறது. இந்த ஆண்டிற்கான சிறந்த மனிதநேய விருது நடிகர் சௌந்தரராஜாவுக்கு வழங்கப்பட்டிருக்கிறது.

’வேட்டை’, ‘சுந்தரபாண்டியன்’, ‘ஜிகர்தண்டா’, ‘பிகில்’ உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கும் சௌந்தரராஜா சுற்றுச்சூழல் பாதுகாப்பிலும் ஆர்வம் மிக்கவர்.

இந்நிலையில், தமிழகம் முழுவதும் கடந்த ஐந்து ஆண்டுகளில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மரச்செடிகளை நட்டு, இயற்கை மற்றும் சுற்றுச்சூழலின் முக்கியத்துவத்தை மக்களிடம் பரப்பிவரும் சௌந்தரராஜாவை கெளரவிக்கும் வகையில் இந்த விருது வழங்கப்பட்டது.

கோலாலம்பூரில் நடந்த இந்த நிகழ்ச்சியில் மலேசியா செலங்கூர் மன்னர் சலாகுத்தீன் அப்துல் அஜிஸ் ஷா, மலேசியா ராயல் போலீஸ் துணை இயக்குநர் டத்தோ சசிகலா சுப்ரமணியம், முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாமின் பேரனும் கலாம் பவுண்டேஷன் நிறுவனருமான சலீம், ஸ்ரீமதி கேசவன், டேக் கேர் இன்டர்நேஷனல் ஃபவுண்டேஷன்’ நிறுவனர் முகமது இப்ராஹிம் ஆகியோர் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

விருதைப் பெற்றுக்கொண்டு உரையாற்றிய சௌந்தரராஜா, “நான் செய்வது சேவை அல்ல கடமை. மாதம் ஒரு நாள் அல்லது இரண்டு நாட்கள் இந்த மண்ணுக்காகவும் இந்த மண்ணில் பிறந்த மக்களுக்காவும் உழைப்போம். இந்த விருதை விவசாயிகளுக்கும் இயற்கையை நேசிக்கும் அனைவருக்கும் அர்ப்பணிக்கிறேன்” என்று கூறினார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in