எனக்கு எதிராக பிடிவாரண்டா? சோனாக்‌ஷி விளக்கம்

எனக்கு எதிராக பிடிவாரண்டா? சோனாக்‌ஷி விளக்கம்

`தனக்கு எதிராக பிடிவாரண்ட் ஏதும் பிறப்பிக்கப்படவில்லை' என்று நடிகை சோனாக்‌ஷி சின்ஹா விளக்கம் அளித்துள்ளார்.

நடிகை சோனாக்‌ஷி கடந்த 2019ஆம் ஆண்டு டெல்லியில் நடந்த விருது நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக, ரூ.37 லட்சம் முன்பணம் பெற்றதாகவும் ஆனால், அந்நிகழ்ச்சிக்கு வராததால் நஷ்டம் ஏற்பட்டதாகக் கூறி, நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் பிரமோத் சர்மா என்பவர், உத்தரபிரதேச மாநிலம் மொரதாபாத் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.

இந்த வழக்கில் நடிகை சோனாக்‌ஷிக்கு நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்ததாக கடந்த சில நாட்களுக்கு முன் செய்திகள் வெளியாயின. இந்நிலையில் சோனாக்‌ஷி இதை மறுத்துள்ளார்.

இதுபற்றி அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ``எனக்கு எதிரான வதந்திகள் கடந்த சில நாட்களாக பரவி வருகின்றன. இது பொய்யான தகவல். என்னைத் தொந்தரவு செய்யவேண்டும் என்பதற்காக, ஒரு முரட்டு நபர் கிளப்பி விடும் வேலை இது. அந்த தனிநபரின் பொய்யான செய்தியை வெளியிட வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன்.

என் பெயரை கெடுத்து அதன் மூலம் விளம்பரம் தேடிக் கொள்ளவும் என்னிடம் பணம் பறிக்கவும் அந்த மனிதர் முயற்சிக்கிறார். தயவு செய்து அவரின் சதிக்கு உடந்தையாக வேண்டாம். நீதிமன்ற அவமதிப்புக்காக அவருக்கு எதிராக, என் வழக்கறிஞர் குழு தேவையான நடவடிக்கைகளை எடுக்கும். எனக்கு எதிராக நீதிமன்றம் எந்த உத்தரவையும் பிறப்பிக்க வில்லை'' என தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in