ஒரே நாளில் இரண்டு பட ட்ரெய்லர்கள்: உற்சாகத்தில் எஸ்.ஜே.சூர்யா!

ஒரே நாளில் இரண்டு பட ட்ரெய்லர்கள்: உற்சாகத்தில் எஸ்.ஜே.சூர்யா!

'குஷி', 'வாலி' என இயக்குநராக எவர் க்ரீன் ஹிட் படங்களைக் கொடுத்தவர் எஸ்.ஜே. சூர்யா. 'நியூ', ‘இறைவி’, 'நெஞ்சம் மறப்பதில்லை' என நடிகராகவும் தன்னை நிரூபிக்க அவர் தவறவில்லை.

குறிப்பாக 'மாநாடு' படத்தில் ஸ்டைலிஷ் வில்லனாக அவர் நடித்த அவரது தனுஷ்கோடி கதாபாத்திரத்தை ரசிகர்கள் சிலாகித்துவருகிறார்கள். திரையில் நடிப்பதற்காகவே திரைப்படங்களை இயக்கியதாகப் பல பேட்டிகளில் கூறியுள்ள எஸ்.ஜே.சூர்யா இப்போது நடிகராக 'டான்', 'கடமையை செய்', இந்தி நடிகர் அமிதாப் பச்சனுடன் ஒரு படம், விஷாலுடன் 'மார்க் ஆண்டனி' ஆகிய படங்களைக் கைவசம் வைத்துள்ளார். வில்லனாக அவர் நடிக்கும் 'மார்க் ஆண்டனி' படத்தின் பூஜை நேற்று நடைபெற்றது. புஷ்கர் காயத்ரி இயக்கத்தில் அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்திற்கென வெப் சீரிஸ் ஒன்றிலும் நடிக்கிறார் எஸ்.ஜே.சூர்யா.

இப்படி நடிகராக பிஸியாக வலம் வருபவரின் 'டான்' மற்றும் 'கடமையை செய்' படங்களின் ட்ரெய்லர்கள் இன்று வெளியாக இருக்கின்றன.

இது குறித்து ட்வீட் செய்திருக்கும் எஸ்.ஜே.சூர்யா, 'இன்று என்னுடைய இரண்டு படங்களின் ட்ரெய்லர்கள் வெளியாக இருக்கின்றன. நான் கதாநாயகனாக நடித்திருக்கும் 'கடமையை செய்' படத்தின் ட்ரெய்லரை மாலை 5 மணிக்கு சிலம்பரசன் வெளியிடுகிறார். அவருக்கு நன்றி. நான் வில்லனாக சிவகார்த்திகேயன் சாருடன் நடித்திருக்கும் 'டான்' ட்ரைய்லர் இரவு 7 மணிக்கு வெளியாகிறது. ஒரே நாளில் என் இரண்டு படங்களின் ட்ரெய்லர் வெளியாவதில் மகிழ்ச்சி' என அதில் தெரிவித்துள்ளார்.

வெங்கட்ராகவன் இயக்கியுள்ள 'கடமையை செய்' படத்தில் எஸ்.ஜே.சூர்யாவுக்கு ஜோடியாக யாஷிகா ஆனந்த் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in