சிவசங்கர் மாஸ்டர்: ஆட்டத்தால் மனதைக் கொள்ளைகொண்ட ‘மன்மத ராசா!’

- நடன இயக்குநர் சிவசங்கர் மாஸ்டர் நினைவு தின பகிர்வு
சிவசங்கர் மாஸ்டர்
சிவசங்கர் மாஸ்டர்

ஒரு சிலரைப் பார்த்ததுமே, நமக்குள் ஒரு புத்துணர்ச்சி வந்துவிடும். அவர்களிடம் பேசினால், நம்மைச் சிரிக்கச் சிரிக்கவைத்துவிடுவார்கள். அவர்களுக்குள் இருக்கிற துக்கங்களையும் துயரங்களையும் கடந்து, அவர்களைச் சூழ்ந்திருப்பவர்களைச் சிரிக்கவைப்பதில் ரசனை கொண்டவர்கள் பலருண்டு. இவற்றுக்கெல்லாம் வயதோ உடல் எடையோ ஒரு பொருட்டே இல்லை என்பதை நாம் உணருவதே இல்லை. திரையுலகில், தனக்கென நடன அசைவுகள் வைத்துக்கொண்டு, ஏராளமான நடிகர் நடிகைகளை, மொழி பேதமில்லாமல் ஆட்டுவித்து, கலக்கியெடுத்த சிவசங்கர் மாஸ்டர், லொகேஷனில் இருந்தால், அங்கே சிரிப்பு மத்தாப்புகளுக்கும் காமெடி சரவெடிகளுக்கும் பஞ்சமே இருக்காது.

சென்னைதான் பூர்விகம். பாரிமுனையில் அப்பா மிகப்பெரிய பழக்கடை வைத்திருந்தார். சித்திகள், சித்தப்பாக்கள், பெரியம்மாக்கள், பெரியப்பாக்கள், அத்தைகள், அவர்களின் மகன்கள், மகள்கள் என்று மிகப்பெரிய கூட்டுக்குடும்பத்தில் பிறந்து, வளர்ந்தார் சிவசங்கர் மாஸ்டர்.

சிறுவயதில், வீட்டில் உள்ளவர்களுக்கும் தெருவில் உள்ளவர்களுக்கும் மிகச்சிறந்த பொழுதுபோக்கு, ‘டேய் சிவா... ஒரு டான்ஸ் ஆடுடா’ என்பதுதான்! அந்தக் காலத்தில் வைஜெயந்தி மாலா போல, பத்மினி போல, சரோஜாதேவி போல, சிவாஜி போல, எம்ஜிஆர் போல ஆடிக்காட்டுவார் சிவசங்கர். மொத்தத் தெருவும் கரவொலி எழுப்பி, அப்படியே அவரை அள்ளியெடுத்துக் கொண்டாடும். ஆனால் அப்பா வந்தால், கால்கள் ஆடாமல் அசையாமல் இருக்கும். அவருக்கு, ‘படிக்கிற வயசுல டான்ஸ் என்னடா டான்ஸ்’ என்பதுதான் கொள்கை.

இத்தனைக்கும் மிகப்பெரிய டான்ஸ் மாஸ்டரான சிவசங்கர் மாஸ்டரின் சிறு வயது சோகம் நிரம்பியது. அவரின் காலமுள் அப்படியே நின்றுவிட்டிருந்தது சிலகாலம். ஆமாம்... முதுகுத் தண்டில் சிறுவயதிலேயே அவருக்குப் பிரச்சினை. ஆபரேஷன் செய்தார்கள். எட்டு வயது வரைக்கும், பள்ளிக்குக்கூட போகாமல் படுத்தபடுக்கையாக இருந்தவர், பிறகு தவழவும் நிற்கவும் நடக்கவும் ஓடவும் தொடங்கினார். பிறகு ஆடவும் ஆரம்பித்தார்.

’நம்ம புள்ளைக்கு டான்ஸ் நல்லா வருதுங்க’ என்று வீடு சொல்லியது. ‘உம்புள்ள பிரமாதமா ஆடுறான்யா. அவனை அந்த லைன்லயே விடு’ என்று அப்பாவிடம் அவரின் நண்பர்கள் சொன்னார்கள். பாரிமுனையில் இருக்கும் கொத்தவால்சாவடி நண்பர்களும் சிவசங்கரின் அப்பாவான கல்யாணசுந்தரத்திடம் சொல்ல, அவரும் மனம் மாறினார். மயிலாப்பூரில் உள்ள நடராஜன் மாஸ்டரிடமும் சகுந்தலா மாஸ்டரிடமும் முறைப்படி நடனம் கற்கத் தொடங்கினார் சிவசங்கர்.

மற்றவர்கள் ஆடும் விதத்திற்கும் சிவசங்கர் ஆடுவதற்கும் வித்தியாசத்தை உணர்ந்தார்கள். மீராவின் துக்கத்தை, ராதையின் குதூகலத்தை ஆடும்போது, மீராவாகவும் ராதையாகவும் அச்சு அசலாக பெண்ணின் அசைவுகளும் கொண்டு அசத்தினார். எல்லோரும் வியந்தார்கள்.

மூன்று வருடங்களுக்கு முன்பு, சிவசங்கர் மாஸ்டருக்கு போன் செய்து, பேட்டி வேண்டும் என்று கேட்டேன். அடுத்த வாரமே நம் அலுவலகத்துக்கு வந்தார். கிட்டத்தட்ட மூன்று மணி நேரம் பேட்டி கொடுத்தார். அவர் பேட்டியைக் கடந்து பேசிய விஷயங்களும் அந்தப் பேச்சுக்கு அவர் வெளிப்படுத்திய பாவனைகளும் ஆச்சரியமாகவும் ஈர்க்கும் விதமாகவும் இருந்தன.

‘’எங்கள் வீட்டில் நிறைய பெண்கள். அம்மா, சின்னம்மா, பெரியம்மா, அவர்களின் மகள்கள் என ஏகப்பட்ட பெண்கள். சிறுவயதில் முதுகுத்தண்டுப் பிரச்சினையால் வீட்டிலேயே முடங்கிக் கிடந்தேன். முழுக்க முழுக்க அவர்களுடன் தான் இருந்தேன். அதனாலோ என்னவோ, என்னுடைய கண்கள், பெண்களின் கண்களைப் போல அசைந்தன. என்னுடைய நடையில் பெண்மையின் நளினம் ஒட்டிக்கொண்டது. நான் கைகளை அசைத்தால், கழுத்தைத் திருப்பினால், பெண்ணின் ஸ்டைலே அதீதமாக வந்தன. என் இளமைக்காலத்தில் இவையெல்லாம் கேலியாகப் பேசப்பட்டாலும் பின்னாளில் நான் திரையுலகில், நடனத்தில் புகழ்பெற்று இருப்பதற்கு இவையும் காரணமாக அமைந்தது’’ என்று அப்போது சொன்னார் சிவசங்கர் மாஸ்டர்.

சிவாஜியும் ஜெயலலிதாவும் நடித்த ‘பாட்டும் பரதமும்’ படம், நம்மால் மறக்கமுடியாத படம். முக்கியமாக, சிவசங்கர் மாஸ்டருக்கு மறக்கவே மறக்காத படம். இந்தியாவின் மிகச்சிறந்த நடன இயக்குநரான சலீம் மாஸ்டரிடம் இந்தப் படத்தில்தான் உதவி நடன இயக்குநராக சேர்ந்து பணியாற்றத் தொடங்கினார். சலீம் சாரைப் பற்றி குறிப்பிடும் போதெல்லாம், நெகிழ்ந்து போய், கைகூப்பி, நன்றியுடனும் கண்ணீருடனும் குருநாதரை சிலாகித்தார் சிவசங்கர் மாஸ்டர்.

பிறகு, ‘குருவிக்கூடு’ எனும் படத்தில் டான்ஸ் மாஸ்டராகப் பணியாற்றத் தொடங்கினார். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி என பதினான்கு மொழிகளின் படங்களில் நடன இயக்குநராகப் பணியாற்றினார். இயக்குநர் பாரதிராஜாவின் ‘மண்வாசனை’ படத்துக்கும் நடனம் அமைத்தார். பாலுமகேந்திராவின் ‘மறுபடியும்’ படத்தில் ‘ஆசை அதிகம் வச்சு’ என்ற பாடலுக்கு ரோகிணி ஆடும் நடனத்தை இயக்கியது இவர்தான்!

இயக்குநர் விக்ரமனின் ‘பூவே உனக்காக’ படத்துக்கும் ‘சூர்ய வம்சம்’ முதலான படத்துக்கும் நடனம் அமைத்தார். ‘சலக்கு சலக்கு சரிகைச் சேலை சலக்கு சலக்கு’ என்று சரத்குமாரும் தேவயானியும் ஆடும் ஆட்டம், இவருடைய ஆட்டம்தான்! விஜயகாந்த், கார்த்திக், சத்யராஜ், முரளி, மோகன், ரஜினி என பலரின் படங்களுக்கும் நடன இயக்குநராகப் பணியாற்றிய சிவசங்கரன் மாஸ்டர், 800 படங்களுக்கும் மேல் நடனம் அமைத்திருக்கிறார்.

இயக்குநர் கே.எஸ்.ரவிகுமார் இயக்கத்தில், அஜித் முதன் முறையாக மூன்று வேடங்களில் நடித்த ‘வரலாறு’ படத்தில் சிவசங்கர் மாஸ்டரும் நடித்திருந்தார். அதில், பெண்ணைப் போல் நளினம் கொண்ட கதாபாத்திரத்தில் அஜித்தை நடிக்கவைக்க, கே.எஸ்.ரவிகுமாருக்கு இன்ஸ்பிரேஷனாக இருந்தவரே சிவசங்கர் மாஸ்டர்தான்! படத்திலும் நடித்ததுடன், சின்னச் சின்ன அசைவுகளையும் கூட அஜித்துக்குச் சொல்லிக் கொடுத்த பங்களிப்பையும் செய்தார் சிவசங்கர் மாஸ்டர்.

தெலுங்குப் படவுலகில், சிவசங்கர் மாஸ்டரின் நடன அசைவுகளுக்கு மிகப்பெரிய வரவேற்பு உண்டு. ‘டைட் ஷெட்யூல்’ இருந்தாலும் சிவசங்கர் மாஸ்டர் வருகைக்காக, செட்டுகள் போடப்பட்டுக் காத்திருந்த இயக்குநர்களும் நடிகர் நடிகைகளெல்லாம் கூட உண்டு. ‘இந்தப் படத்தில் இந்தப் பாட்டுக்கு சிவசங்கர் மாஸ்டர் டான்ஸ் அமைக்கிறாரா... அப்படியெனில் இந்த வருடத்தில் இதுதான் ஹிட்டான பாட்டு’ என்று சொல்லும் அளவுக்கு தமிழிலும் தெலுங்கிலும் பேரெடுத்தார் மாஸ்டர்.

’கண்ணா லட்டு தின்ன ஆசையா’ படத்தில் கவனம் ஈர்க்கும் கதாபாத்திரம் செய்தார். அதேபோல, இயக்குநர் பாலாவின் ‘பரதேசி’ படத்திலும் நல்ல கதாபாத்திரம் அமைந்தது இவருக்கு. இயக்குநர் விக்னேஷ் சிவனின் இயக்கத்தில் சூர்யா நடித்த ‘தானா சேர்ந்த கூட்டம்’ படத்தில் சூர்யாவின் குழுவில் உள்ளவரில் ஒருவராக, தனித்துத் தெரிந்தார் சிவசங்கர் மாஸ்டர்.

ராஜமெளலியின் ‘மகதீரா’ திரைப்படம், தெலுங்கிலும் தமிழிலும் பட்டையைக் கிளப்பியது. இந்தப் படத்தில் ‘தீரா தீரா’ எனும் பாடலில் புகுந்து விளையாடியிருப்பார் மாஸ்டர். ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை இந்தப் பாடல் பெற்றதற்கு, சிவசங்கர் மாஸ்டரின் நடன அசைவுகள் மிக முக்கியக் காரணம் என ஆந்திரப் பத்திரிகைகள் விமர்சனங்களில் குறிப்பிட்டன. இந்தப் பாடலுக்காக விருதும் கிடைத்தது. தமிழிலும் பல படங்களுக்கு, சிறந்த நடன இயக்குநர் விருதுகள் முதலான பல விருதுகளைப் பெற்றிருக்கிறார். படங்களிலும் நடித்து ஜொலித்தார்.

’துள்ளுவதோ இளமை’, ‘காதல் கொண்டேன்’ என ஹைக்ளாஸ் ஆடியன்ஸைக் கவரும் கதையில் அமைந்த படங்களில் நடித்துக் கொண்டிருந்த தனுஷ், இயக்குநர் சுப்ரமணிய சிவா இயக்கத்தில் ‘திருடா திருடி’ படத்தில் நடித்ததில் எல்லா சென்டர் மக்களுக்கும் பிடித்தமானவரானவராக ஆனார்.

2003-ம் ஆண்டு வெளியான ‘திருடா திருடி’ படத்தில், தனுஷும் சாயாசிங்கும் குத்தாட்டம் போட்ட, ‘மன்மதராசா மன்மதராசா’ பாடலை கிட்டத்தட்ட 20 வருடங்கள் கழித்தும் மறக்கவில்லை ரசிகர்கள். அந்த துள்ளலான இசைக்குத் தகுந்தபடியான ஆட்டத்தையும் அசைவுகளையும் அமைத்தவர் சிவசங்கர் மாஸ்டர்!

இத்தனை திறமைகளையும் கடந்த சிவசங்கர் மாஸ்டரை அன்பாளராக உணரும் தருணம் சிலிர்க்கவைத்தது. நமக்கு பேட்டியளித்த போதும், பேட்டிக்கு நடுவிலும் பெற்றோர்களையும் அவர்களை வளர்த்து ஆளாக்கிய உறவினர்களையும் நடராஜன் மாஸ்டரையும் சகுந்தலா மாஸ்டரையும் மறக்காமல் சொல்லிக்கொண்டே இருந்தார். ’சலீம் மாஸ்டர் எனக்கு கடவுள் மாதிரி’ என்று சொல்லி அழுதார்.

கரோனா முழுமூச்சுடன் தாக்கிக் கொண்டிருந்த காலகட்டத்தில் ஒருநாள் போன் செய்து, ‘’கண்ணு... ஒரு உதவி’’ என்று கேட்டார். ‘’சொல்லுங்க மாஸ்டர்’’ என்றேன். ‘’இந்த கரோனாவையெல்லாம் பொருட்படுத்தாம, எத்தனையோ டாக்டர்கள், நர்ஸ்கள், ஆம்புலன்ஸ் டிரைவர்கள், தூய்மைப் பணியாளர்கள் தங்களது கடமைகளைப் பயப்படாம செஞ்சிக்கிட்டே வர்றாங்க. அவங்களுக்கு நாம எல்லாரும் நன்றி சொல்லுவோம்னு ஒரு வீடியோ பேசி அனுப்பட்டுமா கண்ணு. அதைக் கொஞ்சம் போடு ராஜா’’ என்று கேட்டுக்கொண்டார். சரியென்று சொல்ல, வீடியோ எடுத்தெல்லாம் அனுப்பத்தெரியாத நிலையிலும் ஹைதராபாத்தில் இருந்துகொண்டு, தன் மகனிடம் சொல்லி, பேசி, வீடியோ எடுத்து அனுப்பிவைத்தார். அந்தப் பேச்சில் நன்றியும் மக்கள் சேவையாற்றுகிற பணியாளர்களுக்கான சல்யூட்டும் நிறைந்திருந்தன.

சில மாதங்கள் கழித்து ஒருநாள்... இரவு 11 மணிக்கு மேல் செல்போன் ஒலித்தது. பார்த்தால்... சிவசங்கர் மாஸ்டர். ‘’வணக்கம் மாஸ்டர்’’ என்றேன். “ராம்ஜித் தம்பீ... நல்லாருக்கீங்களா. வீட்ல எல்லாரும் நல்லாருக்காங்களா. எனக்கு கரோனா. ஆஸ்பத்திரில இருக்கேன். ரொம்ப பேசமுடியல. கஷ்டமா இருக்கு. இங்கே இருக்கிற டாக்டர்களும் நர்ஸம்மாக்களும் என்னை குழந்தையைப் போல பாத்துக்கறாங்க தம்பீ. குணமாகி வந்ததும், இந்த டாக்டர்களைப் பத்தியெல்லாம் பேசி ஒரு வீடியோ அனுப்பறேன்.

அதைப் போடுங்க. அப்பதான் அவங்களைப் போல உள்ளவங்களுக்கு உரிய மரியாதை கிடைக்கும். கரெக்ட்டுதானே கண்ணு. சரியான உடனே அனுப்பறேன்’’ என்று சொல்லி போனை வைத்தார். அவரிடமிருந்து வீடியோ வருமென்று இன்னமும் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டே இருக்கிறேன். ஆனால் வீடியோவை அனுப்புவதற்குத் தான் சிவசங்கர் மாஸ்டர் இல்லை.

1948-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 7-ம் தேதி பிறந்த சிவசங்கர் மாஸ்டர், 2021-ம் ஆண்டு, நவம்பர் மாதம் 28-ம் தேதி 73-வது வயதில் மறைந்தார்.

எல்லோரிடமும் சிரிக்கச் சிரிக்கப் பேசி, இயல்பான ஆட்டங்களில் நம்மையெல்லாம் கவர்ந்த சிவசங்கர் மாஸ்டரை, ‘மன்மத ராசா... மன்மத ராசா’ என்றோ, ‘சலக்கு சலக்கு சரிகைச் சேலை சலக்கு சலக்கு’ என்றோ நடனப் பாடல்கள் என்றென்றும் நமக்கு நினைவுபடுத்திக்கொண்டே இருக்கும்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in