‘சுந்தரத் தெலுங்கினில்...’ - சிவகார்த்திகேயனின் ‘பிரின்ஸ்’ சர்ப்ரைஸ்!

‘சுந்தரத் தெலுங்கினில்...’ - சிவகார்த்திகேயனின் ‘பிரின்ஸ்’ சர்ப்ரைஸ்!

சிவகார்த்திகேயன் நடித்துவரும் ’பிரின்ஸ்’ திரைப்படம் தெலுங்கு பேசும் நல்லுலகில் அவருக்குப் புதிய ரசிகர்களைச் சேர்க்கும் எனும் எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது. இப்படத்தில் அவரது புதிய முயற்சி அதற்கு முக்கியக் காரணமாக அமையும் என்கிறது சினிமா வட்டாரம்.

அனுதீப் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ’பிரின்ஸ்’. இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தமிழ், தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளில் இந்தப் படம் உருவாகிவருகிறது.

தெலுங்கில் முன்னணி இசையமைப்பாளராக வலம்வரும் தமன் இந்தப் படத்துக்கு இசையமைக்கிறார். சிவகார்த்திகேயனின் நீண்டநாள் நண்பரான தமன், முதன்முறையாக அவரது படத்துக்கு இசையமைப்பது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது. சிவகார்த்திகேயன் ஜோடியாக உக்ரைன் நாட்டின் நடிகை மரியா நடித்துள்ளார். இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. படத்தின் சிங்கிள் பாடல், டீஸர், டிரைலர் ஆகியவை விரைவில் வெளியாக உள்ளன.

இந்நிலையில் இந்தப் படத்தில் முதல் முறையாகத் தெலுங்கிலும் சிவகார்த்திகேயன் சொந்தக் குரலில் பேசவிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. தான் நடிக்கும் படங்களின் பாடல்களை எழுதும் அளவுக்குத் தமிழ் மொழியில் ஈடுபாடு காட்டும் சிவகார்த்திகேயன், தெலுங்கிலும் முத்திரை பதிப்பாரா என்று அவரது ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கிறார்கள்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in