
சிவகார்த்திகேயன் ஜோடியாக உக்ரைன் நடிகை நடிக்க இருப்பதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.
சிவகார்த்திகேயன், இப்போது தெலுங்கு இயக்குநர் அனுதீப் இயக்கும் படத்தில் நடித்து வருகிறார். இவர் ‘ஜதி ரத்னலு’என்ற காமெடி படத்தை தெலுங்கில் இயக்கியவர். சிவகார்த்திகேயனின் 20-வது படமான இதில் சத்யராஜ் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். தமிழ், தெலுங்கில் உருவாகும் இந்தப் படத்தில் நவீன் பொலிஷெட்டி, பிரேம்ஜி அமரன் உட்பட பலர் நடிக்கின்றனர்.
ஸ்ரீவெங்கடேஷ்வரா சினிமாஸ் நிறுவனம் சுரேஷ் புரொடக்ஷன்ஸ் நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கிறது. தமன் இசை அமைக்கிறார். மற்ற நடிகர், நடிகைகள் மற்றும் டெக்னீஷியன்கள் உள்ளிட்ட விவரங்களை படக்குழு விரைவில் அறிவிக்க இருக்கிறது. இதன் படப்பிடிப்பு சமீபத்தில் காரைக்குடியில் தொடங்கியது. இதையடுத்து பாண்டிச்சேரியில் நடக்க இருக்கிறது.
தமிழ் இளைஞரை வெளிநாட்டுப் பெண் காதலிப்பதைப் போன்ற கதையை கொண்ட இந்தப் படத்தில், பிரிட்டீஷ் நடிகை ஒலிவியா மாரிஸ், சிவகார்த்தியேகன் ஜோடியாக நடிப்பதாகக் கூறப்பட்டது. இவர் ராஜமெளலியின் ’ஆர்ஆர்ஆர்’ படத்திலும் நடித்துள்ளார். இந்நிலையில், உக்ரைனைச் சேர்ந்த மரியா ரியபோஷப்கா என்ற நடிகை நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. படக்குழு இதை உறுதிப்படுத்தவில்லை.