`டான், பான் இந்தியா, ரஜினி படம், சினிமா பிசினஸ்’: சிவகார்த்திகேயன் ஸ்பெஷல் பேட்டி!

`டான், பான் இந்தியா, ரஜினி படம், சினிமா பிசினஸ்’:
சிவகார்த்திகேயன் ஸ்பெஷல் பேட்டி!

சிவகார்த்திகேயனின் ’டான்’, வரும் 13-ம் தேதி வெளியாகிறது. கல்லூரி பின்னணியில் நடக்கும் கதை. புரமோஷன் வேலைகளில் பரபரப்பாக இருக்கிறது படக்குழு. சிபி சக்கரவர்த்தி இயக்கி இருக்கும் இந்தப் படத்தில் பிரியங்கா மோகன் நாயகியாக நடித்திருக்கிறார். படம் பற்றி சிவகார்த்திகேயனிடம் பேசினோம்.

’டான்’-ல நீங்கதான் டானா?

கதைப்படி, கல்லூரியில பசங்க டான் அப்படின்னு அழைக்கிறதால, படத்துக்கு இந்த டைட்டில். கல்லூரி மாணவனா நடிச்சிருக்கேன். டயட் கன்ட்ரோல் பண்ணி, மாணவன் தோற்றத்துக்கு மாறியிருக்கேன். வழக்கமா எல்லா படங்கள்லயும் 25 வயதுக்குரியவனா நடிக்கிறேன். அதுல இருந்து நாலு வயது குறைஞ்ச மாதிரி இதுல நடிச்சிருக்கேன். ஸ்கூல்பகுதியும் வருது. ஸ்கூல் யூனிபார்ம் போட்டுட்டு லுக் டெஸ்ட் பண்ணினப்ப, எனக்கு கன்வின்சிங்கா இருக்கான்னு செக் பண்ணினேன். வெயிட் குறைச்சு, அதுக்காகவும் மெனக்கெட்டோம். சரி, அந்த தோற்றத்துக்கு சரியா இருக்கோம்னு ஓகே ஆனதும் நடிச்சேன். இது கல்லூரி பின்னணி படம் அப்படிங்கறதை தாண்டி, எல்லாருக்கும் பிடிக்கிற மாதிரியான விஷயங்கள் இருக்கும்.

வாழ்க்கையில கல்லூரி வாழ்க்கை எல்லோருக்கும் முக்கியமானது...

கண்டிப்பா. கல்லூரி வாழ்க்கையை திரும்ப வாழ்றதுக்கு இந்தப் படம் எனக்கு வாய்ப்பு கொடுத்திருக்கு. என் வாழ்க்கையில பெரிய திருப்புமுனை தந்த இடம் கல்லூரிதான். கல்ச்சரல் நிகழ்ச்சிகள்ல கலந்துக்கிட்டது, என் மிமிக்ரி திறமையை வெளிப்படுத்தற வாய்ப்புக் கிடைச்சது, காலேஜ் முடிஞ்சதும் டிவி வாய்ப்பு கிடைச்சது எல்லாம் அப்பதான். இந்தப் படம் பார்க்கும்போது, எல்லோரும் அவங்க கல்லூரி வாழ்க்கையை நினைச்சுப் பார்ப்பாங்கன்னு நம்பிக்கை இருக்கு. அது நடந்ததுன்னா, அதுதான் இந்தப் படத்தோட வெற்றின்னு சொல்வேன்.

சிவகார்த்திகேயன், பிரியங்கா அருள் மோகன்
சிவகார்த்திகேயன், பிரியங்கா அருள் மோகன்

சீரியஸ் படங்கள்ல நடிக்கிறதில்லைன்னு உங்களை சொல்றாங்களே?

எனக்கு பொழுதுபோக்கு படங்கள் மேலதான் ஆர்வம். இருந்தாலும் அழுத்தமான, சமூகத்துக்குத் தேவையான கதைகள் வந்தால் கண்டிப்பா நடிப்பேன். ’கனா’ நீங்க சொல்ற மாதிரியான படம்தான். ’வேலைக்காரன்’, ’ஹீரோ’ படங்கள்ல சமூகத்துக்குத் தேவையான விஷயங்களைப் பேசியிருக்கோம். இன்னைக்குப் புதிய கதை களங்களை படமா பண்ணலாம்ங்கற தைரியம் எல்லாரும் வந்திருக்கு. அதனால அதுமாதிரி ஸ்கிரிப்ட் கிடைச்சா கண்டிப்பா பண்ணுவேன்.

’பான் இந்தியா’ பேச்சு, இப்ப அதிகமா இருக்கு. உங்களுக்கு அந்த எண்ணம் இருக்கா?

அந்த மாதிரியான கதைகள்ல நடிக்கும்போது பான் இந்தியாவுக்கு போகலாம். சில கதைகள், நம்ம மண்ணுக்கு மட்டுமே சொந்தமானதா இருக்கும். நான் நடிச்ச ’வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ படத்தை வேற மாநிலத்துல ரிலீஸ் பண்ணினா, எந்த மாதிரி ரசிப்பாங்கன்னு தெரியாது. எல்லா மொழி ரசிகர்களும் ஏத்துக்கற மாதிரி ஒரு கதை கிடைக்கும்போது அதை பான் இந்தியா படமா பண்ணலாம். நான் நடிச்சிருக்கிற ’அயலான்’ படத்தை அப்படி பண்ணலாம்னு ஐடியா இருக்கு.

முதன் முதலா தெலுங்கு படத்துல நடிக்கிறீங்க...

அது தெலுங்கு படம் இல்லை. டைரக்டர் அனுதீப் தெலுங்குல படம் பண்ணியிருக்கார்ங்கறதால அப்படி சொல்றாங்க. அது தமிழ்ப் படம்தான். அப்படித்தான் அதை உருவாக்குறோம். கூடவே சத்யராஜ், தமன் இரண்டு பேரும் தெலுங்கு படங்களும் பண்றதால, இந்தத் தமிழ்ப் படத்தை அங்கயும் ரிலீஸ் பண்றாங்க. அதே நேரம், ’டான்’ படம் தெலுங்குல காலேஜ் டான்’ங்கற பெயர்ல ரிலீஸ் ஆகப் போகுது.

நீங்க தயாரிப்பாளராகவும் இருக்கீங்க. சினிமா பிசினஸ் இப்போ எப்படியிருக்கு?

ஆரோக்கியமா இருக்குன்னுதான் நினைக்கிறேன். ஓடிடி வந்ததுக்குப் பிறகு சினிமா நல்லாயிருக்கு. பெரிய படங்களை தைரியமா எடுக்கலாம் அப்படிங்கற நம்பிக்கை தயாரிப்பாளர்களுக்கு வந்திருக்கு. கரோனாவுக்கு பிறகு ரசிகர்கள் தியேட்டருக்கு வந்து படம் பார்க்க ஆரம்பிச்சிருக் காங்க. இது நல்ல மாற்றமா இருக்கு. ஓடிடியிலயும் பார்க்கிறாங்க, தியேட்டர்களுக்கும் வர்றாங்க. கதைகள்லயும் கொஞ்சம் கவனம் செலுத்தினா, சினிமா பிசினஸ் இன்னும் நல்லா இருக்கும்.

ரஜினி படத்துல நடிக்கிறீங்க, பாடல் எழுதறீங்கன்னு சொல்றாங்களே?

அனிருத், நெல்சன் ரெண்டுபேரும் நண்பர்கள். ஆனால், அந்தப் படம் பற்றி எனக்கு எதுவும் தெரியாது. அவங்க என்னைக் கூப்பிடலை. அந்தப் படம் இப்ப ஆரம்பக் கட்டத்துலதான் இருக்கு. ஆனா, நான் பாடல் எழுதறேன், நடிக்கிறேன்னு நிறைய நியூஸ் வந்திடுச்சு. இதுவரை அப்படியில்லை.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in