சிவகார்த்திகேயன் : சின்னத் திரையிலிருந்து சினிமா திரைக்கு உயர்ந்த கலைஞன்!

- பிறந்தநாள் சிறப்புப் பகிர்வு
சிவகார்த்திகேயன் - கீர்த்தி சுரேஷ்
சிவகார்த்திகேயன் - கீர்த்தி சுரேஷ்

உண்மையான திறமையும் வேலையில் அர்பணிப்பும் இருந்துவிட்டால், அதிர்ஷ்டம் என்பதையெல்லாம் கடந்து, ஒருவர் எடுத்து வைக்கிற ஒவ்வொரு அடியும் முன்னேற்றப் பாதையை நோக்கித்தான் இருக்கும். நம் தமிழ் சினிமாவில் இப்படியான கலைஞர்கள், எத்தனையோ பேர் ஜெயித்திருக்கிறார்கள். அந்த ஜெயிப்பை அடுத்தடுத்த கட்டங்களுக்கும் எடுத்துச் சென்றிருக்கிறார்கள். முக்கியமாக, வெற்றியைத் தக்கவைத்துக் கொள்ளத்தான் இங்கே பெரும்போராட்டம் அவசியம். அத்தனையிலும் நின்று வென்று காட்டிக் கொண்டிருப்பவர் சிவகார்த்திகேயன்.

சிங்கம்புணரி பக்கம் சின்ன கிராமத்தில் பிறந்து, அப்பா மாற்றலாகிச் செல்லும் ஊருக்கெல்லாம் பயணப்பட்டு, அங்கே படித்தவர் சிவகார்த்திகேயன். கடைசியாக அவரது படிப்புக்கு நிரந்தரமாக அமைந்த இடமாக திருச்சி அமைந்தது. இளம் வயதில் இருந்தே அடுத்தவரின் நடையை, பார்வையை, பேச்சைக் கிரகித்துக் கொள்ளும் குணம் கொண்ட சிவகார்த்திகேயனுக்கு, தன் நட்பு வட்டத்தில் உள்ள நண்பர்களைக் கலாய்ப்பதற்காக அப்படியெல்லாம் நண்பர்களைப் போலவே பேசுவதும் உடல்மொழியில் அசத்துவதும் சுலபமாக வந்தது.

முக்கியமாக, குரலையே மாற்றிப் பேசி பிரமிக்கவைத்தார். இந்த குரல் மாற்றுகிற மாயாஜால மிமிக்ரி, கமல், ரஜினி, சிவாஜி, எம்ஜிஆர் என்றெல்லாம் தொடர, கல்லூரியில் மேடையேற்றினார்கள். அவரும் அசத்திக் காட்டி அப்ளாஸ் அள்ளினார். ஆக, நடிகராக திரைக்கு வருவதற்கு முன்னமே, மாணவப் பருவத்திலேயே கரவொலிகளை தன் பக்கம் திருப்பிக் கொண்ட திறமைக்காரரானார்.

திறமைசாலிகளைக் கண்காணித்து, கணித்து, அவர்களைத் தூக்கிவிடும் ஏணி என்றுதான் விஜய் டிவியை சிவகார்த்திகேயன் உட்பட பலரும் சொல்கிறார்கள். சிவகார்த்திகேயேன், கல்லூரியில் செய்த மிமிக்ரியையும் கடந்து, இன்னும் தன் டைமிங் காமெடிகளை விஜய் டிவியின் நிகழ்ச்சித் தொகுப்பாளராகி வழங்கத் தொடங்கினார். இவரையும் இவரது டைமிங் கமெண்டுகளையும் பார்க்கவும் கேட்கவும் தமிழகம் முழுக்க ஒரு கூட்டம் திரண்டது.

தொலைக்காட்சி நேயர்களிடம் பிரபலமான சிவகார்த்திகேயனை, திரையுலகமும் உற்றுக் கவனித்தது. அப்படித்தான் ‘பசங்க’ படத்தின் இயக்குநரான பாண்டிராஜ், சிவகார்த்திகேயனிடம் உள்ள நடிப்புத்திறமையை இனம் கண்டுகொண்டார். தன் மூன்றாவது படமான ‘மெரினா’ படத்தில் நாயகனாக அறிமுகப்படுத்தினார். அடுத்ததாக தனுஷுடன் ‘3’ படத்திலும் நடித்தார்.

மீண்டும் பாண்டிராஜ், சிவகார்த்திகேயனை அழைத்து நடிக்க வைத்தார். இந்த முறை, சிவகார்த்திகேயன் ஜோடி போட்டு காமெடி செய்ய சூரியையும் இணைத்தார். ‘கேடி பில்லா கில்லாடி ரங்கா’ திரைப்படத்தின் ஷூட்டிங் சிவகார்த்திகேயன் வளர்ந்த திருச்சியிலும் பொன்மலைப் பகுதியிலும் நடக்க, இன்னும் உற்சாகம் பொங்க நடித்தார்.

கலகலவென நடித்துக் கொண்டே வந்து, இறுதிக் காட்சியில் அப்பாவின் பாசத்தையும் தியாகத்தையும் புரிந்து உணர்ந்து நம்மைக் கலங்கடிக்கும் கதாபாத்திரத்தை சிறப்புறச் செய்திருந்தார். மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. இந்தப் படத்துக்குப் பிறகு சிவகார்த்திகேயனுக்கு சம்பளமும் எகிறத் தொடங்கியது.

இயக்குநர் எழில், ‘மனம்கொத்திப் பறவை’ படத்தில் அட்டகாசமான கேரக்டரை வழங்கினார். ’எதிர்நீச்சல்’ இன்னொரு பாய்ச்சலானது. தன்னால் வெறும் காமெடி மட்டுமின்றி, எல்லா உணர்வுகளையும் வெளிக்காட்ட முடியும் என்பதை நிரூபித்தார். இதையடுத்த வேளையில்தான் இயக்குநர் பொன் ராம், சிவகார்த்திகேயன் - சூரியை இணைத்தார்.

‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ படத்தைக் கொடுத்தார். படத்தைப் பார்த்த ஒவ்வொரு இளைஞனும் சிவகார்த்திகேயனுக்குள் தங்களைப் பார்த்துக் கொண்டார்கள். ஒவ்வொரு பெற்றோரும் தங்கள் மகனைப் போலவே குறும்புகள் செய்கிற சிவகார்த்திகேயனை தங்கள் பிள்ளையாகவே பார்க்கத் தொடங்கினார்கள். அவரின் அடுத்த வளர்ச்சியானது இந்தப் படத்திலிருந்து தொடங்கியது.

‘பணம் வருது, சும்மா நடிச்சாப் போதும்’ என்று வரிசைகட்டி வந்த வாய்ப்புகளையெல்லாம் ஏற்றுக் கொள்ளவில்லை சிவகார்த்திகேயன். ’மான் கராத்தே’ பீட்டர் ஒரு மாதிரி நம்மை ஈர்த்தார். ’காக்கிசட்டை’ மதிமாறன், கெத்துக்காட்டி, த்ரில்லரிலும் ஆக்‌ஷனிலும் அதகளம் பண்ணினார். ’ரஜினி முருகன்’ படத்தைப் பார்த்துவிட்டு, ‘இப்படியொரு கலகல ஹீரோவும் எல்லாருக்கும் பிடிச்ச முகமும் கிடைச்சு பல வருஷமாச்சுப்பா’ என ரசிகர்கள் பாராட்டினார்கள்.

ஒரு வீட்டில் ஒருவருக்கு அந்த நடிகரைப் பிடிக்கும். அக்காவுக்கு இந்த நடிகரைப் பிடிக்கும். அப்பாவுக்கு ஒரு நடிகரையும் அம்மாவுக்கு வேறொரு நடிகரையும் பிடிக்கும். ஆனால், ஒரு குடும்பத்தில் உள்ள அத்தனை பேருக்கும் பிடித்த நடிகராகிப் போனார் சிவகார்த்திகேயன். அதுவே அவரின் பலமாயிற்று.

‘ரெமோ’ சிவகார்த்திகேயன் ஜாலியும் கேலியுமாக ரவுசு பண்ணினார். இயக்குநர் மோகன் ராஜா இயக்கத்தில், ஃபகத் ஃபாசிலுடன் இணைந்து அறிவு எனும் கதாபாத்திரத்தில், சமூகப் பொறுப்பை உணர்ந்து அந்தக் கேரக்டருக்கு உரிய நியாயங்களைச் சேர்த்து, ‘என்னால் இப்படியும் நடிக்க முடியும்’ என்பதை நிரூபித்தார். அடுத்து, ‘சீமராஜா’வும் ‘மிஸ்டர் லோக்கல்’ திரைப்படமும் பெரிதாகக் கவரவில்லை. பாக்ஸ் ஆபீஸ் விளையாட்டுக்கே வரவில்லை. ஆனாலும் சிவகார்த்திகேயனின் மார்க்கெட் வேல்யூ குறையாமல் அப்படியே இருந்தது. பாண்டிராஜின் ‘நம்ம வீட்டு பிள்ளை’யில் அண்ணனாக உருமாறினார் சிவகார்த்திகேயன். ஐஸ்வர்யா ராஜேஷைத் தாங்கும் அண்ணன் கேரக்டரில், ‘நம்ம வீட்டு பிள்ளை’ என்றே கொண்டாடினார்கள் தமிழக மக்கள்!

இடையே ‘கனா’ மாதிரியான நல்ல கதைக்கு முக்கியத்துவம் கொண்ட படங்களை தயாரிக்கவும் செய்தார். அதன் மூலம் ஐஸ்வர்யா ராஜேஷ் மாதிரியான அற்புதக் கலைஞர்களுக்கு வாய்ப்பும் வழங்கினார். உடனிருந்த கல்லூரிக் காலத்து நண்பர்களையும் அவர்களின் திறமையையும் புரிந்துகொண்டு அவர்களுக்கும் வாசல் திறந்துவிட்டார். தமிழகத்தில் எங்கேனும் ஒரு இயற்கைத் துயரம், சமூக அநீதி மரணங்கள், நல்மனிதர் ‘நெல் ஜெயராமன்’ மறைவு முதலான செய்திகளை வெறுமனே கடந்துபோகாமல், அந்தச் செய்தியில் துடித்துப் போய், அந்தக் குடும்பங்களுக்கு நேரில் சென்று ஆறுதலும் ஆதரவுக்கரமும் கொடுத்து, அவர்களுக்கு உதவிகளைச் செய்தார்.

இன்றைக்கும் எத்தனையோ உதவிகளைச் செய்துகொண்டிருக்கிறார். சிவகார்த்திகேயன் எனும் கலைஞனின் திறமைகளையெல்லாம் கடந்து, அவருக்குள் இருக்கும் மனிதத்தின், நேசத்தின் வெளிப்பாட்டை உணர்ந்து இன்னும் கொண்டாடத் தொடங்கினார்கள் மக்கள்.

’ஹீரோ’வில் ஒரு பாடிலாங்வேஜ் காட்டினார். நெல்சன் இயக்கிய ‘டார்க் காமெடி’ படமான ‘டாக்டர்’ படத்தில், வேறொரு பாடி லாங்வேஜ் காட்டி சிரிக்கவும் ரசிக்கவும் வைத்தார். இத்தனைக்கும் அவரின் ப்ளஸ்ஸாக இருக்கும் டயலாக் டெலிவரியையெல்லாம் ஓரங்கட்டிவிட்டு, மெளனச் சாமியாராகவும் மணி ரத்னம் படத்தின் ஓரிரு வார்த்தை வசனங்களாகவும் பேசியே, நம்மை வெகுவாக ஈர்த்து ஜெயித்தார், சிவகார்த்திகேயன். இன்றைய தேதிக்கு, அஜித், விஜய்யை அடுத்து அதிக மார்க்கெட் வேல்யூ கொண்ட நடிகராஜ வளர்ந்து நிற்கிறார் சிவகார்த்திகேயன்.

திடீரென பாட்டு எழுதுவார். பார்த்தால், அந்தப் படத்தில் அவரே பாடியிருப்பார். தன் மகளையும் சேர்த்துக் கொண்டு பாடி அசத்துவார். நடிப்பது, பாடுவது, எழுதுவது மட்டுமில்லாது படமும் தயாரிப்பார் இந்த எஸ்கே.

1985-ம் ஆண்டு பிப்ரவரி 17-ம் தேதி பிறந்த சிவகார்த்திகேயன், முதல் மூன்று நான்கு இடங்களில் இருக்கிற ஹீரோவாக வளர்ந்துவிட்டாலும் பணிவும் அன்புமாக இருக்கிறார். எல்லா தரப்பினராலும் ரசிக்கப்படும் சிவகார்த்திகேயனை கொத்துப் பூக்களை கரங்களில் கொடுத்து வாழ்த்துவோம்

பிறந்தநாள் வாழ்த்துகள் எஸ்கே!

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in