பொன்மகள் வந்தாள்... மனங்களை வென்றாள்: சிவாஜியின் ‘சொர்க்கம்’ ஒரு மீள்பார்வை!

சென்னை தேவி தியேட்டரில் வெளியான முதல் படம்
’சொர்க்கம்’ படத்தில் சிவாஜி, விஜயலலிதா
’சொர்க்கம்’ படத்தில் சிவாஜி, விஜயலலிதா

’எப்படியாவது ஜெயிக்க வேண்டும்’ என்று நினைப்பவர்கள் பலர். ‘இப்படித்தான் ஜெயிக்க வேண்டும்’ என்று நினைப்பவர்கள் சிலர். ’பொருள்பட வாழ வேண்டும்’ என்று நினைப்பார்கள் சிலர். ‘பொருள் இருந்தால்தான் வாழ முடியும்’ என நினைப்பார்கள் பலர். இப்படியான சிக்கலில் தவிக்கிற பட்டதாரி, நேர்மை குணத்துடன் இருந்தாலும் ஒருகட்டத்தில் தடுமாறினால் எப்படியிருக்கும்? தடம் மாறினால் என்னென்ன துயர்களைச் சந்திக்க வேண்டியிருக்கும்? டி.ஆர்.ராமண்ணா சிவாஜியை வைத்துக் கொண்டு இவற்றைத்தான் ‘சொர்க்கம்’ படத்தில் சொன்னார்.

’நாம் படித்த படிப்புக்கு வேலை கிடைக்காதா, நம் திட்டத்துக்கு அங்கீகாரம் கிடைக்காதா, பணம் குவியாதா’ என்று ஏக்கத்துடன் பூங்காவில் கனவு காணும் சாதாரண இளைஞன் சங்கர். அங்கே வரும் விமலாவும் ஏழ்மை நிலையில்தான் இருக்கிறார். இருவரும் சந்தித்துக் கொள்கிறார்கள். காதல் மலர்கிறது. திருமணமும் நடக்கிறது.

சங்கர்தான் சிவாஜி. விமலாதான் கே.ஆர்.விஜயா. சிவாஜிக்கு ஒரு தங்கை. அவருடைய கணவர் முத்துராமன். சிவாஜி தனது பழைய நண்பர் பாலாஜியைச் சந்திக்கிறார். சீக்கிரமே பணம் சம்பாதிக்க சிவாஜி ஆசைப்படுவதைப் புரிந்துகொண்டு, தன் கெட்ட செயல்களுக்கு அவரைத் துணைக்கு வைத்துக்கொள்கிறார் பாலாஜி.

’சொர்க்கம்’ படத்தில்
’சொர்க்கம்’ படத்தில்

அண்ணனும் தம்பியுமாக இரண்டு மனோகர்கள். இதில் ஒருவர் கெட்டவர். இன்னொருவர்தான் சிவாஜி, பாலாஜி முதலானோரின் முதலாளி. ஒருகட்டத்தில், முதலாளி மனோகரை அடைத்துவைத்துவிட்டு, கெட்ட மனோகரைக் கொண்டு சொத்து அபகரிக்கும் சூழ்ச்சி நடைபெறும். தான் தெரிந்தும் தெரியாமலும் தவறுக்குத் துணைபோகிறோம் என்பதை பின்னே சிவாஜி உணர்வார். அதற்குள் அதுவரை அவரிடம் இல்லாத கெட்ட பழக்கங்களெல்லாம் வந்து குடும்பத்தையே ஒருவழி பண்ணியிருக்கும். ‘நேர்மையாக முன்னேறுவதுதான் சொர்க்கம். பணமும் காரும் பங்களாவும் சொர்க்கமல்ல’ என்பதைப் புரிந்துகொண்டு, நல்ல மனோகரைக் காப்பாற்றுவார். கெட்டது நடக்காமல் தடுப்பார்.

ஆசையையும் இயலாமையையும் வெற்றியையும் வெற்றிக்குப் பிறகு கிடைக்கிற வலிகளையும் வெகு அழகாக தன் நடிப்பில் சிவாஜி வெளிப்படுத்தியிருப்பார். கே.ஆர்.விஜயா தன் பாந்தமான நடிப்பால் அவருக்கு ஈடுகொடுத்திருப்பார். மனோகரின் நடிப்பும் மேனரிஸமும் பேசப்பட்டது. பாலாஜியின் வில்லத்தனம் நமக்கே ஆத்திரம் வரவைக்கும்.

சிவாஜி, பாலாஜி
சிவாஜி, பாலாஜி

நடுவே நாகேஷ் காமெடி இளைப்பாறல். போதாக்குறைக்கு எம்.ஆர்.ஆர்.வாசுவும் சச்சுவும் கணவன் மனைவியாக நடித்திருப்பார்கள். இவர்களுக்கு ஒவ்வொரு விதமான கெட்டப்பில், நிறைய வாசுக்களும் சச்சுகளும் பிறந்திருப்பார்கள். கேலியாகவும் ஜாலியாகவும் காமெடி பண்ணியிருப்பார்கள்.

முத்துராமன் வழக்கமான, இயல்பான நடிப்பைத் தந்திருப்பார். டி.ஆர்.பிக்சர்ஸ் சார்பில், டி.ஆர்.ராமண்ணா படத்தை இயக்கினார். எம்ஜிஆரையும் சிவாஜியையும் இணைத்து ‘கூண்டுக்கிளி’ எடுத்த ராமண்ணா, பின்னர், எம்ஜிஆரை வைத்து தனியாகவும் சிவாஜியை வைத்து தனியாகவும் நிறையப் படங்களைக் கொடுத்தார். சிவாஜியுடன் இணைந்த ‘சொர்க்கம்’ படம் தனித்துவமாகத் திகழ்ந்தது.

படத்துக்கு இசை மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன். எல்லாப் பாடல்களையும் ஹிட்டாக்கியிருந்தார். ‘சொல்லாதே யாரும் கேட்டால்’ என்ற பாடல் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. 'வீடெங்கும் திண்ணை கட்டி/ வெறும் பேச்சு வெள்ளை வேட்டி/ சோம்பலில் மனிதன் வாழ்ந்தால்/ சுதந்திரம் என்ன செய்யும்’ என்று கவியரசர் எழுதியிருப்பார். 'விதியென்று ஏதும் இல்லை/ வேதங்கள் வாழ்க்கை இல்லை/ உடலுண்டு உள்ளம் உண்டு/ முன்னேறு மேலே மேலே’ என்று நம்பிக்கை வரிகளை விதைத்திருப்பார். பாடலின் நடுவே வசனங்களும் இடம்பெறும். அந்த வசனங்களும் வெகுவாக ரசிக்கப்பட்டன.

ஜூலியஸ் சீஸர், புரூட்டஸ் நாடகம்
ஜூலியஸ் சீஸர், புரூட்டஸ் நாடகம்

‘ஒரு முத்தாரத்தில் முப்பது முத்துக்கள் கோர்த்து வைத்திருந்தேன்’ என்ற பாடலும் பி.சுசீலாவின் குரலும் கே.ஆர்.விஜயாவின் சோகம் இழையோடும் முகம் கொண்ட நடிப்பும் கலங்கடித்துவிடும். இதுவும் கண்ணதாசன் எழுதியதுதான்!

படத்தில் ‘ஜூலியஸ் சீஸர்’ வேடத்தில் சிவாஜி நடித்த ஓரங்க நாடகக் காட்சி இடம்பெற்றிருக்கும். புரூட்டஸாக பாலாஜி நடித்திருந்தார். இந்த நாடகக் காட்சியில், சிவாஜியின் நடை, பார்வை, புருவம், அவர் ஆடையை சரிசெய்யும் விதம், திரும்பிப் பார்ப்பது என ஒவ்வொரு அசைவுமே கரவொலி எழுப்பச் செய்திருக்கும்.

'பொன்மகள் வந்தாள்/ பொருள் கோடி தந்தாள்/ பூமேடை வாசல் பொங்கும் தேனாக/ கண்மலர் கொஞ்சம் கனிவோடு என்னை/ ஆளாக்கினாள் அன்பிலே’ என்ற பாடல்தான் இன்றைக்கும் எல்லோராலும் பாடப்பட்டு வருகிற பாடலாக, மிகப்பெரிய ஹிட் பாடலாக அமைந்திருக்கிறது. 'முத்துக்கள் சிரிக்கும் நிலத்தில்/ தித்திக்கும் நினைப்பை விதைக்கும்/ முத்துக்கள் சிரிக்கும் நிலத்தில்/ தித்திக்கும் நினைப்பை விதைக்கும்/ பாவை நீ வா/ சொர்க்கத்தின் வனப்பை ரசிக்கும்/ சித்தத்தில் மயக்கம் வளர்க்கும்/ யோகமே நீ வா / வைரமோ என் வசம் வாழ்விலே பரவசம்/ வீதியில் ஊர்வலம் விழியெல்லாம் நவரசம்’ என்ற வரிகளும் சிவாஜியின் ஸ்டைலான நடிப்பும் விஜயலலிதாவின் ஆட்டமும் ‘ரிப்பீட்டு’ கேட்கவைத்தது.

இந்தப் பாடலின் தாக்கம் உணர்ந்துதான், விஜய் நடித்த ‘அழகிய தமிழ்மகன்’ படத்தில் ‘பொன்மகள் வந்தாள்’ பாடலை ஏ.ஆர்.ரஹ்மான் ரீமிக்ஸ் செய்து இசை பண்ணியிருப்பார். அதேபோல, ஜோதிகா, பாக்யராஜ், பார்த்திபன், பாண்டியராஜன், பிரதாப் முதலானோர் நடித்த படத்துக்கு ‘பொன்மகள் வந்தாள்’ எனும் டைட்டிலை வைத்திருந்தார்கள். ’பிதாமகன்’ படத்தில் கூட பாடல்களின் கலவையில் இந்தப் பாடலும் இடம்பெறும். சூர்யாவும் சிம்ரனும் ஆடுவார்கள்.

இத்தனை பெரிய ஹிட்டைக் கொடுத்த இந்தப் பாடலை ஆலங்குடி சோமு எழுதினார். படத்தின் வசனத்தை சக்தி கிருஷ்ணசாமி எழுதினார். வசனங்களும் பளிச் பளிச்சென்று இருந்தன. சிவாஜியும் கே.ஆர்.விஜயாவும் பேசிக்கொள்ளும் இடங்களில் காட்சிகளும் வசனங்களும் கனமாக இருக்கும்.

1970அக்டோபர் 29-ம் தேதி தீபாவளித் திருநாளில் வெளியானது ‘சொர்க்கம்’. பல தியேட்டர்களில் 100 நாட்களைக் கடந்து ஓடி வசூல் குவித்தது.

இதே வருடத்தில் இதே நாளில், சிவாஜியின் ‘எங்கிருந்தோ வந்தாள்’ படமும் வந்தது. இரண்டு படங்களும் ஒரேநாளில் வெளியாகி இரண்டுமே வெற்றிப் படங்களாக அமைந்தன. இந்தப் படத்தின் இன்னொரு பெருமை... தமிழகம் முழுவதும் வெளியான இந்தப் படம் சென்னையிலும் சில தியேட்டர்களில் வெளியானது. குறிப்பாக, சென்னை தேவி தியேட்டரில் வெளியானது. தேவி தியேட்டரில் வெளியான முதல் படம் ‘சொர்க்கம்’தான் என்பது குறிப்பிடத்தக்கது. பின்னர், தேவி பாரடைஸ் தியேட்டரில் திரையிடப்பட்டது. 100-வது நாளைக் கொண்டாடியது.

இதில் ‘சொர்க்கம்’ பி அண்ட் சி ரசிகர்களுக்கான படமாகவும் ‘எங்கிருந்தோ வந்தாள்’ ஏ அண்ட் பி ரசிகர்களுக்கான படமாகவும் ரசிக்கப்பட்டன. படம் வெளியாகி, 52 ஆண்டுகளாகிவிட்டாலும் இன்று வரை நம் மனதில் நிறைந்து நிற்கிறாள் ‘பொன்மகள் வந்தாள்’.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in