சிவாஜியின் நூறாவது படத்தால் முறிந்த சிவாஜி - பந்துலு நட்பு!

‘நவராத்திரி’யா? ‘முரடன்முத்து’வா’ சர்ச்சை
சிவாஜி - பி.ஆர்.பந்துலு
சிவாஜி - பி.ஆர்.பந்துலு

அப்பாவியாகவும் அதேசமயம் கொஞ்சம் முரட்டுத்தனமாகவும் சிவாஜி கணேசன் நடித்த எத்தனையோ படங்கள் வந்திருக்கின்றன. ஆனால், ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் ஒவ்வொரு விதமாக அணுகியிருப்பார் சிவாஜி. ‘பாகப்பிரிவினை’ சிவாஜி ஒரு தினுசு என்றால், ‘படிக்காத மேதை’ சிவாஜி இன்னொரு ரகம். இப்படித்தான் ‘முரடன் முத்து’விலும் ஜொலித்தார் சிவாஜி. பி.ஆர்.பந்துலு தயாரித்து இயக்கிய ‘முரடன் முத்து’ படத்தில் அப்பாவியாகவும் முட்டாளாகவும் அதீத முரடனாகவும் சிறந்த நடிப்பை வழங்கினார் சிவாஜி கணேசன்.

அண்ணன், தம்பி, தங்கை, அண்ணி, முறைப்பெண் என்று சுற்றிவருகிற சாதாரணமான கதைதான். ஆனால் சாதாரணம் என்று சொல்லிவிடமுடியாதபடி, கதை கட்டமைக்கப்பட்டிருக்கும். பொம்மை செய்யும் அண்ணன், அவருக்கு உதவாமல் ஊரைச் சுற்றும் தம்பி, வெறுமனே ஊர் சுற்றாமல் வம்பிழுத்து, நீதியைத் தட்டிக் கேட்கும் தம்பி. கல்யாண வயதில் தங்கை. தன்னுடைய தங்கையை மைத்துனனுக்கே திருமணம் செய்து வைக்க நினைக்கிறார் அண்ணி. ஆனால் அனுமன் பக்தரான மைத்துனர் (சிவாஜி) அனுமாரைப் போலவே பிரம்மச்சாரியாகவே வாழநினைக்கிறார்.

ஊரில் வட்டித் தொழில் செய்யும் பெரிய மனிதர் (வி.கே.ராமசாமி). அவரின் அண்ணன் மகன் நியாயவான் (நாகேஷ்). ஒருகட்டத்தில், சிவாஜிக்கும் வி.கே.ராமசாமிக்கும் பிரச்சினை. இதையொட்டி வீட்டில் நடக்கும் சண்டையால், தன் தங்கையை அழைத்துக் கொண்டு, தாய்மாமா (ஏ.கருணாநிதி) வீட்டுக்குச் சென்று அடைக்கலமாகிறார். அண்ணனும் அண்ணியும் நொறுங்கிப் போகிறார்கள்.

இதேகட்டத்தில் அண்ணியின் தங்கை (தேவிகா] மீது மச்சினனுக்கு காதல் மலரும். தாய்மாமா வீட்டில் இருந்தபடி அங்கே ஜமீனிடம் (அசோகன்) வேலை பார்ப்பார். ஜமீனின் தம்பிக்கும் (பிரேம் நஸீர்), முரடன் முத்துவின் தங்கைக்கும் (சந்திரகாந்தா) காதல் பூக்கும்.

இதுதெரியாமல் வேறு யாரையோ மாப்பிள்ளையாகப் பார்த்து அதுவும் நடக்காமல் போகும். ஜமீன்தார், தன் தம்பிக்குப் பெண்பார்க்கச் செல்வார். உடன் முரடன் முத்துவும் வண்டியோட்டியாகச் செல்வார். அங்கே... தான் காதலிப்பவள்தான் மணமகள் என்பது தெரியவரும். அதேசமயம், ஜமீன்தாரிடம் தான் காதலிக்கும் விஷயங்களைச் சொல்லி புரியவைப்பாள் அந்தப் பெண்.

பிறகுதான் ஜமீன் தம்பிக்கும் தன் தங்கைக்கும் இருக்கும் காதல் தெரியவரும். ஜமீனிடம் சென்று நடந்ததைச் சொல்லி, திருமணம் செய்துவைக்கும்படி சொல்லுவார் முத்து. அப்போது ஜமீன்தார், ‘’உன் தங்கைக்கும் என் தம்பிக்கும் கல்யாணம் நடக்கணும்னா, நீ உன் காதலியை மறக்கணும். அவளை நான் கல்யாணம் செஞ்சிக்க ஆசைப்படுறேன்’’ என்று குண்டைத் தூக்கிப் போடுவார். வேறுவழியின்றி தன் காதலை முத்து விட்டுக்கொடுப்பார். கடைசியில் சில களேபரங்கள். ஜமீன் திருந்துவார். இரண்டு காதல் ஜோடிகளுக்கும் திருமணம் நடந்தேறும்.

படம், கொஞ்சம் அங்கே, கொஞ்சம் இங்கே என்று பயணித்தாலும், போரடிக்காமல் படத்தை நகர்த்தியிருப்பார் பி.ஆர்.பந்துலு. ‘தாமரைப் பூ குளத்திலே’ என்ற பாடல் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. ’கல்யாண ஊர்வலம்’ என்ற பாடலும் ‘கோட்டையிலே ஒரு ஆலமரம்’ என்ற சீர்காழி கோவிந்தராஜன் பாடிய பாடலும் படத்தில் இடம்பெற்று ஹிட்டாகின.

முரடன் முத்துவாக சிவாஜி. அவரின் அண்ணனாக இயக்குநரும் தயாரிப்பாளருமான பி.ஆர்.பந்துலு. அண்ணியாக எம்.வி.ராஜம்மா. தங்கையாக சந்திரகாந்தா. காதலியாக தேவிகா. ஜமீனாக அசோகன். ஜமீன் தம்பியாக பிரேம் நஸீர். வி.கே.ராமசாமி, நாகேஷ், ஓ.ஏ.கே.தேவர் என பலரும் சிறப்புற நடித்திருந்தார்கள். டி.ஜி.லிங்கப்பா இசையமைத்தார்.

‘நவராத்திரி’ வெளியான அதேநாளில், தீபாவளித் திருநாளில் படம் வெளியானது. இங்கேதான் பி.ஆர்.பந்துலுவுக்கு கோபமும் வருத்தமும் தொடங்கியது. அதாவது சிவாஜியின் 100-வது பட அறிவிப்புதான், சிவாஜி எனும் கலைஞனையும் பந்துலு எனும் மிகச்சிறந்த இயக்குநரையும் பிரித்தது.

1952-ம் ஆண்டு தமிழ்த் திரையுலகிற்கு சிவாஜி கணேசன் அறிமுகமான ஆண்டிலிருந்தே பந்துலு சிவாஜிக்குப் பழக்கம். 1952-ல், கலைவாணரின் ‘பணம்’ படத்தில் சிவாஜி நடித்தார். அதே படத்தில் பி.ஆர்.பந்துலுவும் சிறிய கதாபாத்திரத்தில் நடித்தார். அப்போது இருவரும் பேசிக்கொண்டார்கள். அதன் பிறகு சிவாஜிக்கு மளமளவென படங்கள். 1954-ல் ‘கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி’ எனும் சிவாஜி படத்திலும் பி.ஆர்.பந்துலு நடித்தார். இருவருக்கும் இடையிலான நட்பு வளர்ந்தது.

1957-ல், சிவாஜியை அணுகினார். படம் இயக்குவது குறித்தும் தயாரிப்பது குறிப்பதும் தெரிவித்தார். ‘’நான் என்ன செய்யணும் பந்துலுண்ணே?’’ என்றார் சிவாஜி. ’உங்களோட தேதி வேணும். நீங்கதான் நடிக்கணும்’’ என்றார். சிவாஜி சம்மதித்தார். ‘பத்மினி பிக்சர்ஸ்’ உருவானது. ‘தங்கமலை ரகசியம்’ உருவானது. 1957-ல் வெளியான இந்தப் படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. அடுத்த வருடம் மீண்டும் இருவரும் இணைந்து ‘சபாஷ் மீனா’ தந்தனர். படம் சக்கைப்போடு போட்டது. இதற்கு அடுத்த வருடமும் சிவாஜி கால்ஷீட் கொடுத்தார். தமிழின் முதல் கேவா கலர்ப் படமாக மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரிக்க, எம்ஜிஆர் நடிப்பில் ‘அலிபாபாவும் 40 திருடர்களும்’ வெளியாகியிருந்தது. தமிழின் முதல் டெக்னிக் கலர்ப் படமாக சிவாஜியை வைத்து பந்துலு உருவாக்கினார். அதுதான் ‘வீரபாண்டிய கட்டபொம்மன்’. இன்றைக்கும் கட்டபொம்மன் என்றால் நினைவுக்கு வருபவர் நடிகர் திலகம்தான். சிவாஜியை ரசித்து ரசித்து இயக்கினார் பந்துலு.

1960-ல் ‘குழந்தைகள் கண்ட குடியரசு’ என்ற படத்தை இயக்கினார். இதிலும் சிவாஜி நடித்தார். ஆக, வருடத்துக்குப் பல படங்களில் சிவாஜி நடித்தாலும், வருடம் தவறாமல், பந்துலுவுடன் கைகோர்க்கவும் செய்தார். 1961-ம் ஆண்டிலும் சிவாஜியும் பந்துலுவும் இணைந்தார்கள். ’கப்பலோட்டிய தமிழன்’ உருவானது.

அடுத்த வருடத்தில், பந்துலுவின் புதிய முயற்சி. அப்போது சிவாஜியும் பயங்கர பிஸி. மிகக்குறுகிய நாட்களில், தரமான நகைச்சுவைப்படத்தை எடுத்தார் பந்துலு. அதில் மூன்று சிவாஜி. அந்தப் படம் ‘பலே பாண்டியா’. சிவாஜி, முதன்முதலாக மூன்று வேடங்களில் நடித்த படம் இதுதான்.

குறுகிய நாட்களுக்குள் எப்படி இந்தப் படத்தை எடுத்தார் பந்துலு என்று இன்றுவரைக்கும் வியந்துகொண்டிருக்கிறது திரையுலகம்.

1964-ல், சிவாஜியை வைத்து ‘கர்ணன்’ எடுத்தார். அதே வருடத்தில் சிவாஜி நடித்த ‘முரடன் முத்து’வையும் எடுத்தார். சிவாஜி அப்போது ‘புதிய பறவை’, ‘முரடன் முத்து’, ‘நவராத்திரி’ என மூன்று படங்களில் நடித்துக்கொண்டிருந்தார். சிவாஜி நினைத்திருந்தால், தன்னுடைய தயாரிப்பில் உருவாகும் ‘புதிய பறவை’ படத்தை 100-வது படமாக வெளியிட்டிருக்கலாம். 98-வது படமாக செப்டம்பர் மாதம் வெளியானது ‘புதிய பறவை.’ இப்போது ‘முரடன் முத்து’வும் ‘நவராத்திரி’ படமும் அடுத்தடுத்த படங்களாக 100-வது பட போட்டியில் இருக்கின்றன. இரண்டு படங்களும் முடிவடைந்தன. இரண்டு படங்களும் ஒரேநாளில் ரிலீஸ் செய்யப்பட்டன. ஆனால் எது 100-வது படம் என்று ரிலிஸீன்போது அறிவிக்கப்படவில்லை. ‘முரடன் முத்து’வை 100-வது படமாக சிவாஜி அறிவிக்க வேண்டும் என நினைத்தார் பந்துலு. அவரிடமே சென்று தன் ஆசையைச் சொன்னார்.

ஆனால், ஒரேநாளில் வெளியான படங்களில், ‘நவராத்திரி’யும் ஒன்பது சிவாஜிகளும் பேசப்பட்டார்கள். ரசிக்கப்பட்டார்கள். கொண்டாடப்பட்டார்கள். ஆனால் ஏனோ தெரியவில்லை...எல்லா அம்சங்களும் இருந்தும் ‘முரடன் முத்து’ ரசிகர்களால் கண்டுகொள்ளப்படவில்லை. இதையடுத்து ரிலீஸான ஒருவாரம் கழித்து, ‘சிவாஜியின் 100-வது படம் ‘நவராத்திரி’ ‘ என பத்திரிகைகளில் விளம்பரங்கள் வெளியாகின.

பந்துலுவின் ஆசை, கோபமானது. கோபம், வாக்குவாதமானது. வாக்குவாதம், பெரிய விரிசலைக் கொடுத்தது. இருவரும் பிரிந்தார்கள். சிவாஜியும் பந்துலுவும் பிரிந்த சேதி கேட்டதும் பந்துலுவை எம்ஜிஆர் அழைத்தார். வாரியணைத்துக் கொண்டார். அடுத்த வருடமே எம்ஜிஆரை வைத்து சொந்தமாக தயாரித்து இயக்கினார் பந்துலு. அதுதான் ‘ஆயிரத்தில் ஒருவன்’. ’நாடோடி’, ‘ரகசிய போலீஸ் 115’, ‘தேடி வந்த மாப்பிள்ளை’ என்று வரிசையாக எம்ஜிஆரை வைத்து இயக்கிக்கொண்டிருந்தார் பந்துலு.

எம்ஜிஆர் நடித்த கடைசிப் படமான ‘மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்’ படத்தையும் பந்துலுவே இயக்கினார். படம் முடிவதற்குள் அவர் இறந்துவிடவே, மிச்ச காட்சிகளை எம்ஜிஆர் படமாக்கினார். ஆனால், ‘முரடன் முத்து’வில்... 100வது பட அறிவிப்பு விஷயத்தில் சிவாஜியுடன் முட்டிக்கொண்டு பிரிந்த பி.ஆர்.பந்துலு, அதன் பிறகு சிவாஜியை வைத்து படம் பண்ணவே இல்லை என்பதுதான் வேதனை!

‘முரடன் முத்து’ படம் வெளியாகி, 58 ஆண்டுகளாகிவிட்டன. படம் முக்கியத்துவம் வாய்ந்த படமாக அமையவில்லை. ஆனால் சிவாஜியும் பந்துலுவும் இணைந்து பணியாற்றிய படம் என்பதாலேயே தமிழ் சினிமாவின் சரித்திரத்தில் பதிவாகிவிட்டது!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in