சிவாஜி, எம்ஜிஆரின் ‘டபுள் ஆக்‌ஷன்’ படங்கள்: ஒரே ஆண்டில் வெளியான சுவாரசியக் கதை!

சிவாஜி, எம்ஜிஆரின் ‘டபுள் ஆக்‌ஷன்’ படங்கள்: ஒரே ஆண்டில் வெளியான சுவாரசியக் கதை!

’இந்தப் படம் பெரும்பாலும் ஜெயித்துவிடும்’ என்று சொல்கிற பட்டியலில், ‘டபுள் ஆக்‌ஷன்’ படங்களுக்கு எப்போதுமே தனி மவுசு உண்டு. ‘இப்படியொரு குணச்சித்திரத்தில் ஒருவர்; அதற்கு நேர்மாறாக அப்படியாக ஒருவர். இருவரும் ஒரே முகச்சாயல் கொண்டவர்கள்’ என்ற விஷயமும் கதையும் சேரும்போது, அங்கே, அந்தப் படத்தின் மீது கூடுதல் எதிர்பார்ப்பு ரசிகர்களுக்கு வந்துவிடுகிறது. ‘ஒருவர் உம்மணாமூஞ்சி; இன்னொருவர் நிறைய பேசுவார்’, ‘ஒருவர் நல்லவர், இன்னொருவர் கெட்டவர்’ என்று தோசையைத் திருப்பிப் போடுவது போலவே போட்டுக்கொண்டே இருக்கலாம். ஆனால் கதையிலும் நடிப்பிலும் வித்தியாசங்களைக் கொண்டுவந்தால்தான், படம் காலம் கழித்தும் பேசப்படும்.

‘டபுள் ஆக்ட்’ என்பது எம்ஜிஆர், சிவாஜி காலத்துகு முன்பே பாகவதர் காலத்திலேயே வந்துவிட்டது. ஆனால் பாகவதர் இரட்டை வேடங்களில் நடிக்கவில்லை. பாகவதருக்கு இணையான நடிகர் என்று போற்றிக் கொண்டாடப்பட்ட பி.யு.சின்னப்பா, இரட்டை வேடங்களில் நடித்தார்.

அந்தப் படம்தான் தமிழ் சினிமாவில் முதல் டபுள் ஆக்‌ஷன் படம். ஆங்கிலப்படத்தைத் தழுவி இப்போது மட்டுமல்ல... அப்போதே எடுத்திருக்கிறார்கள். ஆனால் என்ன... அதை அப்படியே எடுத்துக்கொள்ளாமல், அதை ‘இன்ஸ்பிரேஷனாக’ எடுத்துக் கொண்டு படம் பண்ணினார்கள் அப்போது. அந்தப் படம் ‘உத்தம புத்திரன்’ (1940). அதற்கு முந்தைய ஆண்டு வெளியான ஹாலிவுட் திரைப்படமான ‘தி மேன் இன் தி அயர்ன் மாஸ்க்’ படத்தின் தழுவல் அது.

இரட்டை வேடப் படங்கள் பெரும்பாலும் வெற்றி பெறும் என்பது எப்போது உறுதியானது? முதல் இரட்டை வேடப் படத்திலேயே உறுதியாகிவிட்டது. அந்தக் காலகட்டத்தில் பி.யு.சின்னப்பாவுக்கு தொடர்ந்து அடிமேல் அடி. படங்கள் எதுவும் ஓடவில்லை. மனம் நொந்து புலம்பிக்கொண்டிருந்தார். மாடர்ன் தியேட்டர்ஸ்தான் அவரை அணுகி, இந்தக் கதையைச் சொல்லி, ‘இதற்குப் பிறகு பழைய மார்க்கெட் உங்களுக்கு வரும்’ என்று உறுதியளித்தது. அதன்படி மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரிப்பில், பி.யு.சின்னப்பா நடித்த 'உத்தம புத்திரன்’ தான் முதல் இரட்டை வேடப் படம். பெரும் வெற்றி பெற்ற படம் அது.

பல ஆண்டுகள் கழித்து வீனஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில், ஸ்ரீதரின் திரைக்கதையில் உருவானது இன்னொரு ‘உத்தம புத்திரன்’. டி.பிரகாஷ் ராவ் இயக்கிய இந்தப் படத்தில் முதன்முதலாக சிவாஜிகணேசன் இரட்டை வேடங்களில் நடித்தார்.

பார்த்திபன், விக்கிரமன் என்று இரண்டு கதாபாத்திரங்களுக்கு நிற்பதிலும் நடப்பதிலும் பார்ப்பதிலும் சிரிப்பதிலுமே என ஒவ்வொரு அசைவிலும் வித்தியாசங்கள் காட்டியிருப்பார்.

இன்னும் சொல்லப்போனால், இந்தப் படத்தில் சிவாஜி காட்டிய ஸ்டைலுக்கு இணையாக இதுவரை எந்த நடிகரும் ஸ்டைல் காட்டியதே இல்லை. ‘உத்தம புத்திரன் படத்தில் மட்டுமில்லாமல் பல படங்களில் சிவாஜி சாரின் ஸ்டைலிஷான நடையும் நடிப்பும் எனக்குள் பாதிப்பை ஏற்படுத்தின’ என்று ரஜினிகாந்த் குறிப்பிட்டிருக்கிறார்.

‘யாரடி நீ மோகினி’ பாடலுக்கு சிவாஜியின் ஒவ்வொரு அசைவும் ஆட்டமும் சிரிப்பும் கைதட்டல்களை வாங்கிக்கொண்டே இருந்தன. ராஜா காலத்துக் கதை. அதே ஆங்கிலப் படத்தின் தாக்கத்தில் இருந்து உருவானதுதான் இந்தப் படமும்.

1958 பிப்ரவரி மாதம் 7-ம் தேதி சிவாஜியின் முதல் ‘டபுள் ஆக்‌ஷன்’ படமாக வெளியானது ‘உத்தம புத்திரன்’. பழைய உத்தம புத்திரனும் சரி, இந்த உத்தம புத்திரனும் சரி, வசூலில் கொடிகட்டிப் பறந்தவை. சிவாஜியின் நடிப்பைப் பாராட்டாத பத்திரிகைகளே இல்லை. ரசிகர்கள் கொண்டாடித் தீர்த்தார்கள். எல்லாப் பாடல்களும் தேனாக இனித்தன.

ஆக, பி.யு.சின்னப்பாவுக்குப் பிறகு ‘டபுள் ஆக்‌ஷன்’ நடித்தவர் சிவாஜி கணேசன். அதே வருடத்தில், அதாவது 1958-ம் ஆண்டில் எம்ஜிஆர் முதன்முதலாக இரட்டை வேடம் தாங்கிய படமும் வெளியானது என்பதுதான் சுவாரசியம். எம்ஜிஆர் நடித்த அந்தப் படம், எம்ஜிஆர் தயாரித்து, நடித்து, இயக்கிய அந்தப் படம்... ‘நாடோடி மன்னன்’.

‘படம் ஓடினால் நான் மன்னன்; ஓடவில்லையென்றால் நான் நாடோடி’ என்று எம்ஜிஆர் சொன்னார். அத்தனை பொருட்செலவில் பிரம்மாண்டமாக எடுத்திருந்தார்.

‘உத்தம புத்திரன்’ போலவே இதிலும் ஒருவர் மன்னர்; இன்னொருவர் புரட்சியாளர். ஆள்மாறாட்டம் என்பது இரண்டிலும் நடைபெறும். அதுசரி... டபுள் ஆக்‌ஷன் என்றாலே ஆள்மாறாட்டம் இல்லாமல் இருக்குமா என்ன? ஆனால் கதை சொல்லும் பாணியில் இரண்டு படங்களுமே மாறுபட்டு நின்றன.

கருப்பு வெள்ளையாக மட்டுமே வந்தான் ‘உத்தம புத்திரன்’. கருப்பு வெள்ளையில் வந்து படத்தின் முக்கால்வாசிக்குப் பிறகு, சரோஜாதேவி வரும் காட்சியில் இருந்து படம் தடக்கென ‘கலர் படமாக’ ஆகிவிடும் ஜாலத்தை செலவு பார்க்காமல் செய்தார் எம்ஜிஆர். ’உத்தம புத்திரன்’ படத்துக்கு ஜி.ராமநாதன் இசை. ‘நாடோடி மன்னன்’ படத்துக்கு எஸ்.எம்.சுப்பையா நாயுடு இசை.

இங்கே ஸ்ரீதரின் கைவண்ணம். அங்கே எம்ஜிஆருக்கு கண்ணதாசனின் கைவண்ணம். இரண்டுமே மிகப்பெரிய வெற்றியைக் கொடுத்தன.

ஒரு சுவாரசியம்... சொந்தப் படம் எடுக்கப்போவதாகவும் தானே இயக்கப்போவதாகவும் பேப்பரில் விளம்பரம் செய்த எம்ஜிஆர், அந்தப் படத்துக்கு முதலில் வைத்த பெயர் என்ன தெரியுமா? ‘உத்தம புத்திரன்’ தான்!

‘என்னடா இது இதேபேர்ல சிவாஜியும் நடிக்கிறாரு; இதே பேர்ல எம்ஜிஆரும் நடிக்கப் போறாரா?’ என்று மக்கள் குழம்பித்தான் போனார்கள். பிறகுதான் தலைப்பை மாற்றும் முடிவுக்கு வந்தார் எம்ஜிஆர். ‘நாடோடி மன்னன்’ என்றாக்கினார்.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு, தனுஷ் நடித்த ‘உத்தம புத்திரன்’ எனும் டைட்டில் மட்டும் பயன்படுத்தப்பட்டு வந்ததும் வடிவேலு இரட்டை வேடங்களில் நடித்து மெகா வெற்றி பெற்ற ‘இம்சை அரசன் 23-ம் புலிகேசி’, உத்தமபுத்திரத்தின் சற்றே சாயல் கொண்டது என்பதும் நினைவிருக்கிறதுதானே!

எம்ஜிஆரும் சிவாஜியும் ‘டபுள் ஆக்‌ஷன்’ படத்தில் ஒரே வருடத்தில் நடித்தார்கள்; ஜொலித்தார்கள்; ஜெயித்தார்கள். அப்படியெனில் கமல், ரஜினி?

1978-ம் ஆண்டு, டி.என்.பாலு இயக்கத்தில் கமல், ஸ்ரீப்ரியா நடிப்பில் உருவான ‘சட்டம் என் கையில்’ படம்தான் கமலின் முதல் ‘டபுள் ஆக்‌ஷன்’ படம். 1980-ல், கே.பாலாஜியின் தயாரிப்பில் இந்தி ‘டான்’ தமிழில் ‘பில்லா’வாக உருவானது. இதுதான் ரஜினி நடித்த முதல் டபுள் ஆக்‌ஷன் படம். இதே ஆண்டில், மகேந்திரன் இயக்கத்தில் ரஜினி டபுள் ஆக்ட் கொடுத்த ‘ஜானி’யும் வெளியானது. அதேபோல, 1978-ல் ‘சட்டம் என் கையில்’ மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. 1979-ல், ‘கல்யாணராமன்’ அதிரிபுதிரி வெற்றியைக் கொடுத்தது.

இங்கே இன்னொரு விஷயம்... இளைஞன் கமலுக்குத்தான் ‘சட்டம் என் கையில்’ முதல் ‘டபுள் ஆக்‌ஷன்’ படம். ‘களத்தூர் கண்ணம்மா’வில் அறிமுகமான கமல், 1962-ம் ஆண்டில், ஏவி.எம் தயாரிப்பில், சிவாஜி, ஜெமினி, சாவித்திரி, சரோஜாதேவி, செளகார் ஜானகி நடிப்பில் வெளியான ‘பார்த்தால் பசி தீரும்’ படத்தில் ஜெமினியின் மகனாக, சிறுவனாக நடித்திருப்பார்.

ஜெமினி - சாவித்திரியின் மகனாக ஒரு கமல், ஜெமினி - செளகார் ஜானகி மகனாக மற்றொரு கமல் என சிறுவயதிலேயே கமல் இரட்டை வேடங்களில் நடித்திருக்கிறார்.

இதன் பிறகு சத்யராஜ், விஜயகாந்த், பிரபு தொடங்கி, இன்றைக்கு கார்த்தி, அருண்விஜய் வரைக்கும் ‘டபுள் ஆக்‌ஷன்’ கதையைத் தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறார்கள். தமிழ் சினிமாவில் மட்டுமின்றி, ஒட்டுமொத்த சினிமா உலகிலும் ‘நம்பிக் கட்டும் குதிரை’யாகத் திகழ்கிறது ‘டபுள் ஆக்‌ஷன்’ சப்ஜெக்ட்!

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in