குற்றாலத்தில் ஒன்றுகூடிய சிவாஜி ரசிகர்கள்: அடுத்த திட்டம் இதுதான்!

குற்றாலத்தில் ஒன்றுகூடிய சிவாஜி ரசிகர்கள்: அடுத்த திட்டம் இதுதான்!

முகநூல் நண்பர்கள் குழு மூலம் தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் சிவாஜி ரசிகர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் சந்தித்து பேசியுள்ளனர்.

காலத்தை வென்ற காவிய நாயகனாக திகழ்கிறார் நடிகர் திலகம் சிவாஜி கணேசன். நடிப்புக்கு இலக்கணமாகத் திகழ்ந்த சிவாஜி கணேசனை அவரது ரசிகர்கள் தொடர்ந்து கொண்டாடி வருகின்றனர். இப்போதும் சிவாஜி படம் ஓடும் திரையரங்குகளில் வயதான ரசிகர்கள் திரள்வதை காண முடிகிறது. சிவாஜி ரசிகர்கள் சமூக வலைதளம் மூலம் நண்பர்களாக இணைந்தும் செயல்படுகின்றனர்.

அந்த வகையில் முகநூல் குழு மூலம் சிவாஜி ரசிகர்கள் நண்பர்களாக சேர்ந்தனர். அவர்கள் அவ்வப்போது நேரில் சந்தித்து உரையாடுகின்றனர். அந்த வகையில் சிவாஜி ரசிகர்களான முகநூல் நண்பர்கள் தென்காசி மாவட்டம், குற்றாலத்தில் 7-வது சந்திப்பு நிகழ்ச்சியை நடத்தினர். நிகழ்ச்சிக்கு திருவனந்தபுரத்தைச் சேர்ந்த வானமாமலை கள்ளபிரான் தலைமை வகித்தார். இதில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த சிவாஜி ரசிகர்கள் கலந்துகொண்டு சிவாஜி குறித்து உரையாடி மகிழ்ந்தனர்.

இதுகுறித்து தென்காசி மாவட்டம், கொடிக்குறிச்சியைச் சேர்ந்த சிவாஜி மன்ற முன்னாள் மாவட்ட தலைவர் முத்தையா கூறுகையில், “நடிகர் திலகம் சிவாஜி திரைத்துறை மூலம் பக்தியையும், தேசியத்தையும், மொழி பெருமைகளையும், குடும்ப பாசத்தையும் மக்களுக்கு எடுத்துரைத்தார். பொது வாழ்க்கையிலும் பொதுமக்களுக்கு பல்வேறு நன்மைகளை செய்தவர். அவர் வாழ்ந்து மறைந்த பின்பும் அவரது புகழ் நிலைத்திருக்கிறது.

அவரது லட்சக்கணக்கான ரசிகர்கள் சிவாஜி நினைவை போற்றிக்கொண்டு உள்ளனர். முகநூல் நண்பர்களான சிவாஜி ரசிகர்கள் ஆண்டுக்கு 2 முறை நேரில் சந்தித்து உரையாடி வருகிறோம். முதல் சந்திப்பு புதுக்கோட்டையிலும், இரண்டாவது சந்திப்பு ராஜபாளையத்திலும், மூன்றாவது சந்திப்பு திருப்பூரிலும், நான்காவது சந்திப்பு சென்னை கொட்டிவாக்கத்திலும், ஐந்தாவது சந்திப்பு திருவனந்தபுரம் தமிழ்ச் சங்கத்திலும், ஆறாவது சந்திப்பு பழனியிலும் நடத்தினோம். அதன் தொடர்ச்சியாக ஏழாவது சந்திப்பாக குற்றாலத்தில் சந்தித்துள்ளோம். இதில் சிவாஜி ரசிகர்கள் ஏராளமானோர் பங்கேற்றுள்ளனர். சிவாஜி குறித்து பேசி மகிழ்ந்தோம்” என்றார்.

வடசென்னையைச் சேர்ந்த சிவாஜி கிருஷ்ணமூர்த்தி கூறும்போது, “சிவாஜி ரசிகர்கள் ஓரிடத்தில் சந்தித்து கடந்த ஆண்டுகளில் சிவாஜியின் புகழை பரப்ப என்னென்ன செய்தோம். அடுத்து வரும் காலங்களில் என்னென்ன செய்ய வேண்டும் என ஆலோசித்தோம். அவரது புகழுக்கு புகழ் சேர்க்க தொடர்ந்து 6 மாதங்களுக்கு ஒரு முறை நேரில் சந்திப்போம்” என்றார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in