‘சீதா ராமம்’ திரையிட அனுமதியளித்த அமீரகம்: துள்ளிக் குதிக்கும் துல்கர் சல்மான்!

‘சீதா ராமம்’ திரையிட அனுமதியளித்த அமீரகம்: துள்ளிக் குதிக்கும் துல்கர் சல்மான்!

துல்கர் சல்மான் ‘சீதா ராமம்’ திரைப்படத்துக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கியிருக்கிறது ஐக்கிய அரபு அமீரகம். இதையடுத்து, இன்று அந்நாட்டில் இப்படம் வெளியாகியிருக்கிறது.

தெலுங்கு திரையுலகின் முக்கியமான இயக்குநரான ஹனு ராகவபுடியின் இயக்கத்தில், துல்கர் சல்மான், ராஷ்மிகா மந்தனா, மிருணாள் தாக்கூர், கவுதம் வாசுதேவ் மேனன் உள்ளிட்டோர் நடித்திருக்கும் படம் ‘சீதா ராமம்’. தெலுங்கில் மட்டுமல்லாமல் தமிழ், மலையாளம் ஆகிய மொழிகளிலும் டப் செய்யப்பட்டு, ஆகஸ்ட் 5-ல் இப்படம் வெளியானது.

1960-களில் இந்திய ராணுவப் பின்னணியில் நடக்கும் காதல் கதையாக இந்த படம் வித்தியாசமான கோணத்தில் எடுக்கப்பட்டிருக்கிறது. துல்கர் சல்மான், ராஷ்மிகா போன்றோரின் நடிப்பும் படத்தின் உயிரோட்டமான திரைக்கதையும், ஒளிப்பதிவும் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கின்றன. விமர்சன ரீதியிலும் வணிக ரீதியிலும் படம் நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கிறது. இதுவரை 33 கோடி ரூபாயை இப்படம் வசூலித்திருப்பதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதற்கிடையே, மத உணர்வுகளைப் புண்படுத்துவதாகக் கூறி பஹ்ரைன், குவைத், ஓமன், கத்தார், சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளில் இப்படத்தைத் திரையிட தடைவிதிக்கப்பட்டது. இத்தனைக்கும் அரபு நாடுகளில் துல்கர் சல்மானின் படங்களுக்கு எப்போதும் நல்ல வரவேற்பு கிடைக்கும். இந்தச் சூழலில் அரபு நாடுகள் விதித்திருந்த தடையால் ‘சீதா ராமம்’ துல்கர் சல்மான் உட்பட படக்குழுவினர் அனைவரும் சற்றே சோர்வடைந்திருந்தனர்.

இந்நிலையில் ஐக்கிய அரபு அமீரகம் நாட்டின் தணிக்கை வாரியம், இந்தப் படத்தை வெளியிடலாம் எனச் சான்றிதழ் அளித்துள்ளது. இதைத் தொடர்ந்து இன்று முதல் தெலுங்கு மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் சீதாராமம் அந்நாட்டில் வெளியாகிறது. இந்தத் தகவலை மிகுந்த மகிழ்ச்சியுடன் ட்விட்டரில் பகிர்ந்திருக்கிறார் துல்கர் சல்மான்.

பிற அரபு நாடுகளும் தடையை விலக்கிக்கொள்ளும் என்று ஆவலுடன் காத்திருக்கிறது படக்குழு!

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in