நடிகர் பிரபு, ராம்குமார் மீது சகோதரிகள் திடீர் வழக்கு: காரணம் இதுதான்!

நடிகர் பிரபு, ராம்குமார் மீது சகோதரிகள் திடீர் வழக்கு: காரணம் இதுதான்!

தந்தை சொத்தில் பங்கு தராமல் ஏமாற்றிவிட்டதாக நடிகர் பிரபு, அவரது சகோதரர் ராம்குமார் மீது குற்றம்சாட்டி மறைந்த நடிகர் சிவாஜிகணேசனின் மகள்கள், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.

மறைந்த பிரபல நடிகர் சிவாஜி கணேசனுக்கு பிரபு, ராம்குமார் என இரு மகன்களும், சாந்தி, ராஜ்வி என இரு மகள்களும் உள்ளனர். கடந்த 2001-ம் ஆண்டு நடிகர் சிவாஜி கணேசன் மரணத்துக்குப் பின், 270 கோடி ரூபாய் சொத்துகளை முறையாக நிர்வகிக்கவில்லை எனவும், வீடுகளின் வாடகை பங்கை தங்களுக்கு வழங்காமல் ஏமாற்றியதாகவும் கூறி சாந்தி மற்றும் ராஜ்வி ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் உரிமையியல் வழக்கு தொடர்ந்துள்ளனர்.

அந்த மனுவில், "இந்து வாரிசுரிமை சட்டத்தில் 2005-ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட திருத்தம் காரணமாக தந்தை சிவாஜி கணேசனின் சொத்துகளில் தங்களுக்கும் உரிமை உள்ளதால் பாகப்பிரிவினை செய்து தர உத்தரவிட வேண்டும். தங்களுக்கு தெரியாமல் தந்தை சொத்துகளை விற்றுள்ளதாகவும், அந்த விற்பனை பத்திரங்களை செல்லாது என அறிவிக்க வேண்டும்.

ஆயிரம் சவரன் தங்க நகைகளையும், 500 கிலோ வெள்ளி பொருட்களையும் பிரபுவும், ராம்குமாரும் அபகரித்துக் கொண்டனர். சாந்தி தியேட்டரில் இருந்த 82 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை பிரபுவும், ராம்குமாரும் தங்கள் பெயருக்கு மாற்றிக் கொண்டனர். நடிகர் சிவாஜி கணேசன் எழுதி வைத்ததாக கூறப்படும் உயில் ஜோடிக்கப்பட்டது. பொது அதிகார பத்திரத்தில் கையெழுத்து பெற்று தங்களை ஏமாற்றி விட்டனர்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் நடிகர் பிரபு, ராம்குமார் தவிர, இருவரின் மகன்களாக விக்ரம் பிரபு மற்றும் துஷ்யந்த் ஆகியோரும் எதிர்மனுதாரர்களாக சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த மனு விரையில் விசாரணைக்கு வர இருக்கிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in