ரஜினி, விஜய்க்கு ஹிட் பாடல்களைப் பாடிய பாடகர் திடீர் மரணம்: திரையுலகத்தினர் அதிர்ச்சி

ரஜினி, விஜய்க்கு ஹிட் பாடல்களைப் பாடிய பாடகர் திடீர் மரணம்: திரையுலகத்தினர் அதிர்ச்சி

ரஜினிகாந்த், விஜய் ஆகியோருக்கு ஹிட் பாடல்களைப் பாடிய பாடகர் பம்பா பாக்யா மாரடைப்பால் நேற்று உயிரிழந்தார். அவருக்கு வயது 49.

சென்னையில் குடும்பத்துடன் வசித்து வந்த பாம்பா பாக்யா இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமானால் திரையுலகில் அறிமுகப்படுத்தப்பட்டவராவார். ‘ராவணன்’ படத்தில் 'கெடாகறி' என்ற பாடலை முதன்முறையாக இவர் பாடினார். இவருக்கு பாம்பா என்ற பெயரிட்டவரும் ரகுமான்தான். தென் ஆப்பிரிக்காவில் பிரபலமான பாடகர் ஒருவரால் கவரப்பட்ட ரகுமான் அவருக்கு இந்த பெயரைச் சூட்டினாராம்.

இவர் சினிமாவில் பாடுவதற்கு முன்பு தேனிசைத் தென்றல் தேவாவின் இசை கச்சேரியில் இவர் முக்கிய நபராக இடம் பெற்றிருந்தார். அதன் பின்னர் விஜய் ஆண்டனி, ஹாரிஸ் ஜெயராஜ் உள்ளிட்டவர்களும் கச்சேரிகளிலும் இவர் பாடியிருக்கிறார். இவர் தலைப்பாகை அணிந்தபடி தான் சமீப காலமாக காணப்பட்டார். அதற்கு முக்கிய காரணம் ஏ.ஆர்.ரகுமான் தான். அவர் சொன்னதன் பெயரில் தான் இந்த தோற்றத்தில் அவர் காட்சியளித்து வந்தார்.

சந்தோஷ் தயாநிதி இசையமைத்த ராட்டி என்ற ஆல்பத்தில் இவர் பாடிய “ஏண்டி உன்ன பார்த்தேன்னு நினைக்க வைக்கிறியே” என்ற பாடல் மிக பிரபலமானது. நடிகர் ரஜினிகாந்த் நடித்த எந்திரன் படத்தில் 'இவன் பேர் சொல்லும்' என்ற பாடலை இவர் பாடியுள்ளார். அதனைத் தொடர்ந்து ஷங்கர் இயக்கிய 2.0 படத்தில் 'புள்ளினங்கால்' என்ற பாடலையும் இவர் பாடியுள்ளார். விஜய்யின் ‘சர்க்கார்’ படத்தில் இடம்பெற்ற 'சிம்டங்காரன்' பாடலையும் பாடிய இவர், 'பிகில்' படத்திலும் பாடியுள்ளார். மணி ரத்னம் இயக்கத்தில் விரைவில் வெளியாக உள்ள ‘பொன்னியின் செல்வன்’ படத்தில் இடம்பெற்ற ‘பொன்னி நதி ’ எனத் தொடங்கும் பாடல் ஆரம்ப வரிகளை இவர் பாடியிருக்கிறார்.

இந்த நிலையில் பம்பா பாக்யாவிற்கு நேற்று மதியம் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு அண்ணா நகரில் உள்ள ஒரு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவருக்கு இதய துடிப்பு குறைந்து, சிறுநீரக செயல்பாடும் குறைந்து வயிற்றில் அதிக நீர் சேர்ந்துள்ளது. இதனால் பம்பா பாக்யா வேறு மருத்துவமனைக்கு மாற்ற திட்டமிட்டனர். ஆனால், இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் மரணம் அடைந்தார். அவருக்கு இசையமைப்பாளர் சங்கத் தலைவர் தீனா உள்ளிட்ட இசை துறையினர் மற்றும் திரைத்துறையினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அவரின் திடீர் மரணம் இசை உலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in