பாடகர் சித்து மூஸ்வாலா கொலையாளிகள் பாலிவுட் நடிகருக்கு குறிவைத்தனர்: காவல்துறை டிஜிபி அதிர்ச்சி தகவல்

சல்மான் கான்.
சல்மான் கான்.

பாடகர் சித்து மூஸ்வாலா கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் நடிகர் சல்மான் கானை குறிவைத்து நோட்டமிட்டு வந்தது தெரிய வந்துள்ளது என பஞ்சாப் காவல்துறை டிஜிபி கவுரவ் யாதவ் கூறியுள்ளார்.

பஞ்சாபி பாடகரும், காங்கிரஸ் பிரமுகருமான சித்து மூஸ்வாலா அடையாளம் தெரியாத நபர்களால் மே 29-ம் தேதி சுட்டுக் கொல்லப்பட்டார். மூஸ்வாலா தனது காரில் சென்று கொண்டிருந்த போது, அவரை பின் தொடர்ந்து வந்த கும்பல் அவரைச் சுட்டுக்கொன்றது. இந்த துப்பாக்கிச்சூட்டில் மேலும் மூன்று பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். பஞ்சாபில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்தக் கொலைச் சம்பவம் தொடர்பாக ரவுடி லாரன்ஸ் பிஸ்னோய் மற்றும் கோல்டி பிரார் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர். டெல்லி திஹார் சிறையில் உள்ள நிழல் உலக தாதா லாரன்ஸ் பிஷ்னோய் இந்த கொலைக்கு மூளையாக செயல்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், போலீஸார் லாரன்சை காவலில் எடுத்து விசாரணை நடத்தினர். முன்னதாக அமிர்தசரஸ் அருகே நடந்த என்கவுன்டரில் பஞ்சாப் காவல்துறை, இருவரை சுட்டுக்கொன்றனர். இச்சம்பவத்தில் தொடர்புடைய மூன்று பேரை டெல்லி காவல்துறை கைது செய்தது. இந்நிலையில், சித்து மூஸ்வாலா கொலை வழக்கில் தொடர்புடைய கடைசி நபர் தனது கூட்டாளிகளுடன் நேற்று கைது செய்யப்பட்டார். அவர்களை அடுத்த 6 நாட்களுக்கு நீதிமன்ற காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 கவுரவ் யாதவ்
கவுரவ் யாதவ்

பாடகர் சித்து மூஸ்வாலா கொலை வழக்கில் தொடர்பாக பஞ்சாப் காவல்துறை டிஜிபி கவுரவ் யாதவ் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். இதுகுறித்து அவர் கூறுகையில்," சித்து மூஸ்வாலா கொலைக்கு மூளையாக செயல்பட்ட லாரன்ஸ் பிஷ்னோய் அறிவுறுத்தலின் படி, குற்றம் சாட்டப்பட்டவர்கள் பாலிவுட் நடிகர் சல்மான் கானை குறிவைத்து மும்பையில் நோட்டமிட்டு வந்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது. முன்னதாக ஜூன் மாதம் அவருக்கும், அவரது தந்தை சலீம் கானுக்கும் மிரட்டல் கடிதம் அனுப்பப்பட்டது. அதில் சலீம் கான் மற்றும் அவரது மகன் நடிகர் சல்மான் கான் ஆகிய இருவரும், கொல்லப்பட்ட பாடகர் சித்து மூஸ்வாலாவின் கதியை விரைவில் சந்திக்க நேரிடும் என்று மிரட்டல் விடுக்கப்பட்டிருந்தது.

சல்மான் கானை குறிவைக்க, சம்பத் நெஹ்ராவுடன் இணைந்து ஒரு திட்டம் உருவாக்கப்பட்டது. இதுகுறித்து மே 30-ம் தேதி போலீஸாருக்குத் தெரிய வந்தது.சித்து மூஸ்வாலா கொலை வழக்கில் மொத்தம் 23 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். முழு விஷயத்தையும் விசாரிக்க 105 நாட்களானது. அரியானா, ராஜஸ்தான் மற்றும் மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் பதுங்கியிருந்தனர்.லாரன்ஸ் பிஷ்னோய் கும்பல் சார்பாக சித்து மூஸ்வாலா கொலைக்கு கேங்க்ஸ்டர் கோல்டி பிரார் பொறுப்பேற்றார். இந்தக் கொலைச் சம்பவம் தொடர்பாக கென்யாவைச் சேர்ந்த ஒருவரும், அஜர்பைஜானைச் சேர்ந்த ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக இந்தியா உறுதிப்படுத்தியுள்ளது" என்று அவர் கூறினார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in