பி.சுசீலாம்மா: கானம் பாடி நம்மை ஈர்த்த வானம்பாடி!

87-வது பிறந்தநாளில் சில நினைவுகள்
பி.சுசீலாம்மா: கானம் பாடி நம்மை ஈர்த்த வானம்பாடி!

பாடகர்களில், எம்ஜிஆருக்கு ஏற்றது போலவும் சிவாஜிக்குத் தகுந்தது போலவும் டி.எம்.எஸ். அச்சுஅசலாகப் பாடுவார் என்று இன்றைக்கும் சிலாகித்துக் கொண்டிருக்கிறோம். ஜெய்சங்கருக்கென தனிக்குரல் வைத்திருந்தார் டி.எம்.எஸ்.! எஸ்.பி.பி.யும் கமலுக்கும் ரஜினிக்கும் விஜயகாந்துக்கும் மோகனுக்குமாக ஒவ்வொரு விதமாகப் பாடிக் கலக்கினார். பெண் பாடகர்களிலும் பத்மினிக்கு ஏற்ற குரலில், சாவித்திரிக்குத் தகுந்தது போல ஒரு குரலில், கே.ஆர்.விஜயாவின் ஸ்டைலில், விஜயகுமாரிக்கு, சரோஜாதேவிக்கு, ஜெயலலிதாவுக்கு, சுஜாதாவுக்கு, ஸ்ரீப்ரியாவுக்கு என ஒவ்வொரு தலைமுறையின் நடிகையருக்கும் தன் குரலால் அழகு செய்தவர் கானக்குயில் பி.சுசீலா.

ஆந்திரம் பூர்விகம். விஜயநகரம் சொந்த ஊர். தெலுங்குதான் தாய்மொழி. புலப்பாக்க சுசீலா என்பதுதான் பெயர். சிறுவயதிலிருந்தே இசையின் அத்தனை நுணுக்கங்களையும் கற்றறிந்தார். விஜயநகரத்திலும் சுற்றுவட்டார ஊர்களிலும் ஏறாத மேடைகளே இல்லை. பாடாத மைக்குகளே இல்லை.

ஆல் இண்டியா ரேடியோவில் இளம் வயதிலேயே பாட வாய்ப்புக் கிடைத்தது. ரேடியோ வழியே அவரின் குரல் பிரசித்தமானது. யாரென்று பெரிதாக அறியாமலே குரலால் ஈர்க்கப்பட்டார்கள் மக்கள். பெண்டியால நாகேஸ்வரராவ் எனும் ஆந்திரத் திரையுலகின் முக்கியமான ஜாம்பவான், பி.சுசீலாவின் குரலைக் கணித்தார். திரையுலகில் புதுக்குயிலென சுசீலா அங்கே, அப்போது ஜனித்தார். தொடர்ந்து தெலுங்கில் பாடிக்கொண்டிருந்தார்.

தமிழ்ப்படத்துக்கும் ஒப்பந்தம் செய்யப்பட்டார். ’பெற்ற தாய்’ படத்தில் பாடினார். தமிழ்த்தாய், தன் மகளைப் போல் வாரியணைத்துக் கொண்டாள் சுசீலாவை! இதெல்லாம் நிகழ்ந்தது 1950ல்! அப்போது சுசீலாவுக்கு வயது 15. அவருடைய பதினைந்தாவது வயதில் கேட்ட குரல்... துளியும் மாறாமல் அமுதென இன்றைக்கும் நம்மை வசீகரித்துக்கொண்டிருக்கிறது.

தெலுங்கில், தமிழில் பாடிக்கொண்டிருந்தவர் கன்னட உலகுக்கும் பாடத் தொடங்கினார். கணக்கெடுத்துப் பார்த்தால் இந்தியாவின் பல மொழிகளிலும் பாடியிருக்கிறார் என்பது புரியும். இதுவே ஆச்சரியம்தான். இதில் அதிசயம்... எந்த மொழியில் இவர் பாடினாலும், அந்த மொழியையும் மொழியின் வளமையையும் கடுகளவும் சிதைக்காமல் பாடி, கேட்பவர்களை பிரமிக்கவைத்தார் என்பதுதான்!

இங்கே சிவாஜிக்கும் எம்ஜிஆருக்கும் டி.எம்.எஸ். என்று முடிவானது. ஜெமினிக்கு ஏ.எம்.ராஜா, பி.பி.ஸ்ரீநிவாஸ் என செட்டானது. நாகேஷுக்கு ஏ.எல்.ராகவன் அழகாகப் பொருந்தியது. ஆனால், எம்ஜிஆருடன், சிவாஜியுடன், எஸ்.எஸ்.ஆருடன், ஜெமினியுடன், முத்துராமனுடன், ஜெய்சங்கருடன், நாகேஷுடன் எந்த நடிகை நடித்தாலும் அவருக்குப் பொருத்தமான குரலாகப் பாடிய மாயாஜாலம், பி.சுசீலாவை அடுத்தடுத்த கட்டத்துக்கும் அடுத்தடுத்த தலைமுறைக்கும் இட்டுச் சென்றது. கைப்பிடித்து, அழைத்துச் சென்றது.

‘உன்னைக் கண் தேடுதே’ என்ற பாடலில் விக்கலும் நக்கலுமாக இணைத்துப் பாடியிருப்பார் சுசீலா. ’காவேரி ஓரம் கதை சொல்லும் நேரம்’ என்ற பாடலைக் கேட்டுவிட்டு அந்த நாயகியின் துக்கத்தை குரல் வழியே உணர்ந்து அழுத ரசிகர்களெல்லாம் உண்டு. ’அமுதைப் பொழியும் நிலவே நீ அருகில் வராததேனோ’ என்ற பாடலைக் கேட்டு, குரலில் மயங்கி, அந்த நிலவே சுசீலா பாடுகிற ரிக்கார்டிங் அறைக்குள் வந்து கைத்தட்டிவிட்டுச் சென்றிருக்கும்.

திருச்சி பொன்மலைப்பட்டியில் சரவணா, அன்னை என்று இரண்டு டூரிங் தியேட்டர்கள் இருந்தன. ஸ்ரீரங்கத்தைத் தாண்டியுள்ள சொர்க்கவாசலாகவே என் பால்யத்தில் நான் உணர்ந்த இடங்கள் இவை. இங்கு பழைய படங்களைப் போட்டுக்கொண்டே இருப்பார்கள். நானும் ஆறாவது படிக்கும் போதிருந்தே, தொடர்ந்து பார்த்துக் கொண்டே இருந்தேன். ‘இதயக்கமலம்’ படத்தில், ‘இங்கு நீயொரு பாதி நானொரு பாதி/ இதில் யார் பிரிந்தாலும் வேதனை பாதி / காலங்கள் மாறும் காட்சிகள் மாறும்/ காதலின் முன்னே நீயும் நானும் வேறல்ல’ என்று ‘உன்னைக் காணாத நெஞ்சும் நெஞ்சல்ல’ என்று கே.ஆர்.விஜயாவின் துக்கங்களை குரல் வழியே நமக்குக் கடத்தியிருப்பார் சுசீலா. அந்த வயதில், இந்தக் குரல் ஏனோ செய்தது.

’பூந்தோட்ட காவல்காரா பூப்பறிக்க இத்தனை நாளா/ மாந்தோப்பு காவல்காரா மாம்பழத்தை மறந்து விட்டாயா மறந்து விட்டாயா’ என்ற வரிகளில் ஒரு குதூகலப் பந்தினை தன் குரலால் உருண்டோட வைத்துக்கொண்டே இருந்தார் சுசீலா.

’இதயக்கமலம்’ படம் பார்த்தபோது எனக்கு 11 வயது. அந்தப் படத்தில் எல்.விஜயலட்சுமி பாடுவார். ஆனால் ரவிச்சந்திரன் கே.ஆர்.விஜயாவை நினைத்துக்கொள்வார். ஆக இரண்டுபேருமே பாடுவார்கள். இருவருக்குமே சுசீலா குரல் கொடுத்திருப்பார். ஆனால் இருவருக்கும் பாடியது இரண்டு பேர் இன்றைக்கும் நம்பிக்கொண்டிருக்கிறேன். ’என்னதான் ரகசியமோ இதயத்திலே/ நினைத்தால் எனக்கே சிரிப்பு வரும் சமயத்திலே/’ என்ற பாடல். விழி பார்க்கச் சொன்னாலும்/ மனம் பேசச் சொல்லாது/ மனம் பேசச் சொன்னாலும் வாய் வார்த்தை வராது/ அச்சம் பாதி ஆசை பாதி/ பெண் பாடும் பாடு நினைத்தால்/ எனக்கே சிரிப்பு வரும் சமயத்திலே’ என்ற வரிகளில் ஜாலம் காட்டிவிடுவார் சுசீலா. கூடவே சோகத்தையும் இழையவிட்டிருப்பார்.

துக்கத்தில் விக்கித்துக் கிடப்பவர்களுக்கு கண்ணதாசன் சமைத்தார். அதை தன் குரலால் பரிமாறினார் சுசீலா. இப்படியான பாடல்கள் எத்தனையோ உண்டு. அதில், ’கால மகள் கண் திறப்பாள் சின்னையா/ நாம் கண் கலங்கி கவலைப் பட்டு என்னையா/ நாலு பக்கம் வாசலுண்டு சின்னையா/ அதில் நமக்கும் ஒரு வழியில்லையா என்னையா/ என்ற பாடலில்,

சின்னச் சின்ன துன்பமெல்லாம் எண்ண எண்ண கூடுமடா/ ஆவதெல்லாம் ஆகட்டுமே அமைதி கொள்ளடா/ சின்னச் சின்ன துன்பமெல்லாம் எண்ண எண்ண கூடுமடா/ ஆவதெல்லாம் ஆகட்டுமே அமைதி கொள்ளடா/ என்ற குரலில் நம் அடிபட்ட மனதுக்கு ஒத்தடத்தை குரலால் கொடுத்திருக்கும் மருத்துவச்சி சுசீலா.

’கல்லிருக்கும் தேரைக்கெல்லாம் கருணை தந்த தெய்வம்/ கனியிருக்கும் வண்டுக்கெல்லாம் துணையிருந்த தெய்வம்/ நெல்லுக்குள்ளே மணியை/ நெருப்பினிலே ஒளியை உள்ளுக்குள்ளே வைத்த தெய்வம் உனக்கு இல்லையாதம்பி நமக்கு இல்லையா தம்பி நமக்கு இல்லையா/ ‘ என்ற சுசீலாவின் குரலால், நம்மை உசுப்பி உத்வேகமூட்டிவிடுவார்.

’பெரிய இடத்துப் பெண்’ படத்தில் ‘கட்டோடு குழல் ஆட ஆட... ஆட’ என்ற பாடலைக் கேட்கும் போதெல்லாம் நாமும் அவர்களுடன் சேர்ந்து ஆற்றில் நீராடிவிடுவோம். ‘ஜவ்வாது மேடையிட்டு சக்கரையில் பந்தலிட்டு’ என்ற பாடலில் நாமே கண் செருகி, காது கூர்மையாக்கி மயங்கிக்கிடப்போம்.

’எங்க வீட்டு பிள்ளை’ படம் என்றதும் நினைவுக்கு வரும் பாடல்கள் பல உண்டு. அதில் எனக்கு ரொம்பவே பிடித்த பாடலை ரத்னாவுக்காக எ.ஆர். ஈஸ்வரியும் சரோஜாதேவிக்காக பி.சுசீலாவும் பாடினார்கள். என்னை அடிக்கடி முணுமுணுக்கச் செய்யும் பாடல். நம்மை மலருக்கும் கதிரவனுக்குமாக தோழமையாக்கிவிடும் பாடல். ’மலருக்குத் தென்றல் பகையானால் அது மலர்ந்திடக் கதிரவன் துணையுண்டு/ நிலவுக்கு வானம் பகையானால் அது நடந்திட வேறே வழி ஏது/’ என்ற பாடலில் சரோஜாதேவி மனமுருகியிருப்பாரோ இல்லையோ பாடலின் வழியே காதலில் உருகித் திளைத்திருப்பார். ’படகுக்குத் துடுப்பு பகையானால் அங்கு பாய்மரத்தாலே உதவியுண்டு/ கடலுக்கு நீரே பகையானால் அங்கு கதை சொல்லும் அலைகளுக்கிடமேது’ என்ற வரிகளை சுசீலா பாடியிருப்பார்.

கதை, கதையின் கேரக்டர்கள், கதையில் விளையும் சூழல்கள், அந்தச் சூழலை உணர்த்துகிற பாடல்கள், பாடல்களுக்குள்ளே இருக்கிற வரிகள்... அந்த வரிகளுக்குள் இருக்கிற அர்த்தங்கள், அந்த அர்த்தங்கள் சொல்லும் காதல், துரோக, சோக, குதூகல, இயலாமை, வெறுத்தல் முதலான விஷயங்கள் என அனைத்தையும் உள்வாங்கி, குரல் வழியே வெளிப்படுத்தும் செப்படிவித்தைக்காரர் சுசீலா.

’பணத்தோட்டம்’ படத்தில் சுசீலா ஒரு பாடலைப் பாடினார். பதிவு செய்யும்போது அந்தப் பாடல் அவருக்கே திருப்தி தரவில்லை. பிறகு வந்து அந்தப் பாடலைப் பாடிக்கொடுத்தார். நம்மால் பாடமுடியாத அளவுக்கான சிரமமான ராகமும் தாளமும் கொண்ட பாடல் அது. சுசீலா பாடிமுடித்ததும் அங்கிருந்த பலரும் நெக்குருகிப்போனார்கள். மெல்லிசை மன்னர்களில் எம்.எஸ்.விஸ்வநாதன் கண்ணீர்விட்டுப் பாராட்டி மகிழ்ந்தார்கள். ’ஒரு நாள் இரவில் கண் உறக்கம் பிடிக்கவில்லை/ வருவான் கண்ணன் என நினைத்தேன் மறக்கவில்லை’ என்ற பாடலில், ’இரவில் உலவும் திருடன் அவன் என்றார்/ திருடாது ஒரு நாளும் காதல் இல்லையென்றேன்/ எனையே அவன் பால் கொடுத்தேன் என் இறைவன் திருடவில்லை’ என்ற வரிகளைப் பாடும்போது காதலையும் காதலின் மீதான நம்பிக்கையையும் கொடுத்திருப்பார்.

‘காதல் சிறகை காற்றினில் விரித்து வானவீதியில் பறக்கவா’ பாடலில், ’பிரிந்தவர் மீண்டும் சேர்ந்திடும்போது அழுதால் கொஞ்சம் நிம்மதி/ பேச மறந்து சிலையாய் இருந்தால் பேச மறந்து சிலையாய் இருந்தால்/ அதுதான் தெய்வத்தின் சந்நிதி அதுதான் காதலின் சந்நிதி... ஆஆஆஆஆஆஆஆஆ’ என்ற ஹம்மிங்கில் நம்மைக் கரைத்துவிடுவார். பறக்கவிடுவார். மிதக்கச் செய்வார். நம்மையே மறக்கச் செய்வார்.

’உயர்ந்த மனிதன்’ படத்தில் ‘நாளை இந்த வேளை பார்த்து ஓடி

வா நிலா/ இன்று எந்தன் தலைவன் இல்லை சென்று வா நிலா’ என்ற பாடலைக் கேட்டுவிட்டு கிறங்கிப்போனோம். அதே படத்தில், ’வெள்ளிக்கிண்ணம்தான்...’ என்ற பாடலில், ‘ஹாஹாஹாஹாஹா...’ என்று டி.எம்.எஸ். பாடிய ஒவ்வொரு வரிகளுக்கு அடுத்தும் ஹம்மிங்கில் ஜிம்மிக்ஸ் செய்து விளையாடியிருப்பார் சுசீலா.

சுசீலாவின் பாடல்களைக் கேட்பதற்காக ரேடியோவும் கையுமாக அலைந்த ஆண்கள் உண்டு. ரேடியோவுக்குப் பக்கத்திலேயே அமர்ந்துகொண்டு, அவர் பாடும்போது சேர்ந்து பாடி தங்கள் துக்கம் வடித்துக்கொண்ட பெண்கள் இன்றைக்கு பாட்டிகளாகவும் அம்மாக்களாகவும் இருக்கிறார்கள். பாட்டுப்புத்தகங்களை வாங்கிவைத்துக்கொண்டு, நானும் என் அக்காவும் டி.எம்.எஸ்.க்கு பதில் நானும் பி.சுசீலாவுக்குப் பதில் அக்காவும் என்று டூயட் பாடுவோம். ’பொன்வண்டொன்று மலரென்று முகத்தோடு மோத/ நான் வளைகொண்ட கையாலே மெதுவாக மூட/ என் கருங்கூந்தல் கலைந்தோடி மேகங்களாக/ நான் பயந்தோடி வந்தேன் உன்னிடம் உண்மை கூற/ நீ இல்லாமல் யாரோடு உறவாட வந்தேன்?/ உன் இளமைக்குத் துணையாக தனியாக வந்தேன்’ என்று கொஞ்சுவார் சுசீலா. ஜெய்சங்கராகவும் எல்.விஜயலட்சுமியாகவும் இருக்கும் நானும் அக்காவும் சட்டென்று சிவாஜியாகவும் சாவித்திரியாகவும் மாறிவிடுவோம்.

‘தங்கக் கடிகாரம் வைர மணியாரம் தந்து மணம் பேசுவார்/ பொருள் தந்து மணம் பேசுவார்/ மாமன் தங்கை மகளான மங்கை உனக்காக உலகை விலை பேசுவார்..உலகை விலை பேசுவார்/ என்று பாடிவிட்டு விசும்புவார்.

’சிறகில் எனை மூடி அருமை மகள் போல வளர்த்த கதை சொல்லவா/ கனவில் நினையாத காலம் இடை வந்து பிரித்த கதை சொல்லவா.. பிரித்த கதை சொல்லவா என்று பாடிவிட்டு, பாடல் முடிந்ததும் ஹம்மிங்கில் நம் தமிழகத்தின் அண்ணன்களையும் தங்கைகளையும் அழவைத்துவிடுவார். பாடலைக் கேட்டுவிட்டு, ‘எனக்கு தங்கை இல்லையே...’ என்று பலருக்கும் ஏக்கமும் துக்கமும் கொண்டார்கள். அதில் நானும் ஒருவன்.

’பாக்கியலட்சுமி’ எனும் படம். என் அரைநிஜாரின் பாக்கெட்டுக்குள் இன்றைக்கும் இருக்கிறது ‘மாலைப்பொழுதின் மயக்கத்திலே’ பாட்டு. சோகமான பாடல்தான். ஆனால் செளகார் ஜானகி சோகத்தை சிரித்த முகத்துடன் பாடுவார். சுசீலாவும் சோகத்தை சிரித்தபடியே சொல்லி, நமக்கு கண்ணீர் வழியச் செய்திருப்பார். ’கனவில் வந்தவர் யாரெனக்கேட்டேன் கணவர் என்றார் தோழி/ கணவர் என்றால் அவர் கனவு முடிந்ததும் பிரிந்தது ஏன் தோழி/ இளமை எல்லாம் வெறும் கனவு மையம் இதில் மறைந்தது சில காலம்/ தெளிவும் அறியாது முடிவும் தெரியாது மயங்குது எதிர்காலம்’ என்ற பாடலில் ‘மாலைப்பொழுதில்’ என்பதற்கு முன்னதாக லேசாக ஒரு ‘ம்’ என்று நைஸாகச் சேர்த்திருப்பார். இந்தப் பாடலைக் கேட்கும் போதெல்லாம் நாமே பெண்ணாகி, பெண்ணின் உணர்வுக்குள் புகுந்து கரைந்துவிடுவோம். இன்றைக்கு வரை இந்தப் பாடலை தினமும் ஒருமுறையாவது முணுமுணுத்துவிடுவேன்.

’நான் சத்தம்போட்டுத்தான் பாடுவேன்’ என்ற பாடலைக் கேட்டுப் பாருங்கள். எல்.ஆர்.ஈஸ்வரிக்குக் கொடுக்கவேண்டிய பாடலை பி.சுசீலாவுக்குக் கொடுத்து அவரும் அசத்தியெடுத்திருப்பார். ‘அன்று ஊமைப்பெண்ணல்லோ’வில் வயலினா இவரின் குரலா என்பது தெரியாமல் குழம்பித்தான் போவோம். ‘உன்னை ஒன்று கேட்பேன் உண்மை சொல்லவேண்டும்’ என்றும் ‘அந்த நீலநதிக்கரையோரம் நீ நின்றிருந்தாய் அந்திநேரம்’ என்று ‘பார்த்த ஞாபகம் இல்லையோ’வில் இந்த இடத்தில் ஒரு ஸ்டைலாகப் பாடியதும் என் மனப்பத்தாயத்தில் சேகரித்துவைத்திருக்கிறேன்.

‘கற்பூர பொம்மை ஒன்று கைவீசும் தென்றல் இன்று’ என்ற பாடலை கேட்கும்போதெல்லாம் என் தோழி ஒருத்தி அழுதேவிடுவாள். அவள் அம்மாவின் நினைப்பு வரும்போதெல்லாம் இதைக் கேட்பாள். இந்தப் பாடலின் நினைவு வரும்போதெல்லாம் அம்மாவை நினைத்துக்கொள்வாள். அழ நினைக்கும் போதும் இந்தப் பாடலைக் கேட்டுக்கொண்டே இருப்பாள். அப்போது கேசட் ரிக்கார்டு செண்டர் கடைகள் இருந்தன. டிடிகே 60 கேசட் முழுக்க இந்த ஒரேயொரு பாடலைப் பதிவு செய்து அவளுக்குப் பரிசாகக் கொடுத்தேன்.

‘பூப்பூக்கும் மாசம் தைமாசம்’ என்ற பாடலில் ‘ம்ம்ம்ம்ம்’ என்கிற ஹம்மிங் நம்மை அப்படியே பூக்கவைத்துவிடும். ‘கண்ணுக்கு மை அழகு கவிதைக்குப் பொய் அழகு’ என்ற பாடலை பி.சுசீலாவை விட வேறு எவரும் இத்தனை அழகுறப் பாடிவிடமுடியாது.

‘நெஞ்சம் மறப்பதில்லை’ படத்தின் ‘நெஞ்சம் மறப்பதில்லை’ பாடலையெல்லாம் விடுங்கள். அந்த ‘ஹம்மிங்’ சொல்லியே நம் மனதைக் கனக்கச் செய்துவிடுவார் சுசீலா. அப்படியொரு மாயக்குரலுக்குச் சொந்தக்காரர் அவர்!

இப்படிச் சொல்லிக் கொண்டே இருப்பதற்கு சுசீலாவின் பாடல்கள் பல்லாயிரம் இருக்கின்றன. ஒவ்வொரு பாடலையும் எடுத்துக்கொண்டு ஒவ்வொரு அத்தியாயமாக எழுதவேண்டும் என்று எனக்கொரு ஆசை உண்டு.

விஜய் நடித்த படத்தில், ‘சக்கரை நிலவே’ பாடல். ’நவம்பர் மாத மழையில் நான் நனைவேன் என்றேன்/ எனக்கும் கூட நனைதல் மிக பிடிக்கும் என்றாய்/ மொட்டை மாடி நிலவில் நான் குளிப்பேன் என்றேன்/ எனக்கும் அந்த குளியல் மிக பிடிக்கும் என்றாய்/ சுகமான குரல் யார் என்றால் சுசீலாவின் குரல் என்றேன்/ எனக்கும் அந்த குரலில் ஏதோ மயக்கம் என நீ சொன்னாய்’ என்று கவிப்பேரரசு வைரமுத்து எழுதினார்.

1935 நவம்பர் 13-ம் தேதி பிறந்தார். 87வது பிறந்தநாள் தருணத்திலும்... அதே ‘சிட்டுக்குருவிக்கென்ன கட்டுப்பாடு’ பாடலும் முந்தைய ஹம்மிங்கான ‘சம்சம்சம்சந்தம் சம்சம்சம்சந்தம் லல்லல்லல்லா...’ என்றும் நடுவிலே ‘டட்ட்டடா டட்டட்ட்டா...’ என்றும் ‘ரராரராராராராரீ’ என்று பாடினாரா விளையாடினாரா என்று தெரியாமல், கட்டுப்பாடின்றி குதூகலப்படுத்திவிடுவார். இந்தியாவின் கானக்குயில் என்று புகழப்படும் லதா மங்கேஷ்கர், பி.சுசீலாவின் குரலுக்கு மாபெரும் ரசிகை.

சுசீலாம்மா, பாடாத மொழிகளில்லை. பெறாத விருதுகளில்லை. அடையாத பட்டங்கள் இல்லை. இவரைக் கொண்டாடாத மாநிலங்களில்லை.

கவிப்பேரரசு வைரமுத்து ‘இந்தக் குளத்தில் கல்லெறிந்தவர்கள்’ எனும் நூலில், பி.சுசீலாவைப் பற்றி எழுதியிருப்பார்.

’உலகத்திலேயே மிகச்சிறந்த புத்தகம் ஈசாப் கதைதான்

உலகத்திலேயே அழகான ஆறு வராக நதிதான்

உலகத்திலேயே ருசியான பண்டம் வேர்க்கடலை பர்பிதான்

உலகத்திலேயே அழகான பெண்மணி

இரண்டாம் வகுப்பு டீச்சர்தான்

அந்த வயதில் எடுத்த அத்தனை முடிவுகளும்

அடுத்தடுத்த வருடங்களில் மாறிவிட்டன

கடைசி வரை மாறாதிருப்பது

நான் கடைசியில் எடுத்த முடிவுதான்.

நேற்றும் இன்றும் இந்த நிமிடத்திலும் நான் ஆராதிக்கும்

மெல்லிசைப் பாடகி அம்மா சுசீலா...நீங்கள்தான்! ’ என்று எழுதிய கவிஞர் வைரமுத்து,

கட்டுரையின் நிறைவில்...

’மரணத்துக்கு முன்

உன் கடைசி ஆசை என்ன என்று

கைதிகளைத்தான் கேட்கவேண்டுமா?

கவிஞர்களைக் கேளுங்கள்

என்னை கேட்டால் சொல்வேன்...

மரணம் வழியில் வந்துகொண்டிருக்கிறது

என்ற செய்தி வந்தால்,

என்னைச் சுற்றியிருக்கிறவர்களுக்குச் சொல்லுவேன்

ஒரு சுசீலாவின் பாடலை ஒலிக்கவிட்டுவிட்டு

கதவை ஓசையில்லாமல் சார்த்திவிட்டு வெளியேறுங்கள்!

நான் சாவதற்குள்

இன்னும் ஒருமுறை வாழவேண்டும்!

சுசீலாம்மாவிற்கு மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துகள்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in