`என் உயிரின் உயிரே மறைந்தது'- பிரபல பின்னணி பாடகர் கேகே-வுக்கு பிரபலங்கள் இரங்கல்

பாடகர் கிருஷ்ணகுமார் குன்னத்
பாடகர் கிருஷ்ணகுமார் குன்னத்

பிரபல பின்னணி பாடகர் கிருஷ்ணகுமார் குன்னத் மறைவுக்கு பிரதமர் மோடி, இசையமைப்பாளர்கள் ஹாரிஸ் ஜெயராஜ், யுவன் சங்கர் ராஜா உட்பட ஏராளமானோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

கொல்கத்தாவில் இசை நிகழ்ச்சியொன்றில் பங்கேற்ற பிரபல பின்னணி பாடகர் கிருஷ்ணகுமார் குன்னத் (எ) கே.கே மாரடைப்பால் நேற்று நள்ளிரவில் மேடையிலேயே உயிரிழந்தார். அவரது மறைவுக்கு பிரதமர் மோடி மற்றும் திரைப்பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், "பிரபல பாடகர் கேகே என்று அழைக்கப்படும் கிருஷ்ணகுமார் குன்னத்தின் அகால மறைவு வருத்தமளிக்கிறது. அனைத்து வயதினரையும் கவர்ந்த அவரது பாடல்கள் பலவிதமான உணர்ச்சிகளை பிரதிபலித்தன. அவரது பாடல்கள் மூலம் நாம் எப்போதும் அவரை நினைவில் கொள்வோம். அவரது குடும்பத்தினருக்கும் ரசிகர்களுக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள்" என்று கூறியுள்ளார்.

இயக்குநர் ஹாரிஸ் ஜெயராஜ், “என் உயிரின் உயிரே” மறைந்தது. லெஜண்ட் படத்தில் கடைசியாக அவர் பாடிய பாடலான “கொஞ்சி கொஞ்சி” பாடலை உலகமே புகழ்ந்து கொண்டிருக்கும் போது, இப்படியொரு அதிர்ச்சியான செய்தியைக் கேட்டு நான் முற்றிலும் உடைந்து போயிருக்கிறேன். அவருடைய குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் எனது இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா தனது ட்விட்டர் பக்கத்தில், “சித்து மூஸ் வாலாவை தொடர்ந்து இப்போது கே.கே. நம் நாட்டின் இசை சமூகத்திற்கு இது ஒரு சோகமான வாரம். வாழ்க்கை கணிக்க முடியாதது. அடுத்த நிமிடம் என்ன நடக்கும் என்று தெரியாதது. உங்களை மிஸ் செய்கிறோம் கேகே” என்று குறிப்பிட்டுள்ளார்.

இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் தனது இரங்கல் பதிவில், “இளைப்பாருங்கள் நண்பரே. இது பயங்கரமான இழப்பு. கே.கே.யின் மாயாஜாலக் குரலும் இசையும் என்றென்றும் நம்மிடையே எதிரொலிக்கும்” என்று கூறியுள்ளார்.

மேலும் பாடகர் கேகேவின் மறைவுக்கு துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு, மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, அனுராக் தாக்கூர், கிரிக்கெட் வீரர் விரேந்திர சேவாக், பாடகர்கள் சோனு நிகம், ஸ்ரேயா கோசல் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். அவரின் ஏராளமான ரசிகர்கள், சமூக வலைதளத்தில் கே.கே.வின் பாடல்களை பதிவிட்டு, தங்களது சோகத்தை வெளிபடுத்தி வருகின்றனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in