பாடகர் அருண்மொழி: புல்லாங்குழல் கொடுத்த அற்புதக் குரலோன்!

- பிறந்தநாள் சிறப்புப் பகிர்வு
அருண்மொழி
அருண்மொழி

இசைஞானியின் இசையில் ஒவ்வொரு வாத்தியமும் உயிர் பெற்று நம்முடன் பேசும். அவரின் இசையில் சில பாடல்களில் தபேலா விளையாடும். மிருதங்கம் உருட்டியெடுத்துவிடும். வயலின் குழைந்து குழைந்து கொஞ்சும்.

அதேபோல புல்லாங்குழல், ஒரு வார்த்தைகளைப் போலவே நம் செவிகளில் வந்து நுழைந்து, மனதை இதப்படுத்திவிடும். இன்றைக்கு இசைக்கருவிகளுக்கு பதிலாக ஒரே இயந்திரம் வந்து, ஓராயிரம் இசைக்கருவிகளின் வேலைகளைச் செய்துவிடுகின்றன.

ஆனால், இளையராஜாவின் இசையில் ஒவ்வொரு இசைக்கருவியும் ஒவ்வொரு உயிர். அந்த உயிர்... நம் ஜீவனுக்குள் கலந்து ஜாலங்கள் செய்வதில், புல்லாங்குழலுக்கு தனியிடம் உண்டு. அந்தக் குழல் வாசிப்புக்குச் சொந்தக்காரர் நெப்போலியன். இந்தப் பெயரைச் சொன்னால், குழல்களே குதூகலித்து கும்மியடித்துவிடும். அவரின் குரல் காந்தர்வக் குரல். காந்தக் குரல். அந்தக் குரலுக்கு வேறொரு பெயர் உண்டு. ஆமாம்... குரலை நேசிப்பவர்களுக்கு அருண்மொழி என்றால்தான் தெரியும். இசைஞானியின் இசையில் புல்லாங்குழல் வாசிப்பார். அதேதருணத்தில்... எண்ணற்ற பாடல்களைப் பாடி நம்மை மகிழவும் வைத்திருக்கிறார்.

பாடல்களுக்கு முன்னேயும் நடுவேயும் கூடவாகவும் வந்து, நம் கூடவே பயணித்துக்கொண்டே இருக்கும் குழலின் இசை தனித்துவ மகத்துவம் நிறைந்தது. ’முதல் மரியாதை’ படத்தில், மேலிருந்து கீழே ஆற்றுக்குள் வந்து விழும்போது வரும் புல்லாங்குழலுக்கு, ராஜா போட்ட டியூனை அப்படியே வாசித்திருப்பார் நெப்போலியன்.

‘சத்யா’ படத்தில், லதா மங்கேஷ்கர் பாடிய, ‘வளையோசை கலகலகலவென’ பாடலுக்கு முன்னதாக வரும் குழலின் பறபற படபடவை, ஜிலுஜிலுவை அவர் மேடைகளில் வாசித்ததைக் கேட்டு பிரமித்துப் போயிருக்கிறோம். குழலுக்கு நெப்போலியன். குரலுக்கு அருண்மொழி. இளையராஜா அவருக்குச் சூட்டிய இந்தப் புதிய நாமகரணம் இன்னும் நமக்குள் நெருக்கத்தை ஏற்படுத்தியது.

‘அன்னக்கிளி’ மூலம் நமக்குக் கிடைத்தார் இளையராஜா. 45 ஆண்டுகளுக்கும் மேலாக இளையராஜாவின் இசையுடன் பயணித்துக் கொண்டிருக்கிறோம். அவரின் இசை நம்முடைய பயணங்களை அழகாக்கிக் கொண்டே இருக்கிறது. கடந்த 38 ஆண்டுகளாக, இளையராஜாவுடன் இருக்கும் நெப்போலியன் என்கிற அருண்மொழி, இசைஞானிக்கு புல்லாங்குழல் தோழனாகவே இருக்கிறார்.

தஞ்சாவூர்ப் பக்கம் கிராமம்தான் பூர்விகம். சிறுவயதில் அப்பா வாங்கித் தந்த புல்லாங்குழலை வாசித்துக் கொண்டே இருந்த நெப்போலியன்... பின்னாளில், குழலாலும் குரலாலும் உலகறியப் போகிறோம் என்று அவருக்குத் தெரிந்திருக்க வாய்ப்பே இல்லை. படித்தார். நடுவே புல்லாங்குழல்தான் அவரின் பொழுதுபோக்கு. கெமிக்கல் கம்பெனியில் சூப்பர்வைசராக வேலை பார்த்தார். அதைவிட முக்கியமான வேலை... தினமும் காலையும் இரவும் புல்லாங்குழல் வாசிப்பதுதான்! இன்னொரு முக்கியமான ஏகலைவப் பணி... பண்டிட் ஹரி பிரசாத் சௌராசியா. அவரின் குழலிசைக்கு நெப்போலியன் அடிமையாகவே ஆனார்.

தமிழ் சினிமாவின் மிகப்பெரிய இசைமேதை சி.ஆர்.சுப்பராமனின் மகனின் பெயர் சிதார் கண்ணன். அவருக்கும் நெப்போலியனுக்கும் பழக்கம் உண்டு. ஒரு பாடல் எப்படிப் பதிவாகிறது என்பதைப் பார்க்க வேண்டும் என்பதுதான் நெப்போலியனின் வாழ்நாள் ஆசை. அதற்காக நெப்போலியனை அழைத்துச் சென்றார் சிதார் கண்ணன். அன்றைக்கு, கடவுளின் ஆசி, நெப்போலியனுக்கு இருந்ததாகத்தான் சொல்லவேண்டும். அந்தநாளாகப் பார்த்து, புல்லாங்குழல் வாசிப்பவர் வரக்காணோம். என்ன ஆனதோ தெரியவில்லை. ரிக்கார்டிங் ஸ்டூடியோவே பதற்றமும் பரபரப்புமாக இருந்தது.

கண்ணன் மெல்லச் சென்று, ‘’என் கூட என் நண்பர் வந்திருக்கார். அவர் பிரமாதமா ஃப்ளூட் வாசிப்பார். வேணும்னா கேட்டுப்பாருங்க... முயற்சி செஞ்சு பாருங்க’’ என்றார். வாசிக்கச் சொன்னார்கள். நெப்போலியன் வாசித்தார். கேட்டார்கள். சம்மதம் சொன்னார்கள். அப்படி நெப்போலியனையும் புல்லாங்குழல் ஜாலத்தையும் கண்டு சம்மதித்தவர்கள் இசையமைப்பாளர்கள் சங்கர் கணேஷ்.

எதிர்பார்க்காதது எதிர்பாராத நேரத்தில் நடக்கும் என்பது நெப்போலியன் விஷயத்தில் மெய்ப்பட்டது. திரைத்துறைக்குள் நுழைந்தார் நெப்போலியன். திரை இசைத்திலகம் கே.வி.மகாதேவன், மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன், தட்சிணாமூர்த்தி, கேரளத் திரையுலகின் பண்பட்ட இசையமைப்பாளர்கள் என எல்லாக் குழுவிலும் குழல் கலைஞனாக வலம் வந்தார் நெப்போலியன்.

இப்போது நெப்போலியனுக்கு வந்தது அந்த ஆசை. ‘இளையராஜாவைப் பாக்கணும், அவர் இசையில் வாசிக்கணும்!’

காலம், அதற்கும் கதவு திறந்து ‘வருக வருக’ என வரவேற்பு வளைவு அமைத்துக் கொடுத்தது. யார் வாசிக்கிறார்கள் என்பது தெரியாமலேயே நெப்போலியன், ஸ்டூடியோ அறைக்குள் புல்லாங்குழல் வாசிக்க, கதவு தாண்டி அந்த ஓசை, இசைஞானியின் செவியைத் தொட்டது. மனதையும்தான்! தற்செயலாகக் கேட்ட இளையராஜா, ‘அவரை வரச்சொல்லுங்க’ என்று ஆளனுப்பினார். நெப்போலியனுக்கு கைகால் ஓடவில்லை.

‘’இளையராஜாவின் தரிசனம் கிடைத்தது. அவரின் அண்மை கிடைத்தது. அவரின் இசையை வாசிக்கும் வாய்ப்பும் கிடைத்தது. அந்தப் பாடல்... ‘ஒரேமுறை உன் தரிசனம்’ ! ‘என் ஜீவன் பாடுது’ படத்தின் பாடல். தரிசனமும் கிடைத்தது மட்டுமா? கூடவே, வாய்ப்பும் கிடைத்தது. ‘தொடர்ந்து நம்மகிட்ட ஃப்ளூட் வாசிக்கலாம்தானே. வேற வேலை ஏதும் இருக்கா?’ என்று இளையராஜா கேட்டார். ’இல்ல சார், சரி சார், வாசிக்கிறேன் சார். ரொம்ப சந்தோஷம் சார்’ என்று சொன்னவன், இன்று வரைக்கும் அவரிடம் வாசித்துக் கொண்டிருக்கிறேன்’’ என நெக்குருகிச் சொல்கிறார் நெப்போலியன் என்கிற அருண்மொழி.

அன்று தொடங்கி, நெப்போலியன் எனும் குழல் கலைஞனுக்கு விதம்விதமான வாய்ப்புகளை வழங்கிக் கொண்டே இருந்தார் இளையராஜா. தன் பரீட்சார்த்த விளையாட்டுகளை இளையராஜா செய்து கொண்டே இருந்தார். எத்தனை கடினமான நோட்ஸ்கள் கொடுத்தாலும், அவற்றை உள்வாங்கிக்கொண்டு, ராஜ விருப்பத்தைப் பூர்த்தி செய்யும் அரண்மனை இசைக்கலைஞனாகவே ஆனார் நெப்போலியன்.

எண்பதுகளின் நடுவில் இருந்து இன்றைக்கு வரைக்கும் இளையராஜாவின் இசையில் வருகிற குழலிசை... நெப்போலியன் வாசித்தவைதான்! இன்னொரு விஷயம்... இளையராஜாவிடம் திட்டு வாங்காத இசைக்கலைஞர்களே இல்லை. ஆனால், இத்தனை வருடங்களாக திட்டு வாங்காமல் இருக்கும் ஒரே இசைக்கலைஞர் இவராகத்தான் இருக்கும்!

’‘ராஜா சார்கிட்ட வேலை செய்ற ஒவ்வொரு நாளும் பரிட்சைதான். எங்களுக்குப் பாடம்தான். தினம் தினம் அவர்கிட்டேருந்து கத்துக்கிட்டே இருக்கேன். அப்படிக் கத்துக் கொடுக்கறதுக்கு ராஜா சார்கிட்ட இன்னும் எத்தனையோ விஷயங்கள் இருக்கு. அதனாலதான் அவர் இசைஞானி’’ என்று சிலிர்க்கிறார் நெப்போலியன்.

ஒருநாள்... வாய்ஸ் ரூமில் மற்றொரு இசைக்கலைஞருக்கு வாசிக்க வேண்டிய ஸ்வரத்தை பாடிக்காட்டினார் நெப்போலியன். அதை கவனித்த இளையராஜா, நெப்போலியனை அழைத்தார். "நெப்போலியன் இந்த பாட்டை நீங்களே பாடிடுங்க" என்று சொல்லிவிட்டுக் கிளம்பினார் இளையராஜா. அன்றைக்கெல்லாம் தூங்கவே இல்லை அவர். ஜுரமே வந்துவிட்டது. இதெல்லாம் நிஜமா, கனவா எனப் புரியாத நிலை.

’’எல்லோரும் சொல்வது போல இளையராஜா சார், யார் கூடவும் பேசமாட்டார், ஜாலியா இருக்கமாட்டார்னு சொல்றதெல்லாம் உண்மையே இல்லை. அவர் எல்லார்கிட்டயும் சிரிக்கச் சிரிக்கப் பேசுவார். ஜாலியாப் பேசுவார். கேலியாப் பேசுவார். ஆனா, ‘நீயே பாடிரு’ன்னு சொன்னது நிஜமா, கேலியான்னு தெரியலை. குழம்பிப் போயிட்டேன்’’ என்று இப்போது பேசினாலும் வியப்பு மேலிடச் சொல்கிறார் நெப்போலியன்.

ஆக, தமிழ் சினிமாவுக்கு புதியதொரு பாடகர் உதயமானார். “நெப்போலியன், உங்க பேரை மாத்திடலாம். நடிகர் நெப்போலியன் வேற இருக்கார். அதனால உங்க பேர் அருண்மொழி” என்றார் இளையராஜா.

இங்கே இன்னொரு விஷயம்... இயக்குநர் பாரதிராஜா, நடிகர் நெப்போலியனுக்கு நெப்போலியன் என்று பெயர் வைத்ததற்குக் காரணமே இந்த நெப்போலியன் பெயர்தான். வார்த்தைக்கு வார்த்தை, ‘நெப்போலியன் நெப்போலியன்’ என்று இளையராஜா அழைத்ததை கவனித்துக் கொண்டே இருந்த பாரதிராஜா, புதுமுகமாக அறிமுகப்படுத்தும் போது நெப்போலியன் எனப் பெயரிட்டார்.

குழல் கலைஞன் நெப்போலியனுக்கு ‘அருண்மொழி’ என்று பெயர் வைத்ததற்கும் இளையராஜாவுக்கு காரணம் ஒன்று உண்டு. பகவான் ஸ்ரீரமணரின் தீவிர பக்தரான இளையராஜா, ‘அருண்மொழித்திரட்டு’ என்ற நூலின் தாக்கத்தால் நெப்போலியனுக்கு, அருண்மொழி எனப் பெயர் சூட்டினார்.

ரிக்கார்டிங் அறை. எல்லோரும் தயாராக இருந்தார்கள். சித்ரா லட்சுமணன் தயாரித்து கமலை வைத்து இயக்கும் ‘சூரசம்ஹாரம்’ திரைப்படம். ‘‘அப்புறம்... கமலுக்கு பாடப்போறீங்க. பெரியாளா வரணும். நல்லாப் பாடுங்க” என்று இசைஞானி ஆசீர்வதிக்க, ‘நானென்பது நீயல்லவோ தேவதேவி’ என்ற பாடலாக, தமிழகமெங்கும் ஒலித்து ஹிட்டடித்தது. ‘சூரசம்ஹாரம்’ படத்தில் ’நீலக்குயிலே... சோலைக்குயிலே...’ பாடலையும் கொடுத்தார் இளையராஜா.

அருண்மொழியின் குரல், குழலைப் போலவே மெல்லிசைக்குரல். மெல்லிசான குரல். மென்மை மிக்க குரல். சாத்வீகமான குரல். அவரின் குரல், காதலையும் சொல்லும். காதல் பிரிவையும் உணர்த்தும். ‘வெள்ளிக்கொலுசு மணி’ என்று அவர் பாடினார். அந்தக் கொலுசும் அருண்மொழியின் குரல் கேட்டு வெட்கப்பட்டிருக்கும்! .

எண்பதுகளின் இறுதியில் தொடங்கிய அவரின் பாட்டுப் பயணம் இப்படியாகத்தான் நம்மைக் கிறங்கடித்துக் கொண்டிருக்கிறது. எந்த நடிகருக்குப் பாடினாலும் அங்கே அருண்மொழியின் குரல் தனி ஜாலம் காட்டும். ரஜினிக்கு - ’ஆத்துல அன்னக்கிளி’ என்று பாடினார். ’வாசக் கறிவேப்பிலையே’ என்று பாடும் போது, விஜயகாந்துக்குப் பாடியது அப்படியே பொருந்திப் போன குரலாக இருந்தது. இன்றைக்கும் அந்தப் பாட்டின் வாசம் நம் நாசி தொட்டு உசுப்பிவிடும்! ’ மனசுக்குள்ள நாயனச் சத்தம்’ என்ற பாடலில் சத்யராஜின் முகத்தை தன் குரலில் காட்டியிருப்பார் அருண்மொழி. பிரபு, கார்த்திக், பார்த்திபன், ராமராஜன், விஜய் என்றெல்லாம் மிகப்பெரிய ரவுண்டு வந்தார். ராமராஜனுக்கும் பார்த்திபனுக்கும் அப்படியொரு பாந்தமாகப் பொருந்தியது அருண்மொழியின் குரல்ஜாலம்.

’மல்லிகமொட்டு மனசத்தொட்டு’ என்ற பாடலால் நம் மனதைத் தொட்டார். ‘உன்னைக் காணாமல் நானேது’ என்ற பாடலில், கொஞ்சிக் குழைந்தார். இந்தப் பாடலை, தினமும் இரவுகளில் கேட்டுக்கொண்டிருக்கிற நண்பர்கள் பலரையும் அறிவேன். அவ்வளவு ஏன்... இந்தப் பாடலை அடிக்கடி கேட்பேன். முணுமுணுப்பேன். பாலுமகேந்திராவின் ‘ராமன் அப்துல்லா’ படத்தில், ’என் வீட்டு ஜன்னல் எட்டி ஏன் பாக்கறே’ என்ற பாடலில் பவதாரிணியும் இவரும் சேர்ந்து நம் வீட்டு ஜன்னலை எட்டிக்கொண்டு பாடி, நம் உள்ளம் தொட்டிருப்பார்கள்,

’என் மனசைப் பறிகொடுத்து உன் மனசில் இடம்புடிச்சேன்’ என்று நம் மனதை கெட்டியாகப் பிடித்துக் கொண்டார் அருண்மொழி. ’பொண்டாட்டி தேவை’ படத்தில், பார்த்திபனுக்கு ‘ஆராரோ பாட்டுப் பாட’ என்ற பாடலைக் கேட்டால், காதலுக்குள் இருக்கிற தாய்மையும் தாய்மைக்குள் இருக்கிற பேரன்பும் வெளிப்படும்.

கஸ்தூரி ராஜாவின் ‘நாட்டுப்புறப் பாட்டு’ இளையராஜாவின் இசையில் அதகளம் பண்ணியது. வெள்ளிவிழாப் படமாக வெற்றிக் கொடி நாட்டியது. அருண்மொழியின் குரலில் ஒலித்த ‘ஒத்தரூபா தாரேன் அட ஒனப்பத்தட்டும் தாரேன்’ என்ற பாடலுக்காகவே வெள்ளிவிழா கொண்டாடியதும் குஷ்புவின் ஆட்டத்துக்காக ரிப்பீடட் ஆடியன்ஸ் வந்ததும் பெருங்கதை!

அருண்மொழி ஹிட்ஸ் பாடல்கள் என்று சிடி போட்டு விற்று கல்லாக்கட்டியவர்கள் உண்டு. அதேபோல, யுடியூபில் அருண்மொழி பாடல்கள் என்று போட்டால், விதம்விதமாக, ரகம்ரகமாகப் பிரித்துப் பிரித்து பாடல்களை வைத்திருக்கிற புண்ணியவான்கள் யாரென்றெல்லாம் தெரியவில்லை.

’வெண்ணிலவுக்கு வானத்தைப் பிடிக்கலையா’ என்று பாடியதை யாருக்குத்தான் பிடிக்காது?

’அடி ஆச மச்சான் வாங்கி தந்த மல்லிகைப்பூ/ அது தானாகத்தான் தந்ததம்மா புல்லரிப்பு/ ஆச மனச தூண்டி/ அது மாமன் மனச கூறும்/ தானா தந்தன தானா தானா தந்தன தானா/ அடி பேச்சியம்மா

மாரியம்மா சேந்து கும்மியடி/ என் மாமனுக்கு தூது விட்டு பாட்டு சொல்லியடி’ என்று ஸ்வர்ணலதாவுடன் அருண்மொழியும் இணைந்து பாடிய பாடலைக்கேட்டால், அடுத்து மல்லிகைப்பூவைப் பார்க்கும் போதெல்லாம் இந்தப் பாடல் நினைவுக்கு வரும். இந்தப் பாடல் கேட்கும் போதெல்லாம் மல்லிகைப்பூவாசம் மணமணக்கும்!

புல்லாங்குழல் கொடுத்த நெப்போலியனுக்கு குழல் குரல் கொடுத்த அருண்மொழிக்கு இன்று (டிசம்பர் 8) பிறந்தநாள்.

அருண்மொழியின் கையில் இருக்கும் புல்லாங்குழலை ஒருநிமிடம் வாங்கி கண்களில் ஒற்றிக் கொள்வோம். அருண்மொழிக்கு பிறந்தநாள் வாழ்த்து சொல்லி கைகுலுக்குவோம்!

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in