’அது கோயில் அல்ல, உணவகம்’: ஹிருத்திக்கின் சர்ச்சை விளம்பரம், மன்னிப்புக் கேட்ட நிறுவனம்

’அது கோயில் அல்ல, உணவகம்’: ஹிருத்திக்கின் சர்ச்சை விளம்பரம், மன்னிப்புக் கேட்ட நிறுவனம்

ஹிருத்திக் ரோஷன் நடித்துள்ள விளம்பரம் சர்ச்சையானதை அடுத்து சோமாட்டோ நிறுவனம் மன்னிப்புக் கேட்டுள்ளது.

பிரபல இந்தி நடிகர் ஹிருத்திக் ரோஷன், ஆன்லைன் உணவு விநியோகிக்கும் நிறுவனமான சோமாட்டோ (Zomato) விளம்பரத்தில் நடித்துள்ளார். இந்த விளம்பரத்தில் உஜ்ஜயினியில் உள்ள மகாகாலேஷ்வர் (Mahakaleshwar Temple) கோயிலின் பிரசாதம் குறித்து சர்ச்சைக்குரிய காட்சிகள் இடம்பெற்றுள்ள தாகக் கூறப்பட்டது.

இதற்கு அங்குள்ள இரண்டு அர்ச்சகர்கள், ’’கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு இலவசமாக வழங்கப்படும் பிரசாதத்தைக் கொச்சைப்படுத்தும் வகையில் இந்த விளம்பரம் இருக்கிறது. அதை திரும்பப் பெற்று மன்னிப்புக் கேட்க வேண்டும்’’ என்று மாவட்ட ஆட்சித் தலைவர் ஆசிஷ் சிங்கிடம் புகார் மனு அளித்தனர்.

இதையடுத்து இந்த விளம்பரம் சர்ச்சையானது. சமூக வலைதளங்களில் இந்த விளம்பரத்துக்கு எதிராக கருத்துகள் தெரிவிக்கப்பட்டன. இந்நிலையில், அந்த உணவு விநியோக நிறுவனம் மன்னிப்புக் கேட்டுள்ளது.

இதுகுறித்து அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் ’’அந்த வீடியோ பான் - இந்தியா பிரசாரத்தின் ஒரு பகுதியாக உருவாக்கப்பட்டுள்ளது. இதற்காக ஒவ்வொரு நகரத்திலும் உள்ள பிரபலமான உள்ளூர் உணவகங்களின், சிறந்த உணவுகளை அடையாளம் கண்டுள்ளோம். உஜ்ஜயினியில் பிரசாரத்துக்காக நாங்கள் தேர்வு செய்ததில் ’மகாகல்’(Mahakal) உணவகமும் ஒன்று. இது கோயிலைக் குறிக்கவில்லை.

உஜ்ஜயினி மக்களின் உணர்வுகளை ஆழமாக மதிக்கிறோம். அந்த விளம்பரம் இனி வெளிவராது. யாருடைய நம்பிக்கையையும் உணர்வுகளையும் புண்படுத்தும் நோக்கம் எங்களுக்கு இல்லை. நாங்கள் மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறோம்’ என்று தெரிவித்துள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in