சிம்புவின் `பத்துதல’ படப்பிடிப்புத்தளம்: வைரலாகும் புகைப்படங்கள்!

சிம்புவின் `பத்துதல’ படப்பிடிப்புத்தளம்: வைரலாகும் புகைப்படங்கள்!

நடிகர் சிலம்பரசனின் ‘பத்துதல’ படப்பிடிப்புத் தளத்தில் இருந்து வெளியான புகைப்படங்கள் ரசிகர்களிடையே தற்போது வைரலாகி வருகிறது.

’வெந்து தணிந்தது காடு’ பட வெற்றிக்குப் பிறகு நடிகர் சிலம்பரசன் தற்போது ‘பத்துதல’ படப்பிடிப்பில் பிஸியாக இருக்கிறார். கன்னடத்தில் சிவராஜ்குமார் நடிப்பில் வெளியாகி வெற்றிப் பெற்ற 'மஃப்ட்டி' படத்தின் ரீமேக்காக 'பத்து தல' படம் உருவாகிறது. 2017-ம் ஆண்டு நியோ நோயர் வகையில் உருவான இந்த படம் கன்னட சினிமாவில் மிக முக்கிய அந்தஸ்தை பெற்றது. நிழல் உலக தாதாவை தேடிப்போகும் ரகசிய போலீஸ் பற்றிய கதைதான் இந்தப் படம். சிவராஜ் குமார் நடித்த படங்களில் வசூல்ரீதியாக வெற்றிப் பெற்ற படமும் இது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தத் திரைப்படத்தில், சிம்புவுடன் கௌதம் கார்த்திக், ப்ரியா பவானி சங்கர், கலையரசன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இயக்குநர் கௌதம் மேனன், ’பத்துதல’ படத்தில் சிம்புவுக்கு வில்லனாக நடிக்கிறார்.

ஸ்டுடியோ கிரீன், K. E. ஞானவேல் ராஜா தயாரித்து வரும் இந்தத் திரைப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். இந்த படத்தில் எடிட்டராக தேசிய விருது பெற்ற எடிட்டர் பிரவீன் K L பணிபுரிகிறார்.

’பத்துதல’ படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு முடிந்திருந்த நிலையில், இரண்டாவது கட்டப் படப்பிடிப்பு விசாகப்பட்டினத்திலும், மூன்றாவது கட்டப்படிப்பு கன்னியாகுமரியில் நடந்திருந்தது. நான்காம் கட்ட படப்பிடிப்பு கர்நாடக மாநிலத்தில் உள்ள பெல்லாரி பகுதியில் நடந்தது. இந்த படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு சிவகங்கை மாவட்டம் காரைக்குடி மற்றும் கோவிலூரில் நடந்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இந்த 'பத்துதல' படத்தின் படப்பிடிப்பு கர்நாடக மாநிலத்தில் உள்ள துங்கபத்திரை அணையில் நடந்தபோது படப்பிடிப்புக்கு நடுவே ரசிகர்களுடன் சிம்பு எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் வெளியாகி உள்ளன. மேலும் இயக்குநர் கிருஷ்ணா மற்றும் சிம்பு ஆற்றின் கரையில் பேசுவது போல இருக்கும் புகைப்படமும், கௌதம் கார்த்திக் மற்றும் சிம்பு இயக்குநர் கிருஷ்ணாவுடன் சேர்ந்து நடந்து வரும் புகைப்படங்களும் வெளியாகி உள்ளன.

’பத்துதல’ திரைப்படம் இந்த ஆண்டு, டிசம்பர் 14 ஆம் தேதி வெளியாகும் என ஏற்கனவே அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in