சிம்பு பட விவகாரம்: தயாரிப்பாளர் சங்கத்துக்கு அபராதம்!

சிம்பு பட விவகாரம்: தயாரிப்பாளர் சங்கத்துக்கு அபராதம்!
சிம்பு - மைக்கேல் ராயப்பன்

நடிகர் சிம்பு நடிப்பில், 'அன்பானவன் அடங்காதவன் அசராதவன்' படம் கடந்த 2017 ஜூன் 23-ல் வெளியானது. இதில் நடிப்பதற்காக தனக்கு 8 கோடி ரூபாய் சம்பளம் பேசிய தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன், படம் தோல்வியடைந்ததைக் காரணம் காட்டி வெறும் 1 கோடியே 51 லட்ச ரூபாய் மட்டுமே தந்ததாக சிம்பு தமிழ் தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் தெரிவித்தார். இந்த விவகாரம் தொடர்பாக, சிம்புவுக்கு எதிராக தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பனும் தென்னிந்திய நடிகர் சங்கத்தில் புகார் அளித்தார். அதில், சிம்பு ஒழுங்காக ஷூட்டிங் வருவதே இல்லை, வந்தாலும் ஒத்துழைப்பதில்லை என்று சொல்லி இருந்தார்.

இதனால் தன்னைப் பற்றி அவதூறு செய்தி பரப்பியதாக கூறி 1 கோடி ரூபாய் மான நஷ்ட ஈடு கேட்டு மைக்கேல் ராயப்பன் மீது சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார் சிம்பு. இந்த வழக்கில், தயாரிப்பாளர் சங்கம், நடிகர் சங்கம் மற்றும் நடிகர் விஷாலையும் எதிர்மனுதாரராக சேர்த்திருந்தார் சிம்பு. இந்த வழக்கில் இருந்து தன்னை விடுவிக்கக் கோரிய விஷாலின் மனுவை கடந்த பிப்ரவரி 9-ம் தேதி நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

இந்த நிலையில், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கமானது சிம்புவின் வழக்கு தொடர்பாக 1008 நாட்களாகியும் எழுத்துபூர்வமாக எந்த வாதங்களையும் தயாரிப்பாளர் சங்கம் தாக்கல் செய்யவில்லை. ஏற்கெனவே நீதிமன்றம் அறிவுறுத்தியும் தயாரிப்பாளர் சங்கம் தாமதப்படுத்தி வந்ததால், அச்சங்கத்துக்கு 1 லட்ச ரூபாய் அபராதம் விதித்து சென்னை உயர் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது. இந்த அபராதத் தொகையை மார்ச் 31-ம் தேதிக்குள் பதிவாளர் அலுவலகத்தில் செலுத்தி அதற்கான ஆதாரத்தை நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.