`எனக்கு தெரிஞ்ச ஒரே ஹீரோ சிம்பு தான்’- கெளதம் வாசுதேவ் மேனன்

`எனக்கு தெரிஞ்ச ஒரே ஹீரோ சிம்பு தான்’- கெளதம் வாசுதேவ் மேனன்

’வெந்து தணிந்தது காடு’ படத்திற்குள் நடிகர் சிம்பு வந்தது குறித்து இயக்குநர் கெளதம் வாசுதேவ் மேனன் மனம் திறந்துள்ளார்.

கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் நடிகர் சிம்பு, சித்தி இடானி, ராதிகா உள்ளிட்ட பலர் நடித்துள்ள திரைப்படம் ‘வெந்து தணிந்தது காடு’. இந்த படத்தில் முதலில் சிம்புவை நடிக்க வைக்க தயங்கியது இதெல்லாம் குறித்து இயக்குநர் கெளதம் கல்லூரி மாணவர்களிடையே கலந்துரையாடி உள்ளார்.

அதில் அவர் பேசியிருப்பதாவது, ‘இதை கேங்ஸ்டர் ஸ்டோரி என சொல்ல விரும்பவில்லை. இந்த உலகத்தில் அதிகம் நாம் போகவில்லை என்று தான் சொல்ல வேண்டும். அப்படி நாம் பார்க்காத அந்த ஒரு உலகத்திற்குள் நிறைய வன்முறை, ஆபத்து இது எல்லாம் இருக்கிறது.

அதில் இருந்து அவர்களால் வெளியே வர முடிகிறதா அப்படி அவர்கள் நினைக்கும் போது என்ன நடக்கிறது என்பது தான் கதை. இந்த கதையை எழுத்தாளர் ஜெயமோகன் என்னிடம் சொன்ன போது, புதிய ஒரு நடிகரை தான் நடிக்க வைக்க வேண்டும், ஏற்கெனவே நன்றாக தெரிந்த ஒரு நடிகர் வேண்டாம் என சொன்னார்.

நான் சொன்னேன், ‘எனக்கு தெரிந்த ஒரே நடிகர் சிம்பு தான். நான் மெசேஜ் அனுப்பி சந்திக்க வேண்டும் என்று சொன்னால் வர கூடிய ஒரே ஆள் அவர் மட்டும் தான். அவர் நிச்சயம் இந்த கதைக்கு செட் ஆவார். நான் அதற்கு நம்பிக்கை தருகிறேன் என்று சொல்லி சிம்புவிடம் இந்த கதையை சொன்னேன்.

’நீங்கள் எப்படி வேறொரு பாணியில் கதை செய்ய விரும்புகிறீர்களோ நானும் அந்த எண்ணத்தில் தான் உள்ளேன்’ என்று இந்த கதைக்கு சிம்பு சம்மதம் தெரிவித்தார். பட ட்ரெய்லரில் கோட் சூட்டுடன் சிம்புவின் தோற்றம் இரண்டாம் பாகத்திற்கானது. முதல் பாகத்திற்கு மக்கள் தரும் ஆதரவை பொறுத்து தான், இதன் இரண்டாம் பாகத்தை ஆரம்பிப்பது என திட்டமிட்டுள்ளோம்’ என பேசியுள்ளார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in