
நடிகர் சிலம்பரசன் மீண்டும் பழைய ரூட்டுக்கே திரும்பி விட்டாரா என தயாரிப்பாளர் கமல்ஹாசனும், இயக்குநரும் கலக்கத்தில் உள்ளனர்.
நடிகர் சிலம்பரசன் ‘மாநாடு’, ‘வெந்து தணிந்தது காடு’, ‘பத்து தல’ என தனது செகண்ட் இன்னிங்க்ஸில் படங்களைப் பொறுமையாக தேர்ந்தெடுத்து வருகிறார். அந்த வரிசையில் தனது அடுத்தப் படமாக கமல்ஹாசன் தயாரிப்பில் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் ’எஸ்.டி.ஆர். 48’ அறிவிப்பு வெளியாகி சில மாதங்கள் ஆகி விட்டது. அதற்கு பிறகு அந்த படம் குறித்து பெரிதாக எந்த அப்டேட்டும் இல்லை. சரித்திர கதையாக உருவாக இருக்கும் இதில் நடிகர் சிம்பு இரட்டை வேடங்களில் நடிப்பார் எனவும் சொல்லப்படுகிறது.
’பத்து தல’ வெற்றிக்குப் பிறகு மீண்டும் ஐசரி கணேஷ் தயாரிப்பில் ஒரு படம் நடிப்பதாக இருந்தது. இதற்கிடையில் கமல் படத்தில் கமிட் ஆனதால் ஐசரி கணேஷிற்கு படம் நடித்துத் தர முடியாமல் மீண்டும் சர்ச்சை வளையத்திற்குள் வந்தார் சிம்பு. ஆனால், ஐசரி கணேஷ் எங்களுக்குள் பேசி தீர்த்து விட்டோம் என பொது வெளியில் சொல்ல, கமல் படத்தில் கவனம் செலுத்த ஆரம்பித்தார் சிம்பு.
இந்த படத்திற்காக மார்ஷியல் கலை கற்று வருகிறார் சிம்பு. இதற்காகவே, மாதக் கணக்கில் நாள் கடத்திக் கொண்டிருப்பதால் படம் தொடங்கப்படாமல் இருக்கிறது. இதனால், தயாரிப்பாளர் கமலும், இயக்குநரும் நொந்து போய் இருக்கிறார்கள் என்கிறது கோலிவுட் வட்டாரம். ‘சிம்பு கால்ஷீட்ன்னா சும்மாவா?’ என்று படத்தின் தாமதம் குறித்து, சிம்புவை வைத்து படம் தயாரித்த தயாரிப்பாளர்கள் இரவு நேரங்களில், தங்களது முந்தைய சிம்பு பட அனுபவங்களை பேசி நெருக்கமானவர்களிடம் புலம்பி வருகின்றனராம்.