இன்னும் பல உயரங்களை அடைய வேண்டிய கலைஞன்

பிப்ரவரி 3: சிலம்பரசன் பிறந்தநாள்
இன்னும் பல உயரங்களை அடைய வேண்டிய கலைஞன்

அனைத்துப் பாடங்களிலும் நல்ல மதிப்பெண்களைப் பெற்று ரேங்க் வாங்கும் புத்திசாலி மாணவர்கள். அனைத்து பாடங்களில் கஷ்டப்பட்டு பாஸ் செய்து தப்பிக்கும் சுமார் மாணவர்கள், பல பாடங்களில் ஃபெயில் ஆகும் மக்கு மாணவர்கள் என மாணவர்களைப் பொதுவாக வகைப்படுத்துவார்கள். ஆனால் ஒவ்வொரு வகுப்பிலும் இந்த மூன்று வகைமைக்குள்ளும் அடங்காத ஒரு மாணவர் இருப்பார். அவர் பெரும்பாலான பாடங்களில் ஜஸ்ட் பாஸ் செய்திருப்பார். ஒரு சில பாடங்களில் ஃபெயில்கூட ஆவார். ஆனால் ஒரு சில பாடங்களில் 70, 80 மதிப்பெண்களைப் பெற்றிருப்பார். மதிப்பெண்களைத் தாண்டி அனைத்துப் பாடங்களிலுமே அவர் தனக்குத் தெரிந்த கேள்விகளுக்கு விடை எழுதியிருக்கும் விதம் ஆசிரியர்களை வியக்க வைக்கும். ‘இந்தப் பையன் இன்னும் கொஞ்சம் மெனெக்கெட்டால் முதல் ரேங்க் வாங்கும் மாணவனுக்கு போட்டியாகிவிடுவான்” என்று ஆசிரியர்கள் நினைப்பார்கள். திறமை இருந்தும் கவனக்குறைவு, விட்டேத்தி மனநிலை உள்ளிட்ட பிரச்சினைகளின் காரணமாக தான் டைய வேண்டிய உயரத்தை அடையாமல் இருப்பதற்காக அவனிடமே அதிகமாக கண்டிப்புக் காண்பிப்பார்கள்... அதே நேரம் அவன் மீது எப்போதும் அன்பு செலுத்துவார்கள். அவன் மீதான நம்பிக்கையை ஒருபோதும் கைவிட்டுவிட மாட்டார்கள்.

திறமையிருந்தும் தான் அடைந்திருக்க வேண்டிய உயரத்தை அடைய மறுக்கும் அந்த மாணவனைப் போன்றவர்தான் சிம்பு என்றும் எஸ்.டி.ஆர். என்றும் அழைக்கப்படும் அழைக்கப்படும் டி.ஆர்.சிலம்பரசன். அவருடைய தவறுகளை வெளியே விமர்சித்துக்கொண்டே உள்ளூர அவர் மீது அன்பு செலுத்தும் ஆசிரியர்களைப் போன்றவர்கள்தான் பெரும்பாலான தமிழ் சினிமா ரசிகர்கள். அரிதாகவேனும் சிலம்பரசன் படங்கள் நல்ல படங்களாக அமைந்துவிடும்போது அவை மிகப் பெரிய அளவில் அனைவராலும் கொண்டாடப்படுவது இதனால்தான்.

இவ்வளவு பெரிய மக்கள் ஆதரவைப் பெற உதவியிருக்கும் அபாரமான பன்முகத் திறமையை வளர்த்துக்கொள்ள சிலம்பரசனுக்கு இரண்டு வயது நிறைவடைவதற்கு முன்பிருந்தே அடித்தளம் இடப்பட்டுவிட்டது. அஷ்டாவதானி என்று புகழப்பெற்ற பன்முகத் திறமைசாலியும் படைப்பாளியுமான டி.ராஜேந்தர் - நடிகை உஷா தம்பதியின் மகனாகப் 1983 பிப்ரவரி 3-ல் பிறந்த சிம்பு, தனது தந்தை எழுதி, இயக்கி, தயாரித்து நடித்த ‘உறவைக் காத்த கிளி’ திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். தொடர்ந்து தந்தையின் பல படங்களில் சிறுவனாக நடித்தார். அவருடைய குழந்தைப் பருவத்தின் பெரும்பகுதி படப்பிடிப்புத் தளங்களில்தான் கழிந்தது. வசனங்களை மனனம் செய்வது. கேமராவைப் பார்த்து மூச்சு புடைக்கப் பேசுவது. நடனம், பாடல், சண்டை என வெகுஜன சினிமாவுக்குத் தேவையான அனைத்துக் கலைகளிலும் பொடியனாக இருந்தபோதே அவர் பயிற்சிபெறத் தொடங்கினார். ‘எங்க வீட்டு வேலன்’ திரைப்படத்தில் சிறுவனாக இருந்தபோதே முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்து அசத்தினார். தந்தையின் மூலமாகவே ’காதல் அழிவதில்லை’ படத்தில் கதாநாயகனாகக் களமிறக்கப்பட்டார்.

அடுத்த சில ஆண்டுகளில் ‘மன்மதன்’ திரைப்படத்தின் மூலம் கதை - திரைக்கதை ஆசிரியர் அவதாரம் எடுத்தார். அந்தப் படத்தை இயக்கியது ஏ.ஜே,முருகன் என்றாலும் படத்தின் அனைத்து விஷயங்களையும் இறுதி செய்தது சிலமபரசன்தான் என்று கூறப்பட்டது. இது குறித்த சர்ச்சையும் இதற்கடுத்த பல சர்ச்சைகளும் சிலம்பரசனை இன்றுவரை சுற்றிச் சுழல்கின்றன. ஆனாலும் அவருடைய திரைப்பயணமோ ரசிகர்களின் அபிமானமோ இவற்றால் பாதிக்கப்பட்டதில்லை. ‘மன்மதன்’ மிகப் பெரிய வெற்றியையும் விமர்சகர்களின் பாராட்டையும் பெற்றது. 21 வயது இளைஞனின் அபாரமான சாதனையாக அந்த வெற்றி கருதப்பட்டது. ‘தம்’, ‘கோவில்’, ‘குத்து’, ‘தொட்டி ஜெயா’, ‘சரவணா’ என நடிகராக அவருக்கு வெற்றிகளும் இடையிடையே ‘அலை’, ’வல்லவன்’, ‘காளை’ போன்ற தோல்விப் படங்களும் அமைந்துவந்தன.

வெற்றிப் படங்கள் ஒவ்வொன்றிலும் சிம்பு ஒவ்வொரு பரிமாணத்தை வெளிப்படுத்தினார். ‘சாமி’யின் பிரம்மாண்ட வெற்றிக்குப் பிறகு ஹரி இயக்கிய ‘கோவில்’ படத்தில் அமைதியும் நிதானமும் நிறைந்த கிராமத்து இளைஞனாக அதுவரையில் திரைப்படங்கள் மூலமாகவும் திரைக்கு வெளியேயும் தனக்கு ஏற்பட்டிருந்த பிம்பத்துக்கு முற்றிலும் நேரெதிரான கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்திருந்தார். ‘தொட்டி ஜெயா’ படத்தில் மிக அமைதியான கேங்ஸ்டராக அசத்தினார். கே.எஸ்.ரவிகுமார் இயக்கிய ‘சரவணா’வில் ஆக்‌ஷன், ரொமான்ஸைப் போல காமெடியிலும் கைதேர்ந்தவர் என்பதை நிரூபித்தார். ‘வல்லவன்’ திரைப்படத்தில் இயக்குநராக அவதாரமெடுத்தார். அந்தப் படம் தோல்வி அடைந்தாலும் அது வெளியாவதற்கு முன் இருந்த மிகப் பெரிய எதிர்பார்ப்பு ஒரு திரைக்கலைஞராக சிலம்பரசனுக்கு இருந்த பேராதரவை உணர்த்தியது.

தொடர்ந்து திரையைப் பார்த்து வசனம் பேசும் மாஸ் நடிகராகவே நடித்து வந்த சிலம்பரசன் ஸ்டைலிஷ் இயக்குநராக அறியப்படும் கெளதம் மேனனுடன் இணைந்தது யாரும் எதிர்பாராத திருப்பம். இந்த இணையுடன் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானும் இணைந்துகொள்ள ‘விண்ணைத்தாண்டி வருவாயா’ எனும் அற்புதமான காதல் திரைப்படம் ரசிகர்களுக்குக் கிடைத்தது. இந்தப் படத்தில் கார்த்திக்காக நடித்த சிம்புவின் அழகால் பெண்கள் மட்டுமல்லாமல் ஆண்களும் வசீகரிக்கப்பட்டனர், கெளதம் படங்களுக்கேற்ற உயர்நடுத்தர வர்க்க இளைஞனாக சிம்பு பரிணமத்திருந்த விதம் அனைவரையும் கவர்ந்தது. தமிழ் சினிமாவின் தலைசிறந்த காதல் படங்களில் ஒன்றான ‘விண்ணைத்தாண்டி வருவாயா’ சிம்புவின் திரைவாழ்வில் முக்கியமான மைல்கல் என்பதை மறுக்க முடியாது.

அதற்குப் பிறகு ஏறுமுகத்தில் பயணித்திருக்க வேண்டிய அவருடைய திரைப் பயணம் பல்வேறு தடைகளையும் சறுக்கல்களையும் எதிர்கொண்டது. அவற்றில் பெரும்பாலானவை ஏன் நிகழ்ந்தன என்பதில் இன்றுவரை தெளிவில்லை. இடையிடையே பாடகராகவும் பாடலாசிரியராகவும் சிலம்பரசன் திரைவானில் ஒளிவீசிக்கொண்டிருந்தார், சில மோசமான படங்களில்கூட பாடல்களில் அவருடைய அற்புதமான நடனம் அனைவரையும் வியக்க வைத்தது. ‘கோவா’, ‘காக்கா முட்டை’ போன்ற படங்களில் வசீகருக்கும் கெளரவத் தோற்றங்களில் தலைகாட்டினார். ஆனால் அனைத்து தரப்பினராலும் கொண்டாடப்படும் ஒரு படத்தில் அவர் நடிக்க 11 ஆண்டுகள் காத்திருக்க வேண்டியிருந்தது.

கடந்த ஆண்டு வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியான ‘மாநாடு’ திரைப்படம்தான் சிலம்பரசன் திரைவாழ்வில் அடுத்த மைல்கல் தருணமாக அமைந்தது. டைம் லூப் எனும் புதிய விஷயத்தைக் கையிலெடுத்துக்கொண்டு தொடக்கத்திலிருந்து இறுதிவரை பரபரப்பாக நகரும் திரைக்கதையுடன் இஸ்லாமியர்கள் மீது சுமத்தப்படும் வெறுப்பு அரசியலைச் சாடியதால் அரசியல்ரீதியான முக்கியத்துவம் பெற்றுவிட்ட ‘மாநாடு’ சிலம்பரசன் தன்னிகரற்ற திறமைசாலி என்பதை மீண்டும் நிரூபித்துள்ளது. இடையில் மிகவும் பருத்துப் போயிருந்தவர் இந்தப் படத்தில் முன்பைவிட ஒல்லியாக தன் நிஜ வயதைவிட இளையவர் போன்ற தோற்றத்தினால் மட்டுமல்லாமல் நிதானமான அர்ப்பணிப்புமிக்க நடிப்பாலும் அனைவரையும் வியக்கவைத்தார்.

இடைப்பட்ட காலத்தில் சிலம்பரசன். மணி ரத்னம் (’செக்க சிவந்த வானம்), சுந்தர்.சி (‘வந்தா ராஜாவாதான் வருவேன்’), பாண்டிராஜ் (‘இது நம்ம ஆளு’) என முக்கியமான இயக்குநர்களின் படங்களில் நடித்தார். இவற்றில் ‘செ.சி.வ’ மட்டுமே ஓரளவு பேசப்பட்டது. இந்தக் காலகட்டத்தில் வெளியான ‘அச்சம் என்பது மடமையடா’, ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ போன்ற படங்கள் சிலம்பரசன் சினிமாவில் விருப்பத்துடன்தான் இருக்கிறாரா எனும் சந்தேகத்தை எழுப்பின. இரண்டு படங்களிலும் அவருடைய தோற்றம் மிக மோசமாக இருந்தது. இரண்டு படங்களிலும் அவர் ஒழுங்காகப் படப்பிடிப்புக்கு வரவில்லை என்னும் குற்றச்சாட்டை தயாரிப்பு தரப்பினர் வலுவாக முன்வைத்தனர். இது போதாது என்று திரைக்கு வெளியே பெண்களை மிக மோசமாக இழிவுபடுத்திய ‘பீப் சாங்’ சர்ச்சையிலும் சிக்கினார்.

ஆனால் இந்த சர்ச்சைகள் எல்லாம் சிலம்பரசனின் மீதான விமர்சனங்களுக்கும் அரிதாக கண்டனங்களுக்கும் வழிவகுத்தனவே தவிர யாரும் அவரை வெறுத்து ஒதுக்கிவிட முடியவில்லை. அவ்வப்போது அவர் மீதான நம்பிக்கைத் தக்கவைப்பதற்கான ஒளிக்கீற்றுகள் அவரிடமிருந்து வெளிப்பட்டுக்கொண்டே இருந்தன. இறங்குமுகத்தில் இருந்தபோது மணி ரத்னம் போன்ற நாடு தழுவிய ரசிகர்களைக் கொண்ட இயக்குநரின் படத்தில் நாயகனாகும் வாய்ப்பைப் பெற்றதும் அந்த மல்ட்டி ஸ்டாரர் படத்தில் அரவிந்த் சாமி, விஜய் சேதுபதி உள்ளிட்ட திறமையான சகநடிகர்களைத் தாண்டிச் சிலம்பரசனின் பங்களிப்பு தனித்துத் தெரிந்ததும் அத்தகைய ஒளிக்கீற்றுதான்.

இப்போது ‘மாநாடு’ படத்துக்குப் பிறகு சிலம்பரசனுக்கு மீண்டும் ஏறுமுகம்தான் என்று பரவலான நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. இதற்குக் காரணம் அந்தப் படத்துக்குக் கிடைத்த வெற்றியும் பாராட்டுகளும் மட்டுமல்ல. முன்பைவிட இளமையாகவும் என்றும் மாறாத துடிப்புடனும் எப்போதும் தன்னிடமுள்ள பன்முகத் திறமைகளை அபாரமாக வெளிப்படுத்த அவர் மீண்டும் வந்துவிட்டார் எனும் நம்பிக்கை இந்தப் படத்தின் மூலம் கிடைத்துள்ளது. கெளதம் மேனன் இயக்கும், ‘வெந்து தணிந்தது காடு’, கன்னடத்தில் வெற்றிபெற்ற ‘முஃப்டி’ படத்தின் தமிழ் மறு ஆக்கமான ‘பத்து தல’ என சிலம்பரசனின் அடுத்தடுத்த படங்களின் முன்னோட்டங்கள் அந்த நம்பிக்கைக்கு வலுவூட்டும் வகையில் அமைந்துள்ளன.

இந்த நம்பிக்கை என்றென்றும் நிலைக்க வேண்டும். இனி வரும் ஆண்டுகளில் சிலம்பரசனுக்கு மென்மேலும். பல வெற்றிகளும் புகழ்மாலைகளும் கிடைக்க வேண்டும் அவருடைய அசலான திறமைக்கேற்ற உயரத்தை அவர் அடைய வேண்டும் என்று மனதார வாழ்த்துவோம்!

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in