ஐஸ்க்ரீம் குரல், திராட்சைக் கண்கள்: திரையுலக தேவதை சில்க் ஸ்மிதா!

நினைவு நாளில் சிறப்புப் பகிர்வு
ஐஸ்க்ரீம் குரல், திராட்சைக் கண்கள்: திரையுலக தேவதை சில்க் ஸ்மிதா!

கிளப் டான்ஸ் என்பது அறுபதுகளின் இறுதியில் இருந்துதான் தொடங்கியது. விஜயலலிதா, விஜயநிர்மலா முதலானோர்கள் அதில் தங்கள் திறமையைக் காட்டினார்கள். ஆலம், ஹெலன் கூட அப்படி ஆடினார்கள். ஜெயமாலினி, அனுராதா என்று அந்த வரிசை நீண்டது. திரைப்படங்களில் கிளப் டான்ஸ் ஆடுபவர்கள், ஒன்று கொள்ளைக் கூட்டத்தினரை குஷிப்படுத்துவதற்காக ஆடுவார்கள் அல்லது கொள்ளைக் கூட்டத்தில் சிக்கிக்கொண்ட அம்மா, சகோதரி, காதலி முதலானோரைக் காப்பாற்றுவதற்காக ஹீரோ மாறுவேடம் போட்டுக்கொண்டு வருவார். அங்கே இந்த நடிகைகள் ஆடுவார்கள். சில தருணங்களில், நாயகியும் நாயகனும் வேடமிட்டு ஆடுவார்கள். இவர்களையெல்லாம் ஆண் ரசிகர்கள் விசிலடித்து வரவேற்பார்கள். அவர்களுக்காகவே திரும்பத் திரும்பப் பார்ப்பார்கள். ’என்னது இது... அரையும் குறையுமா’ என்று முகம் சுளிக்கும் பெண்களே அதிகம் இருந்தார்கள்.

ஆனால் ஆண்கள் மட்டுமின்றி பெண்களும் கூட, அந்த நடிகையின் ஆட்டத்திலும் பார்வையிலும் அழகிலும் சொக்கிப்போனார்கள். ‘என்னமா ஆடுறா பாத்தியா?’ என்று பெண்கள் ஒருவருக்கொருவார் வியந்து பேசிக்கொண்டார்களென்றால்... அது ‘சில்க்’ ஸ்மிதாவைப் பார்த்துத்தான்! பெண்களையும் கவர்ந்திழுத்த ஐஸ்க்ரீம் குரல் நாயகியாக வலம் வந்தார் சில்க் ஸ்மிதா. தமிழ் சினிமா உலகில், சில்க் ஸ்மிதாவுக்கு இருந்த கிரேஸ்... இதுவரை வேறு எந்த நடிகைக்கும் இந்தளவுக்கு இருந்ததில்லை என்பதுதான் உண்மை!

இன்றைக்கு கிளப் டான்ஸ் என்பதே குறைந்துவிட்டது. மாறாக, படத்தின் நாயகிகளே படம் முழுக்க, அரையும்குறையுமாகத்தான் வலம் வருகிறார்கள். போதாக்குறைக்கு, மிகப்பெரிய ஹீரோயின், படத்தில் ஒரேயொரு பாடலுக்கு நடனமாடிவிட்டுப் போவதும் நடக்கத்தான் செய்கிறது.

ஆனால், அப்போது ஒரு பாடலுக்கு வந்து நடனமாடிவிட்டுப் போனாலும் சரி, படம் முழுக்க ஒரு கேரக்டரில் வந்தாலும் சரி... சில்க் ஸ்மிதாவுக்கு தனி மரியாதையும் கெளரவமும் கொடுத்தார்கள் ரசிகர்கள்.

போஸ்டரில், ஒரு ஓரத்தில் சில்க்கின் புகைப்படம் கண்டிப்பாக வைத்தால்தான், படம் பார்க்க ஆடியன்ஸ் வருவார்கள் என்றிருந்த காலம் அது. வேறு எந்தவொரு கவர்ச்சி நடிகைக்கும் கிடைக்காத வெற்றி இது!

ஆந்திரா சொந்த ஊர். விஜயலட்சுமி சொந்தப் பெயர். ’விஜி விஜி’ என்றுதான் எல்லோரும் கூப்பிடுவார்கள். ஆனால் கரூரைப் பூர்விகமாகக் கொண்டவர். இவர் பிறப்பதற்கு முன்பே ஆந்திராவின் பக்கம் போய்விட்டார்கள். சிறுவயதிலேயே சூட்டிகையாகவும் எல்லோரையும் கவரும் விதமாகவும் இருப்பார் விஜி. அளவெடுத்த உடல். சாமுத்ரிகா லட்சணம் கொண்ட தேகம். என்று வாலிப வயதில் இருந்த விஜியை எல்லோருக்கு பிடித்துப் போனது. முக்கியமாக, அவருடைய கண்கள் பல்லாயிரம் கதைகள் பேசின. ‘கண்ணழகி’ என்று சினிமாவில் டி.ஆர்.ராஜகுமாரியைக் கொண்டாடுவார்கள். அதேபோல், ‘இவளுக்கும் ராஜகுமாரி மாதிரி கண்ணுல ஏதோ மாயமந்திரம் இருக்குப்பா’ என்று எல்லோரும் சொன்னார்கள். கண்களை திராட்சைக்கு ஒப்பிட்டு, பின்னாளில் பத்திரிகைகளெல்லாம் எழுதின.

குடும்பத்தில் கஷ்டம், வறுமை, சோகம். இளம் வயதிலேயே இவருக்கு மேக்கப் கலைஞராக வேலை கிடைத்தது. திரையுலகில், பல நடிகைகளுக்கு ‘மேக்கப்’ போடுகிற வேலையைச் செய்துகொண்டிருந்தவரை, வினுச்சக்கரவர்த்தி கூர்ந்து கவனித்தார். ‘என்னய்யா இது... மிகப்பெரிய ஸ்டாரா வர்ற அளவுக்கு அந்தப் பொண்ணுக்கிட்ட முக லட்சணமும் கண்ணும் இருக்கு. அந்தப் பொண்ணு மேக்கப் போட்டுவுட்டுக்கிட்டு இருக்குது’ என்று அருகில் இருந்தவர்களிடம் புலம்பிக்கொண்டிருந்தார் வினுச்சக்கரவர்த்தி.

பேச்சோடு நிறுத்திக்கொள்ளவில்லை. தன்னுடைய கதையில் உருவான ‘வண்டிச்சக்கரம்’ படத்தில் அட்டகாசமான ஒரு கேரக்டரை வழங்கி அறிமுகப்படுத்தியும் வைத்தார். அவருக்கு சினிமாவுக்காக ‘ஸ்மிதா’ என்றுதான் பெயர் வைத்தார். ‘வண்டிச்சக்கரம்’ படத்தில் சாராயக் கடை வைத்திருக்கும் ‘சிலுக்கு’ எனும் கதாபாத்திரத்தில் நடித்து ‘வா மச்சான் வா வண்ணாரப்பேட்டை’ என்ற பாடலில் நடித்த பிறகு, ஸ்மிதாவுடன் சிலுக்கும் சேர்ந்துகொண்டது. எல்லோரும் ‘சிலுக்கு ஸ்மிதா’ என்றார்கள். ‘சில்க் ஸ்மிதா’ என்றானார்.

மேக்கப் கலைஞராக தன் வாழ்க்கையைத் தொடங்கி, பின்னர் 450-க்கும் மேற்பட்ட படங்களில் மேக்கப் போட்டு நடித்து, கைத்தட்டல்களையும் விசில்களையும் புகழையும் அள்ளிய சில்க் ஸ்மிதா, கடைசிவரை சொந்த வாழ்க்கையில் எந்த மேக்கப்பும் போட்டுக்கொள்ளாமல், முகமூடியும் அணிந்துகொள்ளாமல், இயல்பாகவே, உண்மையாகவே வாழ்ந்தார்!

வரிசையாக படங்கள் வந்தன. படத்தில் ஒரேயொரு ஆட்டத்துக்குக் கூப்பிட்டார்கள். காலையில் ஒரு படத்துக்கு நடனம், மதியத்தில் ஒரு படத்துக்கு நடனம், இரவில் ஒரு படத்துக்கு நடனம் என்று பிஸியானார். காலையில் தமிழில் நடிப்பார். மாலையில் விமானத்தில் பறந்து தெலுங்கில் ஆடுவார். மறுநாள் காலை ஏவி.எம் ஸ்டூடியோவில் ஒரு படத்துக்கு ஆடிக்கொண்டிருப்பார். பறந்துபறந்து வேலை செய்துகொண்டிருந்தவரின் வாழ்க்கையும் உயரத் தொடங்கியது.

‘நாம ஒரு படம் தயாரிக்கணும்’ என்று முடிவு செய்ததும் ஒரு தயாரிப்பாளர் முதலில் என்ன செய்வார்? இயக்குநரைத் தேடுவார். கதை கேட்பார். ஹீரோ, ஹீரோயின், இசையமைப்பாளர் என்றெல்லாம் தேர்வு செய்வார். ஆனால் முதலில் இயக்குநர்களிடம் தயாரிப்பாளர்கள் சொல்லும் வார்த்தை, ‘எப்படியாவது இந்தப் படத்துல சிலுக்கு இருக்கணும். அவருக்குத் தகுந்தது மாதிரி ஒரு டான்ஸ் வைங்க. ஒரு கேரக்டர் கொடுங்க’ என்று கண்டிஷன் போட்டுவிடுவார்கள். இதையேதான் இயக்குநரும் நினைத்திருப்பார். ஹீரோவும் இப்படித்தான் சொல்லுவார். அவ்வளவு ஏன்... எண்பதுகளில் பல கதாநாயகிகள், ‘சிலுக்கு அக்கா படத்துல உண்டுதானே’ என்று கோரிக்கை வைத்துவிடுவார்கள். ஒட்டுமொத்த படத்தையும் உயர்த்தித் தூக்கிவிடுகிற ‘மார்க்கெட் வேல்யூ’ எனும் ஏணியில் ஏறி, அப்படியொரு சிம்மாசனத்தில் அமர்ந்திருந்தார் சில்க் ஸ்மிதா.

இரண்டை மணி நேர சினிமாவுக்குள் வருகிற ஒரேயொரு நான்கரை நிமிடப் பாட்டுக்கு சில்க் நடித்தாலே, படம் மினிமம் கியாரண்டி பட்டியலில் வந்துவிடுகிற வித்தை நடந்தது. ‘நிழல்கள்’ படம் தோல்வியுற்ற நிலையில் அடுத்த படத்துக்கு வெறித்தனத்துடன் வேலை செய்துகொண்டிருந்தார் இயக்குநர் பாரதிராஜா. அதுதான் அவர் திரையுலக வாழ்வில் அவருக்குக் கிடைத்த முதல் தோல்வி. இதுவரை வரிசையாக எடுத்த ஐந்து படங்களும் வெற்றி. மீண்டும் வெற்றிக் கனியைப் பறிக்க, கடுமையாக உழைத்துக் கொண்டிருந்தார். அவரது நண்பர் இளையராஜா படத்தைத் தயாரித்தார். படத்தில் புதுமுகங்களை அறிமுகப்படுத்தினார் பாரதிராஜா. சந்திரசேகர் நடிப்பதாக இருந்த கதாபாத்திரத்துக்கு தியாகராஜனைத் தேர்வுசெய்தார். வடிவுக்கரசிக்காக உருவாக்கியிருந்த கதாபாத்திரத்தில் சில்க் ஸ்மிதாவை நடிக்கவைத்தார்.

அரையும்குறையுமாக, வெளிச்சங்களும் இருட்டுகளும் மினுமினுக்கிற செட்டுகளில் நடனமாடிக்கொண்டிருந்த சில்க் ஸ்மிதாவுக்கு, ‘அலைகள் ஓய்வதில்லை’ படத்தில் அப்படியொரு குடும்பப் பாங்கான கேரக்டரை வழங்கினார் பாரதிராஜா. ராதாவின் அண்ணியாக, தியாகராஜனின் மனைவியாக, அவர் ஏற்ற வேடத்தை மிக அழகாக, கச்சிதமாக, பாந்தமாக, பிரமாதமாக, அதேசமயம் கிளாமரே இல்லாமல் நடித்ததைப் பார்த்துவிட்டு, ‘அட... சிலுக்கு பிரமாதமா நடிக்கிறாருல்ல’ என்று மொத்தத் திரையுலகமும் பாராட்டியது.

இந்தப் படம் தெலுங்கில் எடுக்கப்பட்டபோது, அதிலும் இதே கேரக்டரை சில்க்கே செய்திருந்தார். ஒவ்வொரு படத்திலும் குறைந்த ஆடையுடன் ஆடிப்பாடி நடித்த சில்க் ஸ்மிதா, இந்தப் படத்தில் புடவை கட்டிக்கொண்டு, இழுத்துப் போர்த்திக்கொண்டு, கணவனுக்கு அடங்கிப் புழுங்கிப் போகிற மனைவியாக மிகச்சிறப்பாக நடித்திருந்தார். அறிமுகங்களான கார்த்திக், ராதாவைக் கடந்து சில்க் ஸ்மிதா ரொம்பவே பேசப்பட்டார்.

மீண்டும் இளையராஜா படம். இந்த முறை தம்பி கங்கை அமரன் இயக்கம். முதன்முறையாக இயக்கும் படம். அதற்கு முன்னதாக இளையதிலகம் பிரபு நடித்த படங்கள் பெரிதாகப் போகாத நிலை. ஆனாலும் பிரபுதான் நாயகன். ‘பயணங்கள் முடிவதில்லை’ படத்தில் நடிக்க வேண்டிய சுரேஷ் சில காரணத்தால் அதில் அறிமுகமாக முடியாமல் போக, இயக்குநர்கள் பாரதி - வாசு (சந்தானபாரதி, பி.வாசு) ‘பன்னீர் புஷ்பங்கள்’ படத்தில் சுரேஷை அறிமுகப்படுத்தியிருந்தார். பிரபுவையும் சுரேஷையும் இணைத்து, விஜி எனும் நடிகையையும் அறிமுகப்படுத்திய ‘கோழி கூவுது’ படத்தில் சில்க் ஸ்மிதாவுக்கு மிகச்சிறந்த கதாபாத்திரம் வழங்கப்பட்டது. அந்தக் கேரக்டருடன் கொஞ்சம் கிளாமரும் சேர்த்து குழைத்து அசத்தினார் சில்க்!

சில்க் ஸ்மிதா வாழ்வில், ‘அலைகள் ஓய்வதில்லை’ படமும் ‘கோழி கூவுது’ படமும் அவரை வெறும் டான்ஸ் ஆர்ட்டிஸ்ட் எனும் நிலையில் இருந்து நடிகை, நல்ல நடிகை, நல்ல குணச்சித்திர நடிகை எனும் அந்தஸ்துக்கு உயர்த்தின. ’பூவே இளைய பூவே’ என்கிற மெலடி பாடலையும் சில்க்கையும் பிரபுவையும் இன்றைக்கும் ரசிக்கலாம். ’சூரக்கோட்டை சிங்கக்குட்டி’யில் ‘காளிதான் கண்ணதாசன்’ என்ற மென்மையான பாடலில், அருமையான சிலுக்கை ரசித்துக்கொண்டே இருக்கலாம்.

கங்கை அமரனின் ‘கொக்கரக்கோ’விலும் சிறந்த கேரக்டரை வழங்க, அதிலும் தன் நடிப்புத் திறனை வெளிப்படுத்தி அசத்தினார் சில்க்.

கமலின் ‘சகலகலா வல்லவன்’ படத்தில் இவரின் கேரக்டரும் அழகு. ‘நேத்து ராத்திரி யம்மா’ பாட்டும் டான்ஸும் கொள்ளை அழகு. ‘மூன்று முகம்’, ‘தங்கமகன்’ என வரிசையாகப் படங்கள் கிடைத்துக் கொண்டே இருந்தன.

சில்க் ஸ்மிதாவின் ப்ளஸ்ஸாக உடற்கட்டும் மட்டுமே இருந்துவிடவில்லை. அவரின் கண்களும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தின. அதுமட்டுமா? அவருடைய குரல், எந்த நடிகைக்கும் இல்லாத குரல். குரலுக்குள் கிளாமரும் கவர்ச்சியும் இழைந்தோடியிருக்கும். அந்தக் குரலைக் கொண்டு சில்க் பேசும்போதே கிறங்கிப் போனார்கள் ரசிகர்கள். ஒளிப்பதிவு மேதை அசோக்குமாரின் ‘அன்று பெய்த மழையில்’ படத்தில் தேவதை மாதிரி இருப்பார். பிரதாப்பின் ‘ஜீவா’ படத்தில் ராணி மாதிரி இருப்பார்.

ஒளிப்பதிவாளரும் இயக்குநருமான பாலு மகேந்திரா, கமலுக்கு தேசிய விருது வாங்கித் தந்த ‘மூன்றாம் பிறை’ படத்தை இயக்கினார். ஸ்ரீதேவியின் நடிப்பும் கமலின் நடிப்பும் நம்மை என்னவோ செய்யும். இதையடுத்து நம்மை முழுமையாக ஆக்கிரமித்துக் கொள்ளும் நடிப்பு... சில்க்குடையது. கமலை எப்படியாவது சரிக்கட்டிவிட வேண்டும் என்று தவிப்பதும் ‘பொன்மேனி உருகுதே’ பாடலுக்கு ஆடுவதும் என நம் நெஞ்சில் தனியிடம் பிடித்திருப்பார். பாலு மகேந்திராவின் ‘நீங்கள் கேட்டவை’யிலும் நாயகிக்கு இணையான கேரக்டர். சொல்லப்போனால், படத்தில் அர்ச்சனா ஒரு நாயகி. சில்க் இன்னொரு நாயகி. எப்படியெப்படியெல்லாமோ ஆட்டத்தில் அதகளம் பண்ணும் சில்க், இதில் தியாகராஜனுக்கு தக்கபடி ஸ்டெப்ஸ் போட்டு ‘அடியே மனம் நில்லுன்னா நிக்காதடி’ என்ற பாடலுக்கு ஆடியிருப்பார்.

இயக்குநர் பாக்யராஜ் படங்களில் எப்போதுமே கதாநாயகி கேரக்டருக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கும். நடிப்பில் பல இடங்களில் பாக்யராஜையும் தாண்டி வெளுத்துவாங்கிவிடுவார்கள். அப்படித்தான் கொடுப்பார் பாக்யராஜ். ‘அவசர போலீஸ் 100’ படத்தில் கவுதமியும் சில்க் ஸ்மிதாவும் நடித்திருப்பார்கள். பல இடங்களில், முதல் மார்க் வாங்கி எல்லோரையும் வசீகரித்துவிடுவார் சில்க் ஸ்மிதா. டான்ஸ், நடிப்பு மட்டுமின்றி இந்தப் படத்தில் காமெடியிலும் கலகலக்க வைத்திருப்பார்.

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என்று பல மொழிகளிலும் ரவுண்டு வந்தார். 1960-ம் ஆண்டு பிறந்த விஜயலட்சுமி என்கிற சில்க் ஸ்மிதா, 17 வருடங்களில் நானூறு படங்களுக்கும் மேல் நடித்ததே சாதனைதான்.

1996 செப்டம்பர் மாதத்தில் ஒருநாள், சென்னை ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள சூப்பர் மார்க்கெட்டில் இருந்தபோது, யாரோ என் காலில் ‘ட்ராலி’யை ஏற்றிவிட, சுள்ளென்று வலி. திரும்பிப் பார்த்தால், பதறிப் போன முகத்துடன் ‘மன்னிச்சிருங்க மன்னிச்சிருங்க’ என்று பத்து ‘மன்னிப்புகள்’ கேட்டுவிட்டு, அத்துடன் நிற்காமல், பத்தடி சென்றவர் திரும்பி வந்து, ‘மன்னிச்சிருங்க... வலிக்குதா... மன்னிச்சிருங்க’ என்று சொன்ன சாட்சாத் சில்க் ஸ்மிதா தான்!

அவரை முதலும் கடைசியுமாக நான் பார்த்தது அப்போதுதான்! ‘ஒரு சின்னவிஷயத்துக்குக் கூட இவ்வளவு பதற்றமும் பண்பும் மரியாதையும் அன்பும் மன்னிப்பும்’ என இருக்கிற சக மனுஷி. இயல்பான போலித்தனமில்லாத அன்புப்பெண்.

இதையடுத்த ஆறேழு நாட்கள் கழித்து, அந்தச் சேதி மெல்ல மெல்ல தமிழகம் முழுவதும் பரவியது... ‘சிலுக்கு செத்துட்டாங்களாம்பா’ என்று! காற்றில் இந்தச் சேதி கலந்ததும், அந்தக் காற்று கூட ஒருநொடி, அதிர்ந்து நின்றிருக்கும்; அஞ்சலி செலுத்தியிருக்கும்.

1996 செப்டம்பர் 23-ம் தேதி காலமானார் சில்க் ஸ்மிதா. ஆனால், இத்தனை ஆண்டுகளுக்குப் பின்னரும் இன்னும் எத்தனை ஆண்டுகளானாலும் சில்க் ஸ்மிதாவின் நினைவில் இருந்து மீளமாட்டார்கள் ரசிகர்கள்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in