சர்ச்சைப் பேச்சு: மன்னிப்புக் கேட்டார் நடிகை

நடிகை ஸ்வேதா திவாரி
நடிகை ஸ்வேதா திவாரி

“தனது பேச்சு யார் மனதையும் புண்படுத்தி இருந்தால் அதற்காக மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன்” என்று நடிகை ஸ்வேதா திவாரி கூறியுள்ளார்.

பிரபல இந்தி நடிகை ஸ்வேதா திவாரி. இப்போது ‘ஷோ ஸ்டாப்பர்’ என்ற வெப் தொடரில் நடித்துள்ளார். இதில், ரோகித் ராய், திகன்கனா சூரியவன்சி, சவுரப் ராஜ் ஜெயின் உட்பட பலர் நடிக்கின்றனர். சவுரப் ராஜ் ஜெயின் மகாபாரத டிவி தொடரில் கிருஷ்ணராக நடித்து புகழ்பெற்றவர். இந்நிலையில் ‘ஷோ ஸ்டாப்பர்’ என்ற வெப் தொடரின் பத்திரிகையாளர் சந்திப்பு, மத்திய பிரதேச மாநிலம் போபாலில் நடந்தது. அப்போது, நடிகை ஸ்வேதா, கடவுளைத் தொடர்புபடுத்தி நகைச்சுவைக்காக தெரிவித்த கருத்து சர்ச்சையானது.

ஸ்வேதா திவாரி
ஸ்வேதா திவாரி

அம்மாநில உள்துறை அமைச்சர் நரோட்டம் மிஸ்ரா, நடிகை மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். இதற்கிடையே போபாலைச் சேர்ந்த சோனு பிரஜாபதி என்பவர், மத உணர்வுகளைப் புண்படுத்திவிட்டதாக நடிகை மீது புகார் கொடுத்தார். அதன் அடிப்படையில் வழக்குப் பதிவுசெய்துள்ள போலீஸார், நடிகைக்கு சம்மன் அனுப்ப உள்ளனர்.

இந்நிலையில் தனது பேச்சு சர்ச்சையானதை அடுத்து, நடிகை ஸ்வேதா திவாரி மன்னிப்புக் கேட்டு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “சவுரப் ராஜ் ஜெயின் நடித்த ஆன்மீக கேரக்டரை ஓர் உதாரணத்துக்காகவே பயன்படுத்தினேன். அது தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டு விட்டது. இது எனக்கு வருத்ததை ஏற்படுத்தி இருக்கிறது. நானும் கடவுளை நம்புகிறவள் என்ற முறையில், உணர்வுகளைப் புண்படுத்தும் எந்த விஷயத்தையும் வேண்டுமென்றோ, தற்செயலாகவோ செய்யவில்லை. அப்படி நான் கூறியது யார் மனதையும் புண்படுத்தி இருந்தால், அதற்காக மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in