‘உடலில்தான் பிரச்சினை... உள்ளத்தில் உற்சாகம்’ - நம்பிக்கை பகிரும் ஸ்ருதி ஹாசன்

‘உடலில்தான் பிரச்சினை... உள்ளத்தில் உற்சாகம்’ - நம்பிக்கை பகிரும் ஸ்ருதி ஹாசன்

நடிகை ஸ்ருதி ஹாசன் தன் உடலில் இருக்கும் ஹார்மோனல் பிரச்சினைகள் பற்றியும், அதனால் மனதளவில் ஏற்பட்ட பாதிப்புகளை எதிர்கொண்ட விதம் குறித்தும் நம்பிக்கையூட்டும் விதத்தில் பேசியிருக்கிறார்.

திருமணம், காதல், தொழில் சார்ந்த பிரச்சினைகள் என எதைப் பற்றியும் வெளிப்படையாகவும் தைரியமாகவும் கருத்துகளைப் பகிர்ந்துகொள்ள ஸ்ருதி ஹாசன் தவறுவதே இல்லை. அந்த வகையில் தன்னுடைய ஹார்மோனல் பிரச்சினைகள் பற்றி தனது சமூகவலைதளப் பதிவில் மனம் திறந்துள்ளார்.

ஜிம்மில் கடினமான உடற்பயிற்சிகளை மேற்கொள்ளும் காணொலியைப் பகிர்ந்திருக்கும் ஸ்ருதி ஹாசன், அந்தப் பதிவில் 'என்னுடன் இணைந்து நீங்களும் உடற்பயிற்சி செய்யுங்கள்! ஏனென்றால், நான் மிகவும் மோசமான PCOS மற்றும் என்டோமெட்ரியாஸ்ஸினால் பாதிக்கப்பட்டேன். இது போன்ற சமநிலையற்ற தன்மை மற்றும் உடலில் ஏற்படும் வளர்சிதை மாற்றங்கள் எந்த அளவுக்குச் சமாளிக்க கடினமான விஷயம் என்பது பெண்களுக்கு நன்றாகவே தெரியும்.

ஆனால், இது ஒரு போராட்டம் என எடுத்துக்கொள்வதற்குப் பதிலாக, என் உடலின் இயல்பு இது என எடுத்துக்கொண்டு அதைச் சரி செய்துகொண்டிருக்கிறேன். இந்தப் பிரச்சினைகள் வந்ததால்தான் சரியான உணவு, நேரத்துக்குத் தூக்கம், உடற்பயிற்சிகள் என எல்லாவற்றையும் நான் மகிழ்ச்சியாகச் செய்துகொண்டிருக்கிறேன்.

என்னுடைய உடல் வேண்டுமானால் இப்போது சரியில்லாமல் இருக்கலாம். ஆனால், என்னுடைய மனது மகிழ்ச்சியாக இருக்கிறது. உடலைச் சரியாக வைத்துக்கொள்ளுங்கள், மகிழ்ச்சியாக இருங்கள். அந்த மகிழ்ச்சி உங்கள் ஹார்மோனையும் சரியானபடி பார்த்துக்கொள்ளும்’ என்று கூறியிருக்கிறார்.

மேலும், ‘இதை நான் சொல்வது ஒரு பிரசங்கம் போலகூட இருக்கலாம். ஆனால், மற்றவர்கள் என்னைப் பற்றி எந்தவொரு முன்முடிவையும் எடுக்க செல்ல வழி கொடுக்காமல், இந்தச் சவாலான பயணத்தை அப்படியே ஏற்றுக்கொண்டிருக்கிறேன். அதனால், இதை உங்கள் அனைவருடனும் பகிர்ந்துகொள்வதில் எனக்கு மகிழ்ச்சி' என்றும் குறிப்பிட்டிருக்கிறார் ஸ்ருதி ஹாசன்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in