’என் திரை வாழ்க்கை மாயாஜாலமிக்கது’: சினிமாவில் 13 வருடங்களை நிறைவு செய்த ஸ்ருதி மகிழ்ச்சி

’என் திரை வாழ்க்கை மாயாஜாலமிக்கது’: சினிமாவில் 13 வருடங்களை நிறைவு செய்த ஸ்ருதி மகிழ்ச்சி

நடிகை ஸ்ருதிஹாசன் திரையுலகில் 13 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளதை அடுத்து ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

நடிகை ஸ்ருதிஹாசன், கமல்ஹாசனின் ‘ஹே ராம்’ படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானாலும், 2009 ம் ஆண்டில் இம்ரான் கான் ஜோடியாக 'லக்' எனும் இந்தி படத்தில் நாயகியாக அறிமுகமானார். தொடர்ந்து தெலுங்கு மற்றும் இந்தி படங்களில் நடித்த அவர், 'ஏழாம் அறிவு' மூலம் தமிழிலும் அறிமுகமானார். இதைஅடுத்து '3', 'பூஜை', 'புலி', 'வேதாளம்', 'சிங்கம் 3', 'லாபம்' ஆகியபடங்களில் நடித்திருக்கும் இவர் திரையுலகில் பணியாற்ற தொடங்கி பதிமூன்று ஆண்டை நிறைவு செய்திருக்கிறார். இதற்காக தன்னுடைய சமூக வலைதளப்பக்கத்தில் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது:

திரையுலகில் பதிமூன்று ஆண்டுகளை நிறைவு செய்திருக்கிறேன். படப்பிடிப்பு தளத்தில் இருந்துகொண்டே இந்த பதிமூன்று ஆண்டு நிறைவை உற்சாகத்துடன் கொண்டாடுகிறேன். என் திரையுலக வாழ்க்கை ஒரு மாயாஜாலமிக்கது. திரைப்படத்தில் நடிப்பேன் என்று ஒருபோதும் நினைக்கவில்லை. ஏதேனும் எனக்கு விருப்பமான துறையில் பணியாற்ற வேண்டும் என்பதுதான் என் எண்ணமாக இருந்தது. அதே நேரம் எனக்கு விருப்பமான வேலையை எப்படி நேசிக்க வேண்டும் என்பதையும் கற்றுக் கொண்டேன்.

சினிமா, என் வாழ்க்கையில் மிகப்பெரிய மகிழ்ச்சியாக மாறி இருக்கிறது. வெற்றி, தோல்விகளை எப்படி எதிர்கொள்வது என்பதையும், நம்பிக்கையுடன் எப்படி பணியாற்றுவது என்பதையும், கதைகளை கேட்பதிலும், அதனை தேர்ந்தெடுப்பதிலும் அதிலுள்ள நேர்மறையான விஷயங்களை பாராட்டுவது எப்படி என்பதனையும் கற்றுக் கொண்டேன்.

எனக்கு கிடைத்து வரும் அன்பு மற்றும் பாராட்டிற்கு நான் மிகவும் நன்றி உள்ளவளாக இருக்கிறேன். பதிமூன்று ஆண்டுகளாக என் மீது மாறாத அன்பு காட்டி வரும் அனைவருக்கும் பணிவான நன்றி. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

நடிகை ஸ்ருதிஹாசன் தற்போது பிரபாஸின் 'சலார்', சிரஞ்சீவி நடிக்கும் 'வால்டர் வீரய்யா', பாலகிருஷ்ணாவின் பெயரிடப்படாத படங்களில் நடித்து வருகிறார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in