
பான் இந்தியா படத்தில் அரசக் குடும்பத்தைச் சேர்ந்த பெண்ணாக ஸ்ரேயா நடிக்கிறார்.
தமிழில், மழை, ரஜினியின் சிவாஜி, விஜய்யின் அழகிய தமிழ்மகன், விக்ரமின் கந்தசாமி உட்பட பல படங்களில் நடித்தவர் ஸ்ரேயா. தெலுங்கு, இந்தியிலும் நடித்துள்ள ஸ்ரேயா, 2018 -ம் ஆண்டு ரஷ்யாவை சேர்ந்த தொழிலதிபர் ஆண்ட்ரீ கோஸ்சீவ் (Andrei Koscheev) என்பவரை காதலித்து, திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ராதா என்ற பெண் குழந்தை உள்ளது.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு இவர், ராஜமவுலி இயக்கியுள்ள ’ஆர்ஆர்ஆர்’ படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இந்நிலையில், கன்னடத்தில் உருவாகும் பான் இந்தியா படமான ’கப்ஸா’வில் அவர் ஒப்பந்தமாகி இருக்கிறார். உபேந்திரா ஹீரோவாக நடிக்கும் இந்தப் படத்தில் சுதீப் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். சந்துரு இயக்கும் இந்தப் படம், தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாள மொழிகளில் உருவாகிறது. பீரியட் படமான இதில் 2 ஹீரோயின்கள் நடிக்கிறார்கள். ஒருவர் ஸ்ரேயா.
இந்தப் படத்தில் நடிப்பது பற்றி ஸ்ரேயா, ’எனது திறமையை வெளிப்படுத்தும் கேரக்டர்கள் கிடைத்து வருவது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்தப் படத்தில் மதுமதி என்ற அரசக் குடும்பத்தைச் சேர்ந்த பெண்ணாக நடிக்கிறேன். என் கேரக்டர் சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது’ என்று தெரிவித்துள்ளார்.
‘இந்த கேரக்டருக்கு ஸ்ரேயாதான் சரியாக இருப்பார் என்பதால் அவரை நடிக்க வைத்துள்ளோம். அவர் காட்சிகள் தொடர்பான ஷூட்டிங் நடந்து வருகிறது. மற்றொரு ஹீரோயின் ஏப்ரல் மாதம் பங்கேற்கிறார். அவர் யார் என்பதை அப்போது சொல்கிறோம். இன்னும் 30-35 நாட்கள் மட்டுமே படப்பிடிப்பு பாக்கி இருக்கிறது’ என்றார் இயக்குநர் சந்துரு.