அதிர்ச்சி... 'ஜெயிலர்' பட நடிகர் திடீர் கைது!
'ஜெயிலர்' பட வில்லன் நடிகர் விநாயகன் மீண்டும் சர்ச்சையில் சிக்கி கைதாகியுள்ளது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தன்னுடைய திறமையான நடிப்பிற்காக பெயர் பெற்றவர் நடிகர் விநாயகன். தமிழில் கடந்த 2006ம் ஆண்டு 'திமிரு' படத்தில் அறிமுகமானார். சமீபத்தில் ரஜினிகாந்த் நடித்த 'ஜெயிலர்' படத்தில் மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். மேலும், மலையாளத்தில் வெளியான 'கம்மாட்டிப்பாடம்' படத்துக்காக மாநில அளவில் சிறந்த நடிகர் விருதை வென்றுள்ளார். இந்த நிலையில், கேரள போலீஸார் அவரை அதிரடியாக கைது செய்துள்ளனர். மதுபோதையில் காவல் நிலையத்தில் ரகளையில் ஈடுபட்ட காரணத்துக்காக அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

விநாயகன் வசித்து வரக்கூடிய அடுக்குமாடி குடியிருப்பில் பிரச்சினை செய்ததாக எழுந்த குற்றச்சாட்டு தொடர்பாக காவல் நிலையத்தில் ஆஜராகுமாறு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. இதற்காக, அவர் காவல் நிலையம் வந்துள்ளார். அப்போது அவர் காவல் நிலையத்தில் மது போதையில் ரகளையில் ஈடுபட்டுள்ளார். இதைத் தொடர்ந்து அவரை போலீஸார் கைது செய்துள்ளனர். இந்த சூழலில் அவர் மருத்துவ பரிசோதனைக்காக காவல் நிலையத்துக்கு அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார்.

இந்த சர்ச்சை மட்டுமல்லாது கடந்த 2019ம் ஆண்டில் லோக்சபா தேர்தலில் பாஜகவுக்கு எதிராக பேசியது, தலித் பெண் சமூக செயற்பாட்டாளர் ஒருவரை தொலைபேசியில் அவதூறாக விமர்சித்ததாக கைது செய்யப்பட்டு பின்னர் உடனடியாக ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டது. மீ டூ விவகாரத்தில் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் சர்ச்சையான கருத்துகளைத் தெரிவித்தது, உம்மன் சாண்டி மறைவின் போது சர்ச்சை கருத்தைத் தெரிவித்தது எனத் தொடர்ந்து சர்ச்சை நாயகனாகவே வலம் வரும் விநாயகன் தற்போது மீண்டும் குடிபோதையில் கைதாகியிருப்பது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.