‘நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்’ படத்தில் வடிவேலுவுடன் ஷிவானி!

‘நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்’ படத்தில் வடிவேலுவுடன் ஷிவானி!
வடிவேலு இணையும் ஷிவானி

நடிகர் வடிவேலுவின் ‘நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்’ படத்தில் நடிகை ஷிவானி இணைந்துள்ளார்.

சினிமாவில் சில வருட இடைவெளிக்கு பிறகு ‘வைகைப்புயல்’ வடிவேலு திரும்ப நடிக்க வருகிறார். தற்போது சுராஜ் இயக்கத்தில் ‘நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்’ படம் மூலம் கதாநாயகனாக நடித்து கொண்டிருக்கிறார். லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். படத்தில் ஷிவானி, ரெடின் கிங்க்ஸ்லே என பல நட்சத்திர பட்டாளங்கள் நடிக்கின்றன.

முழுக்க முழுக்க நகைச்சுவையை மையப்படுத்தி எடுக்கப்பட்டிருக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது சென்னையில் நடந்து கொண்டிருக்கிறது. இந்த படத்தில் ஷிவானி நாராயணனும் நடிக்கிறார் என முன்பு தகவல் வந்து கொண்டிருந்த நிலையில் அதனை ஷிவானி தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்து உறுதிப்படுத்தியுள்ளார்.

அதில் ஷிவானி, ‘இவ்வளவு நாட்கள் வடிவேலு அவர்களின் மீம்ஸ் ட்ரோல் படங்களை பார்த்து மகிழ்ந்திருக்கிறேன். இப்போது அவருடனே திரையில் ஒன்றாக நடிக்க இருக்கிறேன். ‘நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்’ படத்திற்காக லைகா நிறுவன தயாரிப்பில் வடிவேலு சாருடன் இணைந்து நடிப்பதில் மகிழ்ச்சி’ என வடிவேலுவுடன் இருக்கும்படியான புகைப்படத்தை ஷிவானி பகிர்ந்துள்ளார். ஷிவானியின் இந்த பதிவுக்கு ரசிகர்கள் பலரும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

பிக்பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியேறியதும் மீண்டும் சீரியல் பக்கம் திரும்பாமல் படங்களில் நடிப்பதை முழு கவனம் செலுத்தி வருகிறார் ஷிவானி. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசனின் ‘விக்ரம்’ படத்தில் விஜய்சேதுபதியின் மூன்று ஜோடிகளில் ஒருவராக இவரும் இருக்கிறார். இதனையடுத்து, பொன்ராம் இயக்கும் விஜய் சேதுபதியின் படத்தில் போலீஸ் கதாப்பாத்திரத்தில் ஷிவானி நடிக்கிறார்.

இப்போது ‘நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்’ படத்திலும் இருக்கிறார். இந்த படத்தில் வடிவேலுவுக்கு ஜோடி யாரும் இல்லை என சொல்லப்படும் நிலையில் ஷிவானியின் கதாப்பாத்திரம் குறித்து எதிர்ப்பார்ப்பில் ரசிகர்கள் இருக்கிறார்கள். இந்த படத்தில் நடிகர் வடிவேலு சந்தோஷ் நாராயணன் இசையில் பாடியும் இருக்கிறார். அதற்கான வீடியோவை நேற்று சந்தோஷ் நாராயணன் தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார்.

’நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்’ தவிர மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதய்நிதி நடிக்கும் படம் மற்றும் நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் படத்திலும் நடிகர் வடிவேலு நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்தான அதிகாரப்பூர்வமான அறிவிப்பு விரைவில் வரும் என எதிர்ப்பார்க்கலாம்.

Related Stories

No stories found.