சிவாஜியின் ‘தெய்வமகன்’ பார்த்து ‘சங்கர் குரு’ எடுத்த ராஜ்குமார்!

- கன்னடப் படத்துக்கே இன்ஸ்பிரேஷனாக அமைந்த சிவாஜி படம்
கன்னட ‘சங்கர் குரு’வும் ’திரிசூலம்’ திரைப்படமும்...
கன்னட ‘சங்கர் குரு’வும் ’திரிசூலம்’ திரைப்படமும்...

பிறமொழிப் படங்கள், பல மொழிகளில் எடுக்கப்பட்டு வெற்றிப் படங்களாக அமைந்திருக்கின்றன. எழுபதுகளின் இறுதி வரை, இந்திப் படங்களும் மற்ற மொழிப்படங்களும் தமிழில் ரீமேக் செய்யப்பட்டு, அந்தந்த மொழிகளில் எப்படி வெற்றி பெற்றதோ, அதே வெற்றியை தமிழிலும் பெற்றிருக்கின்றன.

சில படங்கள், இந்தியில் சரியாகப் போகாமல் கூட இருந்திருக்கலாம். ஆனால், அந்தப் படத்தின் மையக்கருவை மட்டும் எடுத்துக் கொண்டு, தமிழுக்குத் தகுந்தது போல, கதைகளில் சில திருத்தங்கள் செய்து, படத்தை எடுக்க, அவை மிகப்பெரிய வெற்றியைப் பெற்றிருக்கின்றன.

கே.விஸ்வநாத் தெலுங்கில் இயக்கிய படத்தை, தமிழில் கே.பாலசந்தர் செய்தார். அந்தப் படத்துக்கும் இந்தப் படத்துக்குமான ஏகப்பட்ட வித்தியாசங்களைப் புகுத்தினார் பாலசந்தர். பெரிய வெற்றியும் பெற்றது அந்தப் படம்... ‘மூன்று முடிச்சு’. அதேபோல், மலையாளத்தில் வந்த படத்தை தமிழில் ரீமேக் செய்தபோதும் நிறைய விஷயங்களை, தனக்கே உரிய ‘டச்’களாக செய்திருந்தார் பாலசந்தர். இதுவும் நல்லதொரு வெற்றியைப் பெற்றது. அந்தப் படம் ‘நிழல் நிஜமாகிறது’.

இப்படி பல படங்கள், ரீமேக் செய்யப்பட்டு மிகப்பெரிய வெற்றியைப் பெற்றிருக்கின்றன. அந்த வகையில், கன்னடத்தில் வந்த படத்தை, தமிழில் ரீமேக் செய்தார்கள். அந்தப் படம் கன்னடத்திலும் சூப்பர் வெற்றியைப் பெற்றது.

அதேபோல், தமிழில் இந்தப் படத்தை எடுக்க, இங்கேயும் மிகப்பெரிய வசூல் சாதனையை நிகழ்த்தியது. கன்னடப் படத்தின் பெயர் ‘சங்கர் குரு’. இந்தப் படத்தில், கன்னடத் திரையுலகின் சூப்பர்ஸ்டார் ராஜ்குமார் நடித்தார். அதுவும் ஒரு ராஜ்குமாரா? படத்தில் மொத்தம் மூன்று ராஜ்குமார்கள். அப்பா ராஜ்குமார், மகன்கள் ராஜ்குமார் என மொத்தம் மூன்று ராஜ்குமார் என கலக்கியிருந்தார்கள். ராஜ்குமாரின் நடிப்புக்காக அங்கே படம் கூடுதலாக ஓடி நல்ல வசூலைச் செய்தது.

மனைவி, மகன்களுடன் ராஜ்குமார்...
மனைவி, மகன்களுடன் ராஜ்குமார்...

தவிர, இந்தப் படத்தின் கதை மிக அருமையாகக் கட்டமைக்கப்பட்டிருந்தது. காட்சிகள், மிக அழகாக, பூமாலை போல் தொடுக்கப்பட்டிருந்தன. மூன்று ராஜ்குமார்களின் ஆரம்பக்காட்சிகளுமே அசத்தலாக இருந்தன. மூவருக்குமான சண்டைக் காட்சிகளும் ரசிக்கும் வகையில் இருந்தன. ஏற்கெனவே, 1971ம் ஆண்டு, ‘குலகெளரவா’ என்கிற கன்னடப்படத்தில், ராஜ்குமார் மூன்று வேடங்களில் நடித்து அசத்தினார். இதையடுத்து, 1978ம் ஆண்டு, மீண்டும் முன்று வேடத்தில் நடித்து தன் ரசிகர்களை குதூகலப்படுத்தினார். ‘குலகெளரவா’ போலவே, ‘சங்கர் குரு’ படமும் கன்னடத்தில் சக்கைப்போடு போட்டது.

சிவாஜியின் திரிசூலம்
சிவாஜியின் திரிசூலம்

‘சங்கர் குரு’ வெற்றியை அறிந்த சிவாஜி, தனது சிவாஜி புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் தயாரிப்பதற்காக ரீமேக் உரிமையை வாங்கினார். சிவாஜி, கே.ஆர்.விஜயா, ஸ்ரீப்ரியா, ரீனா, விகே.ராமசாமி, மேஜர் சுந்தர்ராஜன், நம்பியார், ராமதாஸ், தேங்காய் சீனிவாசன், ஜெய்கணேஷ், பிரேம் ஆனந்த் முதலானோர் நடித்த இந்தப் படம் ‘திரிசூலம்’ என்கிற பெயரில் 1979 தொடக்கத்தில் வெளியானது. கே.விஜயன் இயக்கினார்.

ராஜசேகர், சுமதி, சங்கர், குரு, மாலதி, புஷ்பா என கன்னடப் படமான ‘சங்கர் குரு’வின் கதாபாத்திரங்களின் பெயர்களைக் கூட தமிழில் மாற்றவில்லை. காட்சிகளில் சிறிய அளவில் மாற்றம் செய்திருந்தார்கள். ரீனா கேரக்டரை ரவுடிகள் கலாட்டா செய்வார்கள். அப்போது அங்கே வரும் ராஜ்குமார், சைக்கிளில் வருவது போல் காட்டியிருப்பார்கள். தமிழில் சிவாஜி, ஸ்கூட்டரில் வருவார். இப்படி சின்னச் சின்ன மாற்றங்களைச் செய்திருந்தார்கள்.

மற்றபடி, அப்பா ராஜ்குமார், தாடியும் மீசையுமாக வைத்திருப்பார். இங்கே தமிழில் சிவாஜியும் அதே ஸ்டைலில் தாடியும் மீசையும் வைத்திருப்பார். படத்தின் க்ளைமாக்ஸில், ஜீப்பில் இரண்டு ராஜ்குமார்களும் சேர்ந்து பாடிக்கொண்டு வருவார்கள். அதேபோல், தமிழிலும் ஜீப்பில் இரண்டு சிவாஜிகளும் ‘இரண்டு கைகள் நான்கானால்’ என பாடிக்கொண்டு வருவார்கள்.

கன்னட ‘சங்கர் குரு’வில் ராஜ்குமார்
கன்னட ‘சங்கர் குரு’வில் ராஜ்குமார்

அங்கே ராஜ்குமார் தன் ஆகச்சிறந்த நடிப்பை வழங்கியிருந்தார். ஆனால், நம் நடிகர்திலகம், மூன்று கதாபாத்திரங்களுக்கும் மூன்று விதமான மாடுலேஷன்கள், டயலாக் டெலிவரிகள், பாடி லாங்வேஜ்கள் என வெரைட்டி காட்டியிருப்பார். அதேபோல், ‘மலர்கொடுத்தேன் கைகுலுங்க வளையலிட்டேன்’ பாடலில் மெல்லிசை மன்னரும் டி.எம்.எஸ்.ஸும் கண்ணதாசனும் கலக்கியெடுத்திருந்தார்கள்.

”அம்மா சுமதி...” என்று கே.ஆர்.விஜயாவுடன் போனில் பேசும் சிவாஜி நம்மையெல்லாம் கலங்கடித்துவிடுவார். ‘குரு’ சிவாஜியின் குறும்புகள் ரசிக்கவைக்கும். ராஜ்குமார் மிகச்சிறந்த நடிகர்தான் என்றபோதும் சிவாஜிக்கு நிகரான நடிப்பை அவரிடம் எதிர்பார்க்கக் கூடாது. ‘சங்கர் குரு’வில் ராஜ்குமார் ஒருவிதத்தில் அசத்தினாரென்றால், ‘திரிசூலம்’ படத்தில், சிவாஜி தனக்கே உண்டான நடிப்பை அள்ளித் தந்தார்.

சிவாஜியின் 200-வது படமாக வந்த ‘திரிசூலம்’ மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. இலங்கையில் மூன்று தியேட்டர்களில் பல நாட்கள் ஓடி சாதனை படைத்தது. அதுவரை வெளியான படங்களின் வசூல் சாதனைகளை முறியடித்து, சினிமா இன்டஸ்ட்ரியில் மிகப் பிரம்மாண்டமான வெற்றியைப் பெற்றது ‘திரிசூலம்’.

கன்னடத்தில் ராஜ்குமார் நடித்த ‘சங்கர் குரு’ எனும் டைட்டிலில், ஏவி.எம். அர்ஜுனை வைத்து ‘சங்கர் குரு’ என்ற டைட்டிலில் படமெடுத்தது. ஆனாலும் அந்த ‘சங்கர் குரு’வுக்கும் இந்த ‘சங்கர் குரு’வுக்கும் தலைப்பைத் தவிர, வேறு எந்தத் தொடர்புமில்லை.

’சங்கர் குரு’ வில் ராஜ்குமார்
’சங்கர் குரு’ வில் ராஜ்குமார்

கன்னடத்தில் வெளியான ‘சங்கர் குரு’வும் சூப்பர் ஹிட். தமிழில் வெளியான ‘திரிசூலம்’ படமும் பிரம்மாண்டமான வெற்றி. இந்தப் படம் குறித்து எழுதும் போது இன்னொரு ஆச்சரியம்... கன்னடத்தில் சிறந்த கதாசிரியர் பாடலாசிரியர் என்று கொண்டாடப்பட்டவர் உதயசங்கர். இவர்தான் ‘சங்கர் குரு’ படத்தின் கதாசிரியர். இயக்குநர் சோமசேகர் படத்தை இயக்கினார். இந்தப் படத்தை ராஜ்குமாரின் மனைவி பர்வதம்மா தயாரித்தார்.

இதிலென்ன சுவாரஸ்யமும் ஆச்சரியமும்?

கன்னடத் திரையுலகில் மிகப்பிரபலமான கதாசிரியர் உதயசங்கர் ‘சங்கர் குரு’ கதையைத் தயார் செய்து படமாக்கினார். அவருக்கு ‘சங்கர் குரு’ மாதிரி ஒரு கதை பண்ணுவதற்கு, சிவாஜியின் ‘தெய்வமகன்’ படம்தான் மிகப்பெரிய இன்ஸ்பிரேஷனாக இருந்ததாம்.

’திரிசூலம்’ சிவாஜி - கே.ஆர்.விஜயா
’திரிசூலம்’ சிவாஜி - கே.ஆர்.விஜயா

‘’இப்படியொரு படம் மாதிரி நாமும் எடுத்தால் நன்றாக இருக்கும்’’ என்று ராஜ்குமாரும் தன் ஆசையை உதயசங்கரிடம் சொல்ல, ‘தெய்வமகன்’ பாதிப்பில் இருந்து உருவாக்கியதுதான் ‘சங்கர் குரு’ கன்னடப்படம். அதை சிவாஜியே ரசிக்கும் அளவுக்குப் பண்ணியதும், அதை ரீமேக் செய்யும் ஆசைக்கு வந்ததும்தான் கதாசிரியரின் கெட்டிக்காரத்தனமான திறமைக்கு உதாரணம்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in